சிறப்புக் கட்டுரைகள்

நவராத்திரி கொலுவின் தத்துவம்

17th Oct 2020 05:00 AM | - சோ. தெஷ்ணாமூர்த்தி

ADVERTISEMENT

 

தமிழ் மாதங்கள் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான். புரட்டாசி மாதத்தில் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு பிரசித்தி பெற்றதாகும்.

கொலு என்பது தெலுங்குச் சொல்லின் தமிழ் வடிவம். வீற்றிருத்தல் என்பது இதன் பொருளாகும். உலக உயிர்கள் அனைத்தும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ளப் பாடுபட வேண்டும் என்பதே கொலுவின் தத்துவமாகும். புரட்டாசி அமாவாசை அன்றே கொலு வைப்பதற்குரிய செயல்கள் தொடங்கப் படுகின்றன. 

வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அந்த அறையைச் சுத்தமாக்கிப் புனிதப் படுத்துகின்றனர். மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்கும், இடத்திற்கும் தகுந்தபடி அமைக்கின்றனர். சுத்தமான துணிகளால் அந்தப் படிகளைப் போற்றுகின்றனர்.

ADVERTISEMENT

முதல் படியின் நடுவில் கலசத்தை வைக்கின்றனர். ஒரு கலசத்தில் பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. அந்தக் கலசத்தில் தேவி பிரசன்னமாகிறாள். அப்போது முதல், நவராத்திரி வழிபாடும், கொலு வழிபாடும் தொடங்குகின்றன. கொலு வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கின்றனர். அவைகள் முளை விட்டுச் செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்று நம்புகின்றனர்.

முதல் படியில் ... 

புல், செடி, கொடி ஆகிய தாவர வகை பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். அதனுடன் ஒன்றி வாழ வேண்டும் என்பதை முதல் படியில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகள் உணர்த்துகின்றது.

இரண்டாம் படியில் ... 

சங்கால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்க வேண்டும். குறிப்பாக நத்தை பொம்மைகளை வைக்க வேண்டும். நத்தை பொம்மை போல நிதானமாக வாழ்க்கையை நடத்தி உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

மூன்றாம் படியில் ... 

எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை அவசியம் இருக்க வேண்டும். எத்தனை முறை உடைத்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போலவும், எத்தனை முறை கலைத்தாலும் எறும்புகள் ஒன்று சேர்ந்து சுறுசுறுப்பாக தங்கள் பணியைச் செய்வது போலவும், மனிதனுக்குத் திடமனப்பான்மையுடன் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை இந்த பொம்மைகள் உணர்த்தும்.

நான்காம் படியில் ... 

நண்டு, வண்டு பொம்மைகளை வைக்க வேண்டும். நண்டுகளும், வண்டுகளும் ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் குணம் கொண்டவைகள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்றுவதை இந்த பொம்மைகள் உணர்த்தும்.

ஐந்தாம் படியில் ... 

மிருகங்கள், பறவைகள் உள்ளிட்ட பொம்மைகளை வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவைகள் போலக் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருளாகும்.

ஆறாம் படியில் ... 

மனித பொம்மைகளை வைக்க வேண்டும். கீழே இருக்கும் கொடிய விலங்குகளின் குணங்களைத் தவிர்த்து,நல்ல விலங்குகளான பூச்சிகளிடம் இருந்தாவது நல்லதைக் கற்றுக் கொண்டு, மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்பதைத்தான் ஆறாவது படி உணர்த்துகிறது.

ஏழாவது படியில் ... 

முனிவர்கள் மற்றும் மகான்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மனித நிலையில் ஆன்மிக சாதனைகள் செய்து, மேல் நிலைக்கு உயர வேண்டும் என்பதை இது குறிக்கிறது.

எட்டாம் படியில் .... 

தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பொம்மைகளை வைக்க வேண்டும். ஆன்மிக நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து உயர் நிலையை அடைவதாக இது காட்டுகிறது.

ஒன்பதாவது படியில் ... 

பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் அவரவர்களின் தேவியர்களின் சிலைகளுடன் கூடிய சிலைகளையும் வைக்க வேண்டும். தேவநிலையில் இருப்பவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்துவதை இது காட்டுகிறது.

இந்த சிலைகளின் நடுவில் பெரிய அளவில் ஆதிபராசக்தி சிலையை வைக்க வேண்டும். தெய்வத்திடம் நிரந்தரமாக அடைக்கலம் புக வேண்டும் என்பதை இது குறிக்கிறது. குழந்தைகளிடம் பொம்மைகளைக் காட்டி மகிழ்ச்சிப்படுத்துவது மட்டும் கொலுவின் குறிக்கோள் இல்லை. இது போன்ற உயர்ந்த தத்துவங்களை அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதுதான் கொலு வைப்பதன் இரகசியம்.

கொலுவில் மண், மரம், பீங்கான், பிளாஸ்டிக் உலோகங்களால் செய்யப்பட்ட பொம்மைகளை வரிசை, வரிசையாக அடுக்கி வைக்கலாம். தெய்வ வடிவங்கள், புராண வடிவங்கள் உள்ளிட்ட தெய்வத் தொடர்பான பொம்மைகளை உயரத்திலுள்ள படிகளில் வைக்கலாம். முதற்படியில் மரப்பாவைகளை வைப்பது மரபு. மளிகை வணிகரின் பொம்மை ஒன்று தகுந்த மளிகைப் பொருட்களுடன் கொலுவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். இது நன்றாகச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்கான குறியீடு ஆகும். செயற்கை அருவி, ஆற்று நீரோட்டம், ரெயிலோட்டம் மற்றும் நிலக் கலர் தண்ணீருடன் கடலை ஏற்படுத்தி அதில் படகோட்டம் போன்ற தொழில் நுட்பங்களையும், அறிவியல் நுட்பங்களையும் பயன்படுத்தலாம். இவற்றை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ரசிப்பார்கள்.

அந்தக் காலத்தில் பெண்கள் வீட்டுக்கு வீடு நேரில் சென்று எங்கள் வீட்டில் கொலு வைத்திருக்கிறோம் எல்லோரும் வாங்க என்று அழைப்பார்கள். காலப்போக்கில் பெண்கள் வரவேற்பு இதழ்களை அச்சடித்து கொலுவிற்கான அழைப்பு விடுத்தனர். கலியுக காலமான தற்போது, அலைபேசியில் அழைக்கிறார்கள். வாட்ஸ் ஆப்பில் வரவேற்கிறார்கள். பேஸ்புக்கில் பேசி அழைப்பு விடுக்கின்றனர்.

கொலுவைக் காண வந்தவர்களுக்கு, வசதிக்கேற்றபடி பரிசுப் பொருட்களை வழங்கி, மஞ்சள், குங்குமம் கொடுத்து, இனிப்புகள் வழியனுப்புவர். சிலர் பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர். பக்தி நூல்களை சிலர் படிக்கின்றனர். சிலர் தேவி பாகவதம் முழுவதையும் படித்து மகிழ்கின்றனர். சுருங்கச் சொன்னால் வீடு கொலுவின் போது, சிறந்த கலைக்கூடமாகவும், கோயிலாகவும் மாறி விடுகிறது. 

விஜயதசமியன்று பால் நிவேதனம் படைத்து, தீபாராதனை காண்பித்து கொலு வைக்கப்படும் விழாவை முடித்து வைக்கின்றனர். படியிலுள்ள சில பொம்மைகளைப் படுக்க வைத்துக் கொலுவை முடிப்பது முறையாகும். அருமையான, பழமையான கொலுப் பொம்மைகளை மிக்க பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். அவை குடும்பத்தின் சொத்து. பரம்பரைக்  கருவூலம், கோயில்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தேவிகளைப் புதுப்புது கோலங்களில் அலங்கரித்துக் கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். இத்தகைய அலங்காரங்கள் மிகுந்த தேவிகளை கொலுவின் போதுதான் தரிசிக்க முடியும். பேரருளையும் பெற முடியும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT