சிறப்புக் கட்டுரைகள்

பசிக்கும் உலகும் பாழாகும் தானியங்களும்: காத்திருக்கிறது கடும் நெருக்கடி

16th Oct 2020 05:00 AM | கி.ராம்குமார்

ADVERTISEMENT

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்நோக்கப்பட்ட நோபல் பரிசு அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. பல்வேறு துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு பேசுபொருளாகி உள்ளது. உலகின் ஆகப் பெரும் சேவையாக மதிக்கப்பட்டு பசியால் வாடிய மக்களுக்கு உணவளித்ததற்காக ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டத்திற்கு நோபல் வழங்கப்பட்டது பலரின் வாழ்த்துகளைப் பெற்றுள்ளது. உணவு விநியோகம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றா என்கிற கேள்விக்கு ஆம் என்பதுதான் மிக நிச்சயமான பதிலாக இருக்கு முடியும்.

உலகின் ஏழை நாடுகள் பலவும் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் சிக்கியுள்ளன. அவர்களின் பக்கம் தன் பார்வையைத் திருப்பிய உலக உணவுத் திட்டம் கடந்த 1962 முதல் தனது சேவையின் மூலம்  83 நாடுகளில் உள்ள 91 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறது. அன்னமிட்ட அதன் செயலுக்கு நோபல் பரிசு என்பது சரியான அங்கீகாரம். உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்தாலும் மக்கள் இன்றும் வறுமையிலும் அதனால் ஏற்படும் பசியிலும் இருந்து மீள முடியாததற்குக் காரணம்தான் என்ன?

உலகில் உள்ள அனைவருக்கும் உணவு என்பது அடிப்படை உரிமை. ஆனால் இயல்பில் அத்தகைய நிலையைப் பெரும்பான்மையான மக்கள் இன்னும் அடையவில்லை என்னும் சோகத்தின் அடிப்படையில்தான் கடந்த 1945ஆம் ஆண்டு முதல் உலக உணவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

அக்டோபர் 16 ஆம் தேதி உலக உணவு நாளின் மூலம் 2030-க்குள் பட்டினியில்லா உலகம் என்ற திசை நோக்கி நடைபோட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக உணவு நாள் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக உணவின்றி மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவ உலகளாவிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

நடப்பாண்டு பசியில்லா உலகு எனும் கருப்பொருளில் நிலையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எளிதாக அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான நோக்கத்துடன் உலக உணவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

உணவு கிடைப்பதில் உலகெங்கும் சமநிலையற்ற தன்மை நிலவி வருவது பல்வேறு தரப்பு மக்களைப் பசியுடன் வாழும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. உலகில் சுமார் 81 கோடி போ் பசி மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் என்கிறது ஓா் ஆய்வு.

உணவு கிடைக்காமல் பட்டினியில் இறப்பவர்களில் பெண்களே பெரும்பான்மை பாதிப்பை சந்திக்கின்றனர். உலகில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவா்களில் 60 சதவீதம் போ் பெண்கள் என்கிறது மற்றோர் ஆய்வு. இன்னும் பல செய்திகள் உணவுப் பற்றாக்குறையின் பாதிப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

உலகம் முழுவதும் 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு போதிய உணவு கிடைக்காததே காரணம் என்பது உணவின் விநியோகத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும். மொத்த உணவு உற்பத்தியில் 3-இல் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது. காசநோய், எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட கொடிய நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், பசியால் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி.

நலமாக ஒருவர் வாழ அவருக்கு நாள்தோறும் உணவின் மூலம் 2,100 கலோரி ஆற்றல் தேவை என ஐ.நா. வரையறுத்துள்ளது. அன்றாட உணவில் ஊட்டச்சத்து எவ்வளவு கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலேயே ஒருவா் வறுமையில் வாடுகிறாரா எனக் கணக்கிடப்படுகிறது. உலகின் வளர்ந்த நாடுகளிலும்கூட இந்த உணவு சமநிலை மகிழ்ச்சி தரும் விதமாக இல்லை என்பதே உண்மை.

ஊட்டச்சத்து என்பது இந்த சரிவிகித உணவைக் கொண்டது. இந்தியாவில் 7.5% குழந்தைகள் ஊட்டசத்து குறைபாட்டினால் அவதியுறுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம், உலகம் முழுவதும் பெரும்பாலும் 10 முதல் 19 வயதுக்குள்பட்டவர்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் அவதியுறுவதாகக் குறிப்பிடுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் மாதந்தோறும் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவா்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, கைகால்கள் மெலிதல், வயிறு ஒட்டிப் போதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டில் 4.7 லட்சம் சிறுவா்கள் இத்தகைய ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனா்.

இந்த ஆண்டில், அந்த எண்ணிக்கையைவிட கூடுதலாக 67 லட்சம் சிறுவா்கள் இந்த நிலைக்கு ஆளாவார்கள் என எச்சரிக்கும் ஐ.நா., ஊட்டச்சத்து இல்லாமல் கைகால்கள் மெலிதல், வயிறு ஒட்டிப் போதல் ஆகிய பிரச்னைகளைச் சந்திக்கும் சிறுவா்களுக்கு, அது உடல் அளவிலும், மனதளவிலும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நம் நாட்டில் தினந்தோறும் 30 கோடி போ் இரவு உணவின்றியே உறங்கச் செல்வதாகத் தெரிவிக்கும் கணக்கீடு, சுமார் 18 கோடி போ் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்வதாகவும் தெரிவிக்கிறது.

இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞா்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது. உலக அளவில் 8-இல் ஒருவா் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் 19 கோடி போ் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உணவு - வேளாண் நிறுவனம் தெரிவிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவா்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வளரும் நாடுகளைச் சோ்ந்தவா்கள். உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் பதிவாகும் பட்டினியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சமகாலத்தில் நிலவி வரும் கோர முகத்தை நமக்கு காட்டுகின்றன.

சாதாரண காலத்தில் உணவு வீணாவது ஒருபுறம் இருந்தாலும் பேரிடர் காலங்களில் மக்களிடம் சென்றுசேர வேண்டிய உணவு தானியங்கள் பயனற்று போவது அரசுகளின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகின்றன.

சமகாலத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பசியாலும், பட்டினியாலும் உயிரிழந்து கொண்டிருந்தபோது இந்திய உணவுபொருள் கழகத்தின் கிடங்குகளில் மட்டும் 1,550 டன் உணவு தானியங்கள் வீணாகியுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த மே மாதம் சுமார் 26 டன் உணவு தானியங்களும், ஜூன் மாதத்தில் 1,453 டன் உணவு தானியங்களும் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வீணான உணவு தானியங்களின் அளவு 41 மற்றும் 51 டன்களாக இருந்துள்ளது. நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என பேசப்படும் நிலையில் உணவுக் கிடங்குகளில் புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் வழங்கிய உணவு தானியங்களின் அளவு மட்டும் 1,550 டன்!

அண்மையில் ஐ.நா.வின் சில அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலைமை அறிக்கையில், கரோனா- கொவைட் 19 நோய் பரவலால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக 2020ஆம் ஆண்டில் உலகளவில் பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கையில் 8.3 கோடி பேர் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 1,50,000 டன் அளவு உணவு வீணாக்கப்படுகிறது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 2030ஆம் ஆண்டுக்குள் உணவு தானியங்கள் வீணாவதைத் தடுப்பது குறித்த திட்டமிடலுடன் செயல்படுவது சற்று ஆறுதலளித்தாலும் அவற்றின் இலக்குகள் உறுதியுடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிற வலியுறுத்தலும் அவசியப்படுகிறது.

உணவுப் பொருள் மக்களைச் சென்றடைவதில் உள்ள பிரச்னைதான் என்ன? உற்பத்திக் குறைபாடா? அல்லது விநியோகச் சிக்கல்களா?


உணவு கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர்வது போலவே உணவுப் பொருள் உற்பத்தியும் உயர்ந்துதான் வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

நடப்பாண்டில் உணவுதானிய விளைச்சல் மற்றுமொரு புதிய வரலாற்று உச்சத்தை எட்டும் என கோ் ரேட்டிங்ஸ் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் நடப்பு 2020-21-ஆம் காரீப் பருவத்தில் மொத்த உணவு தானிய உற்பத்தி 14.45 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிட்டிருந்தது. இது, கடந்த ஐந்தாண்டுகளில் காணப்பட்ட சராசரி உற்பத்தி அளவைக் காட்டிலும் 98.30 லட்சம் டன் அதிகமாகும். அதேபோன்று முந்தைய ஆண்டின் உணவு தானிய உற்பத்தி அளவான 14.34 கோடி டன்னைக் காட்டிலும் 11.2 லட்சம் டன் அல்லது 0.8 சதவீதம் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரீப் பருவ பம்பா் விளைச்சலின் பயனாக, நடப்பாண்டில் ஒட்டுமொத்த உணவுதானிய உற்பத்தி 30 கோடி டன் என்ற மற்றொரு வரலாற்று உச்சத்தை தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் நமது நாட்டின் உணவு தானிய உற்பத்தி நடப்பு பயிர் பருவத்தில் 29.56 கோடி டன்னைத் தொடும் எனவும் இது, முந்தைய ஆண்டின் உற்பத்தியைக் (28.52 கோடி டன்) காட்டிலும் 1.04 கோடி டன் அதிகமாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பேரிடர் உலகின் எதிர்காலப் பக்கங்களை மாற்றி எழுதியுள்ளது. பொருளாதார சமநிலை மட்டுமல்லாது அன்றாட வாழ்வின் பகுதியிலும் அது ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது.

இதனையொட்டி ஐநாவின் உணவு திட்டத் தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்த கருத்து முக்கியமானது. “கரோனா நெருக்கடியால் உலகம் முழுவதும் 27 கோடி மக்கள் பட்டினியின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களில் 3 கோடி பேர் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர்” என கடந்த செப்டம்பர் மாதம் அவர் தெரிவித்திருந்தார்.

உலகளவில் சுமார் 270 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ள நிலையில் இந்த ஆண்டு அது 138 மில்லியனாக உயர உள்ளது. உலக உணவுத் திட்டத்திலிருந்து அவர்களுக்கு உதவி கிடைக்காவிட்டால் அவர்கள் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

அதேசமயம் கரோனா தொற்று பாதிப்பு நெருக்கடி நேரத்தில் அமெரிக்காவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 19% அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஐ.நா.,   “அசாதாரண நிலையில் அதிக செல்வம் உள்ளவர்கள் வறுமையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு 1.28 லட்சம் சிறுவா்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000 சிறுவா்கள் பட்டினியால் உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டில் மட்டும் 1.28 லட்சம் சிறுவா்கள் உணவு இல்லாமல் பலியாகும் அபாயம் உள்ளது.

தற்போது கரோனா நெருக்கடி காரணமாக ஊட்டச்சத்துப் பற்றாக்குறை பிரச்னை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், அது நீண்டகால பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு எளிதில் கிடைக்கவேண்டிய உணவுப் பொருள்கள் அல்லது தானியங்களை அரசு உறுதி செய்ய வேண்டும். அடிப்படை உணவுப் பட்டியலில் உள்ள பொருள்களை நீக்குவதன் மூலம் அதன் விலையேற்றத்திற்கு வழிவகுத்து மேலும் சிக்கலான ஒரு சூழ்நிலையை மேற்கொள்வது மக்களின் வறுமை நிலைக்கு வழிகோலும். கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன அடிப்படை உணவுப் பொருள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. அதேபோல் உணவுப் பொருள் உற்பத்தி, பகிர்வு மற்றும் நுகர்வு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கான நடவடிக்கைகள்  பசியில்லா உலகை நோக்கிய பயணத்திற்கு உதவும். 

உலகம் தனக்கான தேவையின் அளவைக் கொண்டிருந்தாலும், அவை குவிந்துள்ள இடங்களில் இருந்து அவற்றை மீட்காமல் அனைவருக்குமான இலக்கை அடைய முடியாது. உலக உணவு நாளில் அதற்கான சபதம் ஏற்று பசியில்லா உலகை உருவாக்குவோம்.

[அக். 16 - பன்னாட்டு உணவு நாள்]

Tags : World food day 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT