சிறப்புக் கட்டுரைகள்

கனவாகவே உள்ள கலாமின் 2020 கனவு

ஜெ. முருகேசன்

ராமேசுவரம் தீவில் பிறந்து உலகம் போற்றும் நாயகனாக வலம் வந்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பற்றி யாரும் சொல்லத் தேவையில்லை. எனினும், அக்டோபர் 15 ஆம் தேதி அவரது பிறந்த தினத்தன்று அவரை நினைவுகூராமல் இருக்க முடியுமா?

ராமேசுவரத்தில் பிறந்த ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தனது அறிவாற்றல் மூலம் வளர்ந்து இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக உயர்ந்தார். விஞ்ஞானியாகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கியதுடன் தனக்கான வாழ்வை நாட்டுக்காகவும், நாடு வளம் பெற மாணாக்கர்களை உருவாக்குவதிலும் முக்கியத்துவம் அறிந்து செயல்பட்டார். 

2015 ஜூலை 27 ஆம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது மாலை 6.30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு மறைந்தார். 

அப்துல்கலாம் நினைவிடம்

இந்நிலையில், அவரது பிறந்த தினத்தையொட்டி, புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சி.விஜயராகவன் கலாமின் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

'கலாம் என்ற மனிதர் ஒரு பிரமாண்டம். அவருக்கு இணையாக யாருமில்லை. நான் அவரை குருவாக வைத்து செயல்பட்டு வருகிறேன். நாட்டுக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொள்ள தேடுதல் முயற்சியை மேற்கொண்டு வந்தார். நாட்டின் காவலராக இருக்கக்கூடிய குழந்தைகளை நல் வழிகாட்டுதலில் வளர்க்க வேண்டும். நாட்டில் மூன்றில் ஒரு பங்கினர் இளைஞர்கள். அவர்களுக்கு வழிகாட்ட நல்ல தலைவர்கள் வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தார்.

டாக்டர் சி விஜயபாஸ்கரன்

புற்றுநோய் குணப்படுத்த முடியாத நோயா என கலாம் கேட்ட போது, நிச்சயம் குணப்படுத்த முடியும்,  புற்றுநோய் என்பது நோய் அல்ல. குறைபாடுகள், மன அழுத்தம் காரணமாக புற்றுநோயாக உருவாகிறது என்று கூறினேன். இதனை சரி செய்ய முடியும் என்பதை கலாமிடம் நேரடியாக நிரூபிக்கவும் முடிந்தது. இதனை என்றென்றும் நினைவு கூர்வேன். கலாமின் 2020 கனவு, கனவாகவே உள்ளது. இதை நனவாக மாற்ற வேண்டும்' என்றார். 

அப்துல்கலாம் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளன்று, ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் சென்று மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கலாம் தேசிய நினைவிடத்தைப் பார்க்காமல் செல்வது கிடையாது. அவரது நினைவிடத்தை மார்ச் 20 ஆம் தேதி வரை 90 லட்சம் பேர் பார்த்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் நினைவிடம்

ராமேசுவரம் பள்ளிவாசல் பகுதியில் உள்ள அப்துல்கலாம் இல்லம் வழியாகச் செல்லும் பொதுமக்கள் கலாமின் நினைவுகளோடு பயணிப்பதை பார்க்க முடிகிறது. நாட்டிற்காக உழைத்த கலாமிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தால் மக்கள் தனிமரியாதை கொடுப்பதை தங்களின் கடமையாகக் கருதுகின்றனர்.

இன்று அப்துல்காமின் 89 ஆவது பிறந்த நாள். அவரது குடும்பத்தினர், படித்த பள்ளி, கலாம் தேசிய நினைவிடம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் மக்கள், தனது குடும்பத்தில் ஒருவரது பிறந்தநாள் போல கொண்டாடி மகிழ்கின்றனர். 

கலாம் தேசிய நினைவிடத்தில் 5 ஏக்கரில் பிரமாண்ட நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அரசிடம் 1.60 ஏக்கர்  நிலம் மட்டுமே கிடைக்க பெற்றதால் அந்த இடத்தில் மணிமண்டபம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த நூலகம், அருங்காட்சியம் இதுவரை அமைக்கப்படவில்லை. வரும் காலத்தில் இதனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT