சிறப்புக் கட்டுரைகள்

நம்பிக்கையால் உயிர்வாழும் முதியோர்

1st Oct 2020 10:00 AM | கு.இராசசேகரன்

ADVERTISEMENT

தங்களது பிள்ளைகள் கைவிட்டாலும் நம்பிக்கையால் மட்டுமே உயிர்வாழும் முதியோர்களின் வாழ்வில் எத்தனை பக்கங்கள் நாம் கற்றுக்கொள்ள உள்ளன என்பது வியப்பின் குறியீடு

ஒரு காலத்தில் பாட்டியின் மடியில் படுத்துக் கதைகளைக் கேட்டுக்கொண்டே குழந்தைகள் உறங்குவார்கள். பெற்றோர்கள் வீட்டில் தங்களது பிற வேலைகளை கவனிக்கப் பேரப் பிள்ளைகளைத் தாத்தா, பாட்டி கவனித்துக் கொள்வார்கள்.

குழந்தைகளும் எது தேவையோ அதனை பெற்றோர்களிடம் கேட்காமல் தாத்தா பாட்டியிடம் கூறி தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் மகனே தனது கை செலவுக்காக பெற்றோரிடம் கேட்டே பெற்றுச் செல்வார்கள்.

சம்பளம் முழுவதையும் கொடுத்து விட்டு சினிமா, கோவில் என எங்கும்  செல்லவும் வீட்டில் உள்ள மூத்தோரிடம் கேட்டே பெற்றுச் செல்வார்கள். கோவில், சினிமா, திருவிழா மற்றும் திருமணம் என எங்கு சென்றாலும் குடும்பத்தோடு செல்வதே அலாதி இன்பாக இருக்கும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா என குடும்பத்தோடு செல்லும்போது அலுவலக பணிச்சுமை மறந்து பிற தொல்லைகள் மறந்து உற்சாகம் தொற்றிக் கொள்ளும். 

ADVERTISEMENT

கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அவர்களின் முகத்தை வைத்தே வீட்டில் உள்ள மூத்தோர் இருவரிடமும் பேசி சமாதானப்படுத்துவார்கள். இதனால் கணவன் மனையிடையே நல்ல பிணக்கு மேம்படும். இவற்றுக்கெல்லாம் மேலாக தீபாவளி பலகாரம் செய்வதும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான உடைகளை பெரியவர்களே எடுத்து வந்துக் கொடுப்பதும், பெரியவர்கள் கொடுக்கும் ஆடைகளை அனைவரும் மகிழ்ந்து அணிந்து கொள்வதும் தினம் தினம் வீட்டில் திருவிழாவாகவே இருக்கும்.

மூத்தோர் வந்தால் அமர்ந்திருக்கும் கணவன், மனைவி எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். பெரியவர்கள் முக்கிய வேலையாக வெளியூர் சென்றுவிட்டால் வீடே வெறிச்சோடி இருப்பதுபோலத் தோன்றும். தாத்தா பாட்டி இல்லாமல் பேரப்பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள். இதுவெல்லாம் அந்தக்காலம்.

தற்போது கூட்டுக்குடும்பங்கள் சிதறி மூத்தோர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மூத்தோர் என்றாலே சுமையாக கருதப்படுகின்றனர். சிலர் முதியோர் இல்லங்களில் விடப்படுகின்றனர். பலர் தெருக்களில் விடப்படுகின்றனர். சொந்த ஊரில் தெரிந்தால் அவர்களின் கவுரவம் பாதிக்கப்படும் எனக் கருதி பெற்ற பிள்ளைகளே மூத்தோரை தொலை தூர ஊர்களுக்கு அழைத்து சென்று நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.

இத்தனை துன்பங்களையும் சகித்துக்கொண்டு தங்களின் பிள்ளைகளைப் பற்றி தெரிவித்தால் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று மெளனம் காத்தும் தங்களின் வயிற்றுப்பசிக்காக கால்கடுக்க நடந்து கையேந்தும் மூத்தோரின் நிலை. . . . எதைச்சொல்வது. . .? எதை விடுவது. . .?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கிழக்கு ஓலைப்பட்டியை சேர்ந்தவர் வீ. வெங்கடாஜலம்(70). இவரது மனைவி அலமேலு. தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனராக இருந்துள்ளார். லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு பாரம் ஏற்றிச்சென்று நல்ல வருமானம் கண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

பின்னாளில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் லாரிகளை ஓட்டமுடியவில்லை. இவரது மகன் தனது குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார். நல்ல நிலையில் உள்ள அவர் பெற்றோர்களை கண்டு கொள்வதில்லை. இதனால் தோளில் ஒரு பையை சுமந்தபடி சாலையோரம் உள்ள பீர்பாட்டில்களையும், மதுபாட்டிகளையும் சேகரித்து வெங்கடாஜலம் தனது வயிற்றுப் பிரச்னையை தீர்த்துகொள்வதோடு தனது மனைவியையும் காப்பாற்றி வருகிறார்.

நாள்தோறும் பல கிலோமீட்டர் தொலைவு நடந்தே செல்லும் இவர் சாலை ஓரங்களிலும், மதுக்கடை ஓரங்களிலும் கிடக்கும் பாட்டில்களைச் சேகரித்து நாள் ஒன்றுக்கு கிடைக்கும் நூறு ரூபாய் அல்லது 50 ரூபாய் பணத்தில் பசியை தீர்த்துக் கொள்கிறார். அதேசமயம் சில நாட்களில் வேறு நபர்கள் பாட்டில்களை எடுத்துச் சென்றுவிட்டால் தனது பாடு திண்டாட்டம் என கூறுகிறார் வெங்கடாஜலம்.

நான் லாரி ஓட்டும் போது என்னிடம் நிறையப் பேர் கடன் வாங்கினார்கள். நான் இப்போது அதனைக் கேட்பது எனக்கு சரியாகப்படவில்லை அதனால் மது பாட்டில்களைச் சேகரித்து விற்று உயிர்வாழ்ந்து வருகிறேன் என்றார். மூத்தோரான தன்னை மகன்  கைவிட்டாலும் தனது மனைவியை கைவிடாமல் காப்பாற்றுகிறார் வெங்கடாஜலம். 

சில கேள்விகளுக்கு சிரிப்பையே பதிலாக்கி விட்டு நடந்தார்...காலி மதுபாட்டில்களை தேடி...

சேலம் மாவட்டம் மேட்டூர் குள்ளவீரன்பட்டியில் வசித்து வரும் வருதாயிக்கு வயது 90 என்றதும் அதிர்ந்து போனோம். இவருக்கு இரண்டு மகன்கள். கணவன் சின்னப்பையன் 20 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போனார். அன்று முதல் இன்றுவரை மேட்டூர் ஒர்க்ஷாப் கார்னர், மேட்டூர் பேருந்து நிலையம் பகுதிகளில் தனது பசியைப்போக்க கையேந்தி நிற்கிறார்.

ஏன் மகன்கள் கண்டுகொள்வதில்லையா என கேட்டபோது அவர்கள் கண்டுகொண்டால் நான் ஏன் இங்கு கையேந்துகிறேன் என்றார் கண்கலங்க. நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் தனது தங்கை சின்னக்காவுடன்(85) வசித்து வரும் வருதாயி அக்கம் பக்கத்தினர் தரும் ஒரு வேளை உணவை தனது தங்கையுடன் உண்டு மறுவேளை உணவுக்கு கையேந்தி சுற்றுகிறார்.

முதுமையிலும் நடக்க முடியாத தங்கையை காப்பாற்றி வருகிறார். பார்வை திறனுடன் தடியை ஊன்றி நடந்து வரும் இவர் மாலை நேரத்தில் பேருந்தில் ஏறி வீடு செல்கிறார். பலமுறை முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் தனக்குக் கிடைக்கவில்லை என்கிறார் வருதாயி. 

வருதாயி வந்தால் காலை எட்டு மணி என்பது மேட்டூர்வாசிகள் உணர்ந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு வீடு திரும்புவது இவரது வழக்கம் அப்போது சென்றால்தான் 85 வயதான தங்கைக்கு ஏதாவது உணவு தயாரித்து வழங்க முடியும் என கூறி நகரப்பேருந்தில் ஏறி நகர்ந்தார் .

மேட்டூர் அருகே உள்ள தொளசம்பட்டியை சேர்ந்தவர் முத்து (75). திருமணங்களில் நாதஸ்வரம் இசைப்பார். தற்போது முதுமை காரணமாக குடும்பத்தார் ஒதுக்கியதால் புதுச்சாம்பள்ளி தெருக்களிலும் சாலைகளிலும் நடக்கமுடியாமல் நடந்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

முதுமை காரணமாக இவரது கை கால்கள் சரியாக செயல்படாததால் பெற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து மனைவியும் ஒதுக்கி விட்டார். சரியாக நடக்க முடியாத இவர் தனது வயிற்றுப் பசிக்காக கால்களை தேய்த்து தேய்த்து நடந்து சென்று கடைகள் மற்றும் பாதசாரிகளிடம் கையேந்தி பசியைப் போக்கிக் கொள்கிறார்.

முதுமை காரணமாக தனக்கு ஓய்வூதியம் கிடைத்ததாகவும் கடந்த 8 மாதங்களாக அதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார் முத்து. புதுச்சாம்பள்ளி பேருந்து நிறுத்த கூடாரத்தில் இரவில் தங்கிக்கொள்ளும் இவர் உறவுகள் இருந்தாலும் முதுமை காரணமாக ஒதுக்கப்பட்டதால் யாரிடமும் செல்லாமல் தனித்து உள்ளார். எனது உடல் நலமாக இருந்தால் தற்போதும் நாதஸ்வரம் வாசித்து பிழைத்துக் கொள்வேன் என்றார் நம்பிக்கையுடன்.

Tags : elders day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT