சிறப்புக் கட்டுரைகள்

உறவுகள் இருந்தும் தனியாக வசிக்கும் முதியவர்கள்

1st Oct 2020 09:30 AM | பி.அமுதா

ADVERTISEMENT

பிள்ளைகள் யாரையும் நம்பி வாழ வேண்டும் என நினைக்காமல் தனது உழைப்பால் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என சமகால முதியவர்கள் கூறி வருகின்றனர், பலருக்கும் அத்தகைய நிர்பந்தம் நேரிட்டுவிடுகிறது.

செங்கல்பட்டில் உறவுகள் இருந்தும் தனியாக வாடகை வீட்டில் தனியாக இஸ்லாமிய தம்பதியனர் வசித்து வருகின்றனர்.

செங்கல்பட்டை சொந்த ஊராக கொண்டவர் ஷேக் அப்துல் காதர் என்பவரின் மகன் அப்துல் சுபான் (93) வயதான இவர் இந்திய ராணுவத்தில் ஆட்டோ மொபைல் ஆய்வு பிரிவில் சீனியர் பிட்டராக 22 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி காஜூன்பீ (82) இவருக்கு 2மகன்கள், ஒரு மகள். திருமணமான இவர்களில் ஒரு மகனும், ஒரு மகளும் திருமணமாகி குடும்பத்துடன் தாம்பரத்தில் வசித்து வருகின்றனர். மற்றொரு மகன் குடும்பத்துடன் செங்கல்பட்டு சுண்ணாம்புக் காரத் தெருவில் சொந்தவீட்டில் வசித்து வருகிறார். எனினும் அப்துல்சுபான் தனது மனைவியுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

ADVERTISEMENT

ராணுவத்தில் பணிபுரிந்தமைக்காக இவருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைப்பதாகவும் அதில் தான் வசிக்கும் வாடகை வீட்டிற்கு ரூ.5000 மற்றும் தாம்பரத்தில் வசிக்கும் தனது மகளுக்கு ரூ.5 ஆயிரமும் மீதமுள்ள பணத்தில் இதர செலவுகளை பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.

தனியாக வசித்தாலும் ஆரோக்கியமாக இருப்பதுடன் கடைத்தெரு உள்ளிட்ட எந்த பகுதிக்கு சென்றாலும் நடந்தே செல்கிறார். தான் வசிக்கும் அதே பகுதியில் தனது மகன் சொந்த வீட்டில் வசித்தாலும் வயதான காலத்தில் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்று மனதில் பாரத்துடன் கூறியது அவரது தழுதழுத்த குரலில் தெரிந்தது.

மகன்களுக்கும், மகளுக்கும் பிறந்த பேரன்களுக்கும் திருமணமாகி கொள்ளுப்பேரன், பேத்திகளையும் பார்த்து விட்டனர். மேலும் அவர்கூறுகையில் எனக்கு கிடைத்த மனைவியினால் பெரும்பாக்கியம் செய்துள்ளேன். தள்ளாத வயதிலும் கைகால்களை பிடித்துவிட்டு எனது உடல் உபாதைகள் போக்கி ஆறுதலாகவும் அன்பாக இருப்பதாலும் இருவரும் ஒருவருக்கொருவர் துணி துவைப்பது முதல் சமையல் வேலை உள்ளிட்ட வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்து வாழ்ந்து வருகிறோம்.

எங்களைப்போல் எல்லா முதியவர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் கூடிய இந்த வரம் கிடைப்பது அரிதாகும். எந்த குடும்பத்திலும் தங்கள் வயதான பெற்றோர்களுக்கு வேளைக்கு ஒரு வாய் உணவும் அரவணைப்பும், பேரன் பேத்திகளுடன் கொஞ்சி உறவாடி மகிழ்ச்சியாக காலத்தை கழிப்பதற்கு பிள்ளைகள் தாத்தா, பாட்டியின் அன்பிற்கு தடைப்போடாமல் உறுதுணையாக இருக்கவேண்டும்.

முதியவர்களும் குழந்தை போல் தான், அவர்கள் மனம் வேதனையடையுமாறு நடந்துகொள்ளக் கூடாதென இன்றைய தலைமுறைகளுக்கு இந்த முதுமை தம்பதியர் வேண்டுகோளாக வைக்கின்றனர்.

தனியாக வாழும் முதியவர்கள் செங்கல்பட்டு கே.கே.தெருவைச் சேர்ந்த சந்திரா (75) மூதாட்டி கூறுகையில், இரண்டு மகன்கள்,   மகள்  இருக்கின்றனர். கணவரையும் இழந்த நான் 3 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளேன். அவர்கள் தனித்தனியாக வாழ்கிறார்கள். ஒரு மகன் மனநிலை சரியில்லாததால் தன்னுடன் வைத்துக் கொண்டு மகனை காப்பாற்றுவதற்காக மீன் வியாபாரம் செய்து பிழைத்து வருகிறேன்.

தெருக்களில் கூடையில் மீன்களை சுமந்துக் கொண்டு வீதி வீதியாக ஒருநாளைக்கு 10 முதல் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்துச் சென்று வியாபாரம் செய்து வருகிறேன். உடம்பில் தெப்பு இருக்கும் வரைத்தான் இந்த பிழைப்பும். நாம் எத்தனை பிள்ளைகளைப் பெற்றாலும் வளர்த்தாலும் இறுதியில் தனிமைத்தான் நிரந்தமாகிவிடுகிறது.

விரக்தியில் உட்கார்ந்து விட்டால் மனநலம் சரியில்லாத மகனை யார் பார்ப்பார்கள் என்பதாலேயே நான் இருக்கும் வரை காப்பாற்ற வேண்டும் எனக்கூறும் இந்தப் பாட்டி முதுமையைப் பொருட்படுத்தாமல் உழைத்து வாழ்கிறார்.

திம்மாவரம் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா (74) கணவரை இழந்தவர். மகன், மகள் இருந்தும் தனியாக வாழ்ந்து வரும் இவர் மார்க்கெட்டிலேயே குறைந்த அளவிற்கு காய்கறிகளை வாங்கி வியாபாரம் செய்து தனது வாழ்வை வழி நடத்திச் செல்கிறார்.

ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராதா (71) இவர் கணவர் இறந்து 27 வருடமாகி விட்டது. மகன், மகள் கல்யாணமாகி தனித்தனியாக வாழ்கின்றனர். நான் மட்டும் தனியாக கிராமத்தில் விவசாயிகளிடம் கிடைக்கும் காய்கறிகளை வாங்கி செங்கல்பட்டு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன். முதியோர் உதவித் தொகைக்காக 27வருடமாக அலைந்து திரிந்தும் இதுவரை கிடைக்கவில்லை. வாழ்க்கை ஏதோ ஓடுகிறது.

இவர்கள் 3 பேரும் கூறும் ஒரே கருத்து பிள்ளைகள் யாரையும் நம்பி வாழ வேண்டும் என நினைக்காமல் தனது உழைப்பால் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை முதியோர் இல்லங்களில் பணம் கட்டி சேர்க்கக்கூட ஆளில்லை என்பதையும் உணர வேண்டும் என்கின்றனர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வாழ்க்கை!

Tags : elders day
ADVERTISEMENT
ADVERTISEMENT