சிறப்புக் கட்டுரைகள்

முதியோர்களைப் போற்றும் கூட்டுக் குடும்பங்கள் மீண்டும் தேவை!

ஆ. நங்கையார் மணி

ஐக்கிய நாடுகள் அவையின் பரிந்துரைப்படி, கடந்த 1991 ஆம் ஆண்டு  முதல் அக். 1 ஆம் தேதி உலக முதியோர் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1991 ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் தாராளமயம், தனியார்மயம், உலக மயமாக்கல் கொள்கைகள் நடைமுறைக்கு வந்தது முதல், முதியோர்களின் வாழ்வு என்பது கடுமையான நெருக்கடிகளையும் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியதாக மாறிவிட்டது.

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மயங்கள் எல்லாம் இந்திய சமூகத்தின் அடையாளமாக இருந்து வந்த கூட்டுக் குடும்பங்களைச் சிதைக்கத் தொடங்கின.

மாறி வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப உருவான தனிக் குடும்ப கலாசாரம், வயது முதிர்ந்த பெற்றோர்களைத் தனிமைச் சூழலுக்கு மாற்றியது மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதிலும், கணவன் - மனைவி இடையிலான உறவுகளிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

கடந்த 30 ஆண்டு காலமாக, தமிழகத்தில் மட்டும் குடும்ப நீதிமன்றங்களில் விவகாரத்து கோரி லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. சுமையாக கருதப்பட்ட முதியோர்கள் (பெற்றோர்) வீடுகளிலிருந்து முதியோர் இல்லங்களுக்கும், காப்பகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், கணவன் - மனைவி இடையிலான சிறு வாக்குவாதங்கள்கூட நெறிப்படுத்துவதற்கு ஆளில்லாமல் விவகாரத்தில்  - விவாகரத்தில் முடிந்து வருகின்றன.

ஓய்வூதியத்தால் வாழும் 30 லட்சம் முதியோர்

உறவுகளால் கைவிடப்படும் முதியோர்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் மாதம் ரூ. 1000 வீதம் சுமார் 30 லட்சம் முதியோர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதில் 70 சதவீத முதியோர் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள்.

இந்த உதவித் தொகை வழங்கப்பட்ட பின்னர், உறவுகளால் கைவிடப்படும் அவல நிலையிலிருந்து முதியோர் பலருக்கு நிவாரணம் கிடைத்தது. ஆனாலும் நிர்பந்தம் காரணமாக உதவித் தொகையை உறவுகளிடம் ஒப்படைத்துவிட்டு உணவுக்காகக் காத்திருக்கும் முதியோர்களின் நிலையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த ஓய்வூதியத் திட்டம் ஒருவேளை இல்லாமல் போனால் 80 சதவீத முதியோர்களின் நிலை மிகப் பெரும் கேள்விக்குறியாகி விடும்.

காப்பகங்களில் ஆறுதலின்றித் தவிப்பு

ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த முதியோர் பல்வேறு நிலைகளில் புறக்கணிக்கப்பட்டாலும்கூட, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தன் இரண்டாவது தலைமுறையினரை (பேரக் குழந்தைகளை) நேரடியாக பார்க்கும் வாய்ப்புடன் திருப்தி அடைகின்றனர். ஆனால், அந்த வாய்ப்பும் நகர்ப்புறங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு கிடைப்பதில்லை.

20 ஆண்டுகளுக்கு முன், பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோர்களைப் பராமரிப்பதற்காக சேவை மனப்பான்மையுடன் நகர்ப்புறங்களில் தொடங்கப்பட்ட முதியோர் காப்பகங்கள் இன்றைக்குக் கட்டணம் வசூலித்துப் பராமரிக்கும் விடுதிகளாக மாறிவிட்டன.

உணவு, உடை, இருப்பிடம் என சகல வசதிகளையும் கட்டணத்தின் மூலம் பிள்ளைகள் ஏற்படுத்திக் கொடுத்திருந்தாலும்கூட, ரத்த உறவுகளின் துணையின்றிக் காப்பகங்களில் தவித்து வரும் முதியோர்களின் மன நிலையைப் புரிந்துகொள்ள ஆளில்லை.

முதியோர் வழிகாட்டுதல் தேவை

இளைய தலைமுறையினரால் ஒருபுறம் முதியோர்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்தாலும்கூட, அவர்களின் நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதலின்றி இளைய தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் ஆரோக்கியம் முதல் அனுசரிப்பு வரை அனைத்தையும் இழந்து நிற்கிறது.

குழந்தை தும்மினால்கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் இளைய தலைமுறையினர், திரும்பும்போது பணத்தை மட்டுமின்றி மன அமைதியையும் இழக்க நேரிடுகிறது.

முதியோர்களுடன் கூடிய கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து, தனிக் குடும்பங்கள் உருவானபின் மன அழுத்த நோய் அதிகரித்திருப்பதை யாரும் உணர்வதில்லை.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பின், பாட்டி முறை வைத்தியம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அலோபதி மருத்துவம் கைவிட்ட நிலையில், முன்னோர்களின் உணவுப் பழக்கம் கரோனா தீநுண்மி தொற்றிலிருந்து மீட்டுள்ளதை இளைய தலைமுறையினர் உணரத் தொடங்கியுள்ளனர். அதேபோல் பொருளாதார நோக்கத்தை மையமாகக் கொண்டு பிரிந்த கூட்டுக் குடும்பங்கள், முதியோர்களின் வழிகாட்டுதலில் ஆரோக்கியமாகவும் அரவணைப்பாகவும் வாழ மீண்டும் இணைய வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

SCROLL FOR NEXT