சிறப்புக் கட்டுரைகள்

பொற்காலங்களாக இருந்த கூட்டுக் குடும்ப காலங்கள்

1st Oct 2020 07:30 AM | ச. மயில்வாகனன்

ADVERTISEMENT

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்த காலங்களே பொற்காலங்கள் என்று தனது 76-வது வயதிலும் நினைவு கூர்ந்து மகிழ்கிறார் மூத்தோர் தடகள வீரராகத் திகழும் சாதனை நாயகர் அ. பொசலான். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் ஸ்ரீ ராம்நகர் பகுதியில் தண்ணீர் கேன் விநியோகிக்கும் தொழில் செய்து வரும் இந்தச் சாதனை நாயகருக்கு, அன்று, 10 வயதிலிருந்து கூட்டுக் குடும்பத்தில் கிடைத்த மிகப் பெரும் ஆதரவுதான் தன் வெற்றிக்கெல்லாம் காரணம் என்றும் கூறுகிறார்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் கூட்டுக்குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியே கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தாலும் அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆதரவும் மரியாதையும் இன்றைய காலகட்டத்தில் கிடைத்தால் மிகப் பெரிய அதிசயங்களில் ஒன்றாக காணலாம்.

இன்றைய இளைஞர்கள் மனம்போன போக்கில் பயணிப்பவர்கள். யாராவது ஆலோசனை கூறிவிட்டால் அதனை ஏற்க மனமில்லாதவர்களே இன்றைய இளைஞர்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மூத்த தடகள வீரராக இன்றும் வலம்வந்து கொண்டிருக்கும் அ.பொசலான், தனது 76 வயதிலும் வீடுகள், கடைகளுக்குத் தண்ணீர் கேன்களை விநியோகம் செய்து வருவாய் ஈட்டி வருகிறார். வாழ்க்கை விளையாட்டில் நாள்தோறும் அவர் வீரர்தான். இருப்பினும் சலிப்பில்லாமல் பேசுகிறார். மூத்தோர் தடகள விளையாட்டில் அவர் பெற்ற சாதனைப் பட்டியலையும் நம்மிடம் விவரிக்கிறார். 

2019ல் தங்கம் வென்ற களிப்பில் தேசியக் கொடி போர்த்திய அ. பொசலான்

இதோ அவரது சாதனை 
 
1989-ல் அமெரிக்காவில் நடைபெற்ற உலக மூத்தோர் தடகளத்தில் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் 4-மிடம், 1990-ல் மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற மூத்தோர் ஆசிய விளையாட்டில் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம், 1996-ல் சியோலில் நடைபெற்ற மூத்தோர் ஆசிய விளையாட்டில் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம், 200-0ல் பெங்களூருவில் நடைபெற்ற மூத்தோர் ஆசிய விளையாட்டில் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம், நீளம் தாண்டுதலில் தங்கம், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம், 2004-ல் பாங்காக்கில் நடைபெற்ற மூத்தோர் ஆசிய விளையாட்டில் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 2006-ல் பெங்களூருவில் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டியில் 300 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம், ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 2010-ல் மலேசியா கோலாலம்பூர்,  2016-ல் சிங்கப்பூர், 2017-ல் சீனா ஆகிய இடங்களில் நடைபெற்ற மூத்தோர் ஆசிய தடகளப் போட்டியில் தங்கம், வெண்கலம் என பதக்கங்களைப் பெற்றவர். 

 2019ல் பதக்கங்கள் வென்ற சக வீரர் வி.ஆர். கோவிந்தனுடன் அ. பொசலான். 

கடந்த ஆண்டு 2019 மலேசியாவில் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, நீளம் தாண்டுதலில் வெண்கலம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி என பதக்கங்களை அள்ளிக் குவித்திருக்கிறார்.

இதோடு மட்டுமல்லாமல் 2019ல் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டியில் சிங்கம்புணரி செல்லியம்பட்டி வி.ஆர். கோவிந்தனையும் பங்கேற்க வைத்து அவரும் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம், 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் என பதக்கங்களை பெற்றுத் திரும்பியதாகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் எங்களை அழைத்துப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார் என்றும் மகிழ்ச்சியடைகிறார் பொசலான்.

தனக்கு தெரிந்ததெல்லாம் தடகள விளையாட்டும், ஓடுகளமும்தான் என்று கூறும் பொசலான், வாழ்க்கைக் களத்தையும் விவரிக்கிறார்:

"முதல் மனைவி விசாலாட்சி 1994ல் உலகைவிட்டு விடைபெற்றுக் கொண்டார். மூன்று மகன்கள். திருமணமாகிவிட்டது. இவர்களில் 2 பேர் குடும்பங்கள் சென்னையிலும், ஒருவரது குடும்பம் கோவையிலும் உள்ளது. எப்போதாவது தொடர்புகொள்வார்கள். மற்றபடி 2-வது மனைவியும், 2 பெண் குழந்தைகளுடன் காரைக்குடி அருகே கோட்டையூரில் வசித்து வருகிறேன். தினமும் தண்ணீர் கேன் விநியோகிப்பேன். 40 முதல் 50 கேன் வரை விநியோகத்தில் ரூ. 500 வரை கிடைக்கிறது. பெண் குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்" என்கிறார் வாழ்வில் வைர விழா கண்ட இந்த தடகள நாயகர்.

Tags : eldersday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT