சிறப்புக் கட்டுரைகள்

'மனைவி இல்லாவிட்டால் மரியாதையும் இருக்காது'

சி.ராஜசேகரன்

தற்போதைய காலகட்டத்தில், முதியவர்கள் என்பவர்கள் மிகவும் பாரமாக இருப்பதாகவே இளைய சமுதாயம் கருதுகிறது. இதனாலேயே, அவர்களை அலட்சியப்படுத்தி, ஒரு மூலையில் அமர வைத்து விடுகின்றனர்.

மிடுக்கோடு வாழ்ந்த பலர், இந்த அலட்சியங்களைச் சகிக்கப் பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறி சாலைகளிலும், வீதிகளிலும் சுற்றித் திரிந்து, அநாதைகளாக தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

திருவாரூரின் பழைய பேருந்து நிலையம், தியாகராஜர் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றால் பரட்டைத் தலை, கிழிந்த உடை ஆகியவற்றுடன் பல முதியவர்கள் கைநீட்டி யாசகம் ஏற்பதைப் பார்க்க முடியும். அவர்களை கூர்ந்து கவனித்தால், அவர்களின் உடல்மொழியும் கண்ணசைவும் பல நூறு சோகக் கதைகளை வெளிப்படுத்தும். வாழ்க்கையின் இனிவரும் காலங்களை எவ்வாறு கடத்தப் போகிறோம் என்ற விரக்தி அவர்களிடையே தென்படும். எல்லா இடத்திலுமே இதுபோன்ற முதியவர்கள் இன்னமும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திருவாரூரில் தனியார் உணவகத்தில் பணிபுரிகிறார் குணசேகரன் (65). சிதம்பரம் அருகே சொந்த ஊரைக் கொண்ட இவர், திருவாரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்து உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இளமைக் காலத்தில் சிறப்பாக வாழ்ந்த இவர், மனைவி இறந்த பிறகு உறவுகள் சரிவரக் கவனிக்காததால், தற்போது தனது வாழ்நாளைக் கடத்துவதற்கு கடும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவரே கூறுகிறார்:

சேத்தியாத்தோப்பு அருகே காவலக்குடி எனது சொந்த ஊர். சொந்தமாக அரிசி ஆலை, வீடு, நிலங்கள் எல்லாம் இருந்தன. 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 3 பேருக்குத் திருமணமாகிவிட்டது. 2 மகள்களுக்குத் திருமணம் செய்யும்போது, நிலத்தை விற்க நேரிட்டது.

அதன்பின், எனது மனைவிக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதற்காக வைத்தியம் பார்க்க பெரும் தொகையை இழக்க நேரிட்டது. பணம் மேலும் போதாததால், வீடு, ரைஸ்மில் எல்லாவற்றையும் விற்று வைத்தியம் பார்த்தேன்.

ஆனாலும், மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி இறந்துவிட்டார். மனைவி இறந்த பிறகு எனக்கு வாழ்க்கையே சூனியமாகி விட்டது போலாகி விட்டது.

வீடு, சொத்து எதுவும் இல்லாததால் உறவுகளும் என்னை ஒதுக்கத் தொடங்கினர். சொந்தமாக அரிசி ஆலை இருந்தபோது, ஊரில் கௌரவமாக வாழ்ந்திருந்தேன். ஒன்றுமே இல்லாமல் போனபோது ஊருக்குள்  வசிக்கப் பிடிக்கவில்லை.

தனிமரமான நான் மகள்கள், மகன்கள் வீட்டில் ஒதுங்கினேன். சில காலத்துக்குப் பிறகு அங்கும் எனக்கான மரியாதை குறைந்தது. நான் பாரமாக இருப்பதாக அவர்கள் உணர்ந்தனர். வார்த்தைகளால், என்னை ஒதுக்கத் தொடங்கியதால், சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு கிளம்பிவிட்டேன்.

சீர்காழி, கரூர், திருவாரூர் எனப் பல ஊர்களில் பல்வேறு வேலைகளைப்  பார்த்துள்ளேன். நிரந்தரமாக எந்த ஊரிலும் பணி புரியப் பிடிக்கவில்லை. இப்போதும் ஊருக்கு எப்போதாவது செல்வதுண்டு. ஆனால் நிரந்தரமாகத்  தங்குவதில்லை.

வாழ்க்கை எவ்வளவு காலம் செல்லுமென்று தெரியவில்லை. உடலும், மனமும் ஒத்துழைக்கும் வரை உழைப்பது என முடிவு செய்து விட்டேன். அதன்பின் என்ன செய்வதென்று தெரியவில்லை" என கண் கலங்குகிறார்.

60 வயதுக்கு மேல், தினக்கூலியாக பணிபுரியும் பலரது வாழ்க்கையும் இதுபோல, முற்றுப்பெறாமல் தொடர்கதையாக உள்ளது.

அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்துடன், நடந்தால் மரியாதையுடன் வழி அனுப்பி வைக்கப்படுவோமா என்ற விரக்தியுடன்,  தினக்கூலியாக,  வாட்ச்மேனாக, ஓட்டல் தொழிலாளியாகத் தங்களது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள் 60 வயதைக் கடந்த முதியவர்கள் பலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT