சிறப்புக் கட்டுரைகள்

மிதிவண்டியில் உருளுது வாழ்க்கை

சிவ. மணிகண்டன்

இந்திய மக்கள்தொகையில் முதியோரின் எண்ணிக்கை 10.6 கோடியாக இருக்கிறது. இதில் 5.3 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள். 9.6 கோடி பேர்  தங்களது சொந்த உழைப்பில் வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் இளைஞர்கள் அதிகம் பேரைக் கொண்டது நமது நாடு எனப் பெருமை கொள்வது ஒருபுறம் இருந்தாலும்,  அரசும் சமூகமும் கவனிக்கப்பட வேண்டிய பகுதியினராகத்தான் இருக்கின்றனர் முதியோர். காரணம், கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தற்போது தனிக் குடும்பங்கள் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் முதியோர் பலர் ஆதரவற்றவர்களாகத் தவிக்க விடப்படுகின்றனர்.

குடும்பம், உறவுகள் என ஏங்கும் முதியவர்கள், தள்ளாத வயதிலும் எத்தகைய சிரமங்கள் வந்தாலும் தளராத மனதுடன் தங்களது வாழ்க்கையைத்  தாங்களே கட்டமைத்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பது துயரமான பெரும்பேறு.

தினமும் காலையில் இருந்து இரவு வரை  கீரை விற்பவர்,  கடலை, பஞ்சு மிட்டாய் விற்பவர்,  சைக்கிளில் தேநீர் விற்பவர் என சாமானியர்களாக முதியவர்கள் பலரையும் காண முடிகிறது. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கதையும் பல படிப்பினைகளைத் தருவதாக இருக்கிறது. 

மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (90), 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது மனைவி மீனாட்சி அம்மாள். இந்தத் தம்பதிக்குப் பிள்ளைகள் இல்லை. நெசவுத் தொழிலாளியான கோவிந்தசாமி,  கடந்த 2000-மாவது ஆண்டு வரை, தறிக் கூடத்துக்கு வேலைக்குச் சென்று அதன் பிறகு நெசவுப் பணியைச் செய்ய முடியாததால் சைக்கிளில் சுண்டல் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.

தனது மனைவியுடன் இணைந்து வீட்டில் பாசிப் பயறு, சுண்டல் ஆகியவற்றைத் தயார் செய்து சைக்கிளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று இருவரும் விற்பனை செய்து வருகின்றனர். தினமும் ரூ.100 வரை கிடைக்கும். எங்கள் இருவருக்கும் அது போதுமானது என்கிறார் பெருமிதத்துடன்.  

சேகர்

மதுரை அண்ணா நகர் மருதுபாண்டியர் வீதியைச் சேர்ந்த சேகர் (62).  25 ஆண்டுகளாக சைக்கிளில் தேநீர் விற்பனை செய்து வருகிறார்.  ஆறாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், ஆரம்பத்தில் தேநீர்க் கடையில் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு, சுயதொழிலாக சைக்கிளில் தேநீர் விற்பனையைத் தொடங்கியுள்ளார். 25 ஆண்டுகளாக இத்தொழிலில் கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி விமலா ராணி. இரு பிள்ளைகள். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மகன் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடிக் கொண்டிருக்கிறார். அது ஒருபுறம் இருந்தாலும்,  குடும்பத்துக்கு உதவும் வகையில் நண்பர்களுடன் கேட்டரிங் தொழிலும் செய்து வருகிறார்.

சேகர் கூறுகிறார்: "தினமும் காலை 8 மணிக்கெல்லாம் வீட்டில் எனது மனைவி தேநீர் தயார் செய்து கொடுப்பார். கேனில் எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகம், காந்தி நினைவு அருங்காட்சியகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் மதியம் வரை  தேநீர் விற்பனை செய்வேன். இதில் செலவு போக ரூ.100 கிடைக்கும். இதேபோல, மாலையில் ஒரு சுற்று வந்தால் இன்னும் ரூ.100 கிடைக்கும். எல்லா நாள்களும் வந்துவிடுவேன். எனக்கு விடுமுறையெல்லாம் கிடையாது. சில நேரங்களில் உடல்நிலை சரியில்லையென்றால், காலை நேரத்தில் மட்டும் விற்பனை செய்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொள்வேன். எனது உறவினர் இரு பிள்ளைகளின் கல்விக்கும் உதவி செய்தார்.

"தேநீர் விற்பனை மூலமாகக் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறேன். இத்தனை ஆண்டுகாலம் இதில் கழித்துவிட்டேன்" என்கிறார் பெருமையுடன்.

இதைப் போல, வயதான தாத்தா - பாட்டிகள் பலரின் வாழ்க்கை  சக்கரமும், வண்டிச் சக்கரம் போல சுழன்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுபற்றி  முதியோர் நலனுக்கான தன்னார்வ அமைப்பான ஹெல்ப் ஏஜ் இந்தியா மேலாளர் (மதுரை) கே.பி. விஜயபிரகாஷ் கூறுகையில், தமிழகத்தைப் பொருத்தவரை முதியோர் தங்களது குடும்பம், உறவுகளுடன் இணைந்தே வாழ விரும்புகின்றனர். சுய கௌரவத்தை எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை. அதில் பிரச்னை எனும் போதுதான் தங்களால் முடிந்தவரை உழைத்துச் சாப்பிடுவோம் என்ற மனநிலைக்கு வருகின்றனர்.

குடும்பத்தினர் அவர்களிடம் மனம் திறந்து பேசுவதும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதும்தான் அருமருந்தாக இருக்கும். கரோனா பொதுமுடக்க காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது முதியவர்கள்தான். ஏனெனில், கரோனா முதியவர்களுக்கான நோயைப் போலவே  வெளிப்படுத்தப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் அச்சப்படுத்தியதில் முதியோர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகினர்.

தற்போது அத்தகைய சூழல் குறைந்துவிட்டது என்றாலும், சார்ந்து இருக்கும் முதியோரை அவர்களது குடும்பமும், தனித்து இருக்கும் முதியோரை சமூகமும் சற்று அக்கறை எடுத்துக் கவனித்துக் கொண்டால் அவர்களது முதுமைக் காலம் இனிப்பாக இருக்கும் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT