சிறப்புக் கட்டுரைகள்

முதுமையின் புகலிடம் அம்மாமண்டபம்!

தினமணி

கொடிதினும் கொடிது, முதுமையில் தனிமை என்பர். வருவாய் ஈட்ட வழியில்லாத சூழலில் அரவணைக்க ஆளுமின்றி, அன்றாட வாழ்க்கைக்கு வழியுமின்றி வீதிக்கு வந்து தனிமையில் வாடும் முதியோரின் வாழ்க்கை பெரிதுனும் கொடிது.

2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 7.62 கோடியாக இருந்த முதியோர் எண்ணிக்கை, 2011-ல் 9.2 கோடியாக உயர்ந்தது. 2036ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த மக்கள்தொகையும் 26 சதம் உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை இப்போது இருக்கும் விகிதாசாரத்தைவிட இரு மடங்காக அதிகரிக்கும்.

2036ஆம் ஆண்டில் மக்கள்தொகை 153.60 கோடியாக அதிகரிக்கும் என்றால், அதில் முதியோரின் எண்ணிக்கை மட்டும் 15.4 சதமாக இருக்கும். 2050இல் முதியோர் எண்ணிக்கை 20 சதமாக உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், 60 வயதை கடந்தவர்கள் 10 சதம் என்றால் இதில், வேறு துணையின்றி கணவன் - மனைவியாக உள்ள முதியோர் எண்ணிக்கை 20 சதமாக உள்ளது. 5 சதவீதம் பேர் எந்தத் துணையுமின்றி தனிமரமாக நிற்கின்றனர். 60 வயதைக் கடந்தோர் எண்ணிக்கை 10 கோடிக்கு அதிகமாகவும், கணவன் - மனைவி மட்டும் தனியாக இருக்கும் நிலையில் 3 கோடிக்கு மேலும் உள்ளதாக மக்கள்தொகை ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிள்ளைகளின்றிக் கணவன், மனைவியாக வாழும் முதியோர், தனித்து வாழும் முதியோர், பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், பிள்ளைகள் அல்லது உறவினர் என எவரும் இல்லாதோர், ஏழ்மையில் உழல்பவர்கள் என பலர் உள்ளனர். இத்தகையோருக்கு அடைக்கலம் அளிக்கும் புகலிடமாக விளங்குகிறது திருச்சி - ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலை. பெயரிலேயே அம்மா என்றிருப்பதால் முதியோர்களை அரவணைக்கும் தாயாக விளங்குகிறது அம்மா மண்டபமும், அதன் சாலையும். இங்கு 150-க்கும் மேற்பட்ட முதியோர்கள் இருக்கின்றனர்.  அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம்.

வயதான காலத்தில் கவனிக்க ஆள் இல்லாததால் இங்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களின் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை புதைந்து கிடைக்கிறது.

முருகன்

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி முருகன் (64), தனது பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக இங்கு வந்து சேர்ந்துள்ளார். தனது ஒரே மகளுக்குத் திருமணம் முடித்து, பேரன், பேத்தியைக் கண்டவர். தங்கையின் மகனுக்குத்  திருமணம் செய்து கொடுத்துள்ளார். மனைவி இறந்த பிறகு மகள், மருமகன், பேரன், பேத்தியுடன் சில மாதங்கள் இருந்தவர், அவர்களுக்கு சுமையாகிவிடக் கூடாது என்பதற்காக அம்மா மண்டபம் சாலையில் அடைக்கலமடைந்துவிட்டார்.

தனது கடந்த கால கதையை அவரே கூறுகிறார்:

“எனது தந்தை புதுக்கோட்டையில் சிறிய அளவில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்தார். அவருக்குப் பிறகு நானும் அந்த ஹோட்டலை நடத்தினேன். கடையை விரிவுபடுத்த முடியாமல், காங்கேயத்தில் பெரிய ஹோட்டலில் மாத ஊதியத்துக்குப் பணிக்கு சென்றேன். அங்கிருந்தபடியே குடும்பத்தைக் கவனித்து ஒரே மகளுக்கு திருமணம் செய்து, பேரன், பேத்திகளையும் கண்குளிரக் கண்டேன். 4 ஆண்டுகளுக்கு முன் வேலை முடிந்து வீடு திரும்புகையில் சாலை விபத்தில் எனது கை முறிந்தது. இதனால், வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவியும் இறந்துவிட்டதால் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என இங்கு வந்துவிட்டேன்.

"பல ஊர்களிலும், பல மாநிலங்களில் இருந்தும் அம்மாமண்டபத்துக்கு வரும் மக்கள் உணவு, பண உதவி வழங்குகின்றனர். கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைத்து மாதம் ஒரு முறை ஊருக்குச் சென்று  மகள், மருமகன், பேரன், பேத்திகளை கண்டு மகிழ்ச்சியடைந்து வருகிறேன். நானே விரும்பி இந்த வாழ்க்கையை தேர்வு செய்து கொண்டேன் என்கிறார்.

அம்பலத்தடியான் 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்த அம்பலத்தடியான் (68), வீடு, காடு, தோட்டம், துறவு என நன்றாக வாழ்ந்தவர். மனைவி இறந்த பிறகு, 2 மகன்களும் திருமணம் முடித்து இருக்கின்ற சொத்துகளைப் பகிர்ந்து கொண்டதால் தனித்து விடப்பட்டார். மாதம் ஒரு முறை ஒவ்வொரு மகன் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். பல இடங்களுக்குச் சென்றுவிட்டு இறுதியாக கடந்தாண்டு அம்மா மண்டபம் சாலையில் அடைக்கலமானார். இங்கு, உணவு, பணம் கிடைத்தாலும் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகத் தன்னையே கவனித்துக் கொள்ளப் பிடிப்பின்றிப் பரதேசியாகக் காட்சியளிக்கிறார். அழுக்கு உடை, தாடி மட்டுமே இவரது அடையாளமாகிப்போனது. தனக்கு சொந்தங்கள் இருப்பதையே தெரியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.

சுப்பிரமணி

அரியலூர் மாவட்டம், மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த துறவி சுப்பிரமணியின் (73)  கதை வேறு வகை. தாய், தந்தை, 3 சகோதரிகள் என பெரிய பண்ணைக் குடும்பத்தில் இருந்தவர். பால்ய வயதிலேயே துறவறம் பூண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக அம்மாமண்டப சாலைதான் இவரது வீடு. காலையில் காவிரியில் குளித்து, விபூதி அணிந்து திருவானைக்கா ஜம்புகேஸ்வரர், திருவரங்கம் அரங்கநாதரைத் தரிசித்துவிட்டு தனது விரிப்பை விரித்து சாலையோரம் அமர்ந்துவிடுகிறார்.

அம்மாமண்டபத்துக்கு வந்து செல்வோர் அளிக்கும் உணவே மூன்று வேளையும் பசியாற்றுகிறது. தட்சிணையாகக் கிடைக்கும் பணத்தில் காவி உடை, ருத்ராட்ச மாலை, விபூதி மற்றும் தனக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்கிறார். விஞ்சும் பணத்தைக் கோயில் உண்டியலில் சேர்த்து விடுகிறார். இங்கு வசிக்கும் முதியவர்களின் நிலை குறித்து அவரே நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.


"தம்பதி சகிதம், தனி நபர் என நாள்தோறும் 250-க்கும் மேற்பட்டோர் இங்கு வந்துவிடுகின்றனர். இதில், 150 பேர் நிரந்தரமாக இங்கே இருக்கின்றனர். வயதான காலத்தில் கவனிக்க ஆளின்றித் தவிக்கும் இவர்களுக்கு அரங்கநாதரும், அகிலாண்டேசுவரியும் எப்போதும் துணையாகவே இருக்கின்றனர். காலையில் கண் விழித்தால் மீண்டும் இரவு கண் மூடும் வரையில் பசி என்ற சொல்லே அறியாத வகையில் போதும், போதும் என்ற வகையில் உணவு கிடைத்துவிடுகிறது. பற்றாக்குறைக்குப் பணம் உதவியும் கிடைப்பதால் 60 வயதைக் கடந்த பலரும் இங்கு அடைக்கலமாகியுள்ளனர்.

"மழைக் காலத்தில் ஒதுங்க இடமில்லாமல் தவிக்க நேரிட்டது. மாநகரை அழகுபடுத்தும் திட்டத்தில் அம்மாமண்டபத்திலிருந்து திருவரங்கம் செல்லும் வரையில் சாலையின் இருபுறமும் மேற்கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால் மழைக் காலங்களில் ஒதுங்க வசதியாகிவிட்டது. கரோனா பொதுமுடக்கத்தில் அம்மாமண்டபம் 5 மாதங்களாக மூடப்பட்டது. சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் அரிசி, பருப்பு, மளிகை பொருள்களை வழங்கியதால் அவற்றை வைத்து சாலையோரம் கற்களை அடுப்பாக்கி சமைத்து உண்டனர்.

"இப்போது, அம்மாமண்டபம் திறக்கப்பட்டுள்ளதால் 150 முதியோருக்கு மீண்டும் அன்றாட வாழ்க்கை கிடைத்துள்ளது. எல்லாம் அவனின் செயல்" என புன்னகைக்கிறார். தன் முகத்தை மறைக்கும் தாடியைக் கடந்து வந்த அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளதை மறுப்பதற்கில்லை. இவர்களுக்கு மட்டுமின்றி, வாய் பேச இயலாதோர், கை, கால் ஊனமடைந்தவர்கள், சாலையே படுக்கையான நிலையில் உள்ளவர்கள் என 60 வயது கடந்து அவதிப்படும் பலருக்கும் வசந்த மண்டபமாக காட்சியளிக்கிறது இந்த அம்மாமண்டபம்.  

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT