சிறப்புக் கட்டுரைகள்

சொந்த கிராமத்தின் முன்னேற்றத்தில் தனியொரு மனிதர்!

சி.வ.சு. ஜெகஜோதி

30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனி ஒருவராகத் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறார் 82 வயது நிரம்பிய முதியவரான பா. சுப்பிரமணியன், காஞ்சிபுரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள கிதிரிப்பேட்டை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் பாழடைந்த ஓட்டு வீட்டில்.

காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி 1997 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் சுப்பிரமணியன். பணி ஓய்வுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான கிதிரிப்பேட்டைக்கு தனது அயராத உழைப்பால் குடிநீர் வசதி, சாலை வசதி, பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் என எண்ணிலடங்கா வசதிகளையும் நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து தேவையான நிதி பெற்று போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட எந்த வசதியும் வாத்தியார் அய்யா இல்லைன்னா எங்க ஊருக்கு வந்திருக்காது என்று உள்ளன்போடு சொல்கிறார்கள் கிதிரிப்பேட்டை கிராமத்து மக்கள். வயது 82 ஆக இருந்தாலும் ஒல்லியான தேகத்தால் 20 வயது இளைஞரைப் போலவே தோற்றமளிக்கிறார் வாத்தியார்.

அவரது சுறுசுறுப்பும், அணுகுமுறையும் எவரையும் கவர்ந்து விடுகிறது. மனைவி அங்கயற்கண்ணி தனது இரு மகள்களுக்கும் உதவியாக சென்னையிலேயே இருப்பதால் இவரே தினசரி சமைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறாராம். அதிகாலையில் வீட்டிலிருந்து கிளம்பி தனது கிராமத்தின் தேவைகளுக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கோரிக்கை மனுக்களை கொடுத்துவிட்டு மதியம் திரும்பிவந்து அதன் பிறகே சமைத்துச் சாப்பிடுகிறார்.

ஆட்சியர் அலுவலகம், தலைமைச் செயலகம் என ஏதேனும் ஒரு அரசு அலுவலகத்துக்குச் சென்று கிராமத்துக்குத் தேவையான வசதிகளை பெற்று வருவது மட்டுமே இப்போது இவரது பணியாக இருக்கிறது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் கரங்களால் நல்லாசிரியர் விருதும், அரிமா சங்கத்தினரால் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறார். இவர் கிராமத்துக்கு செய்யும் சேவைகளைப் பற்றி கேள்விப்பட்டு, முதியோர் நாளையொட்டி சந்திக்கச் சென்றால், வழியில் பூசிவாக்கம் ரயில்வே கேட்டில் சைக்கிளுடன் காத்திருந்து அழைத்துச் சென்றார்.

பசுமையான கிதிரிப்பேட்டை கிராமத்தில் இவரது வீடோ மிகவும் பழைமையான ஓட்டு வீடு. வீட்டின் முன்புறத்தில் உட்கார்ந்து வாத்தியார் அய்யா பேசினார்:

"தொடர்ந்து 40 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றினேன். 1997-ல் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று என் சொந்த ஊருக்கு வந்தேன். அப்போது கிராமத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்தது.

"நமது கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கொண்டு வருவது என முடிவு செய்தேன். எனக்கு வரக் கூடிய பென்சன் தொகை ரூ.41 ஆயிரத்துல ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, அத்தொகையை வைத்துக் கொண்டு மனுக்கள் டைப் செய்யும் செலவு, அதை பதிவுத் தபாலில் அனுப்பும் செலவு, அதிகாரிகளைச் சந்தித்து பேசுவதற்கான போக்குவரத்து செலவு, சாப்பாட்டுச் செலவு ஆகியனவற்றைச் செய்துகொள்வேன்.

"கிதிரிப்பேட்டை கிராமத்துக்கு தேவையான அத்தனை வசதிகளையும் 95 சதவிகிதம் செய்து விட்டேன். இன்னும் ஒருசில மட்டுமே நிலுவையாக உள்ளது. அதற்காகவும் தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து வருகிறேன்.

"என்னிடம் படித்த மாணவர்கள் பலரும் வெவ்வேறு மாவட்டங்களில் உயரதிகாரிகளாக  உள்ளனர். அவர்களும்  அதிகாரிகளும்  தருகின்ற  ஒத்துழைப்பால் தான்  கிராமத்து  மக்களுக்குத்  தேவையான அடிப்படை வசதிகள் செய்ய முடிகிறது. ஒவ்வொரு பணியையும் செய்து முடித்த பின்னர் அதில் கிடைக்கிற உற்சாகம்தான் என்னை  எந்த நோயும் இல்லாத ஆரோக்கியம் நிறைந்தவனாக வைத்திருக்கிறது.

"காஞ்சிபுரத்தில் சப் கலெக்டராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். (தற்போதைய  தமிழக  அரசின்  முதன்மைச்  செயலாளர்) கலெக்டர்கள் ஞானதேசிகன், பொன்னையா  ஆகியோர் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. என்னுடைய எந்தக் கோரிக்கையையும் உடனுக்குடன் நிறைவேற்றியும் தருவார்கள். எப்போதும் எனக்காக எதையும் அவர்களிடம் கேட்டதில்லை.

தனி ஒருவராக உங்கள் கிராமத்துக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?

"கிதிரிப்பேட்டையைச் சுற்றியுள்ள பூசிவாக்கம், பாபாசாகிப் பேட்டை, செங்கல்வராயபுரம், நெய்க்குப்பம், விநாயகபுரம் உள்ளிட்ட கிராமத்து மக்கள் சுமார் 3 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 3 ஆழ்துளைக் கிணறுகள் இவற்றையெல்லாம் கொண்டு வந்து குடிநீர் பற்றாக்குறையே ஏற்படாத வகையில் செய்திருக்கிறேன்.

"பொதுப் பணித் துறையின் நீர்வளத் துறை  அதிகாரிகளை  நேரில்  சந்தித்து  ரூ. 1.10 கோடி  மதிப்பில் ஊத்துக்காடு பெரிய ஏரி சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிராமங்கள்  பாசன வசதி பெற்று விவசாயம் செழித்திருக்கிறது. நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.40 கோடியில் திம்மராஜம்பேட்டையிலிருந்து புத்தகரம் வரை தார்ச் சாலை போடப்பட்டுள்ளது.

"காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்  வழியாக போகவும், வரவும் தலா 5 முறை வீதம் மொத்தம் 10 முறை வந்து செல்லும் நகர்ப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

"கிதிரிப்பேட்டைக்கு ரூ. 30 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. நெய்க்குப்பத்திலும், கிதிரிப்பேட்டையிலும் தலா ரூ. 3லட்சம் மதிப்பில் பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்  கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

"தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக அலைந்து கிதிரிப்பேட்டை கிராமத்தை வருவாய்க் கிராமமாக மாற்றியிருக்கிறேன். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. சுடுகாடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

"ரேஷன் கடைக்கு எப்போது அரிசி வந்தாலும் என்னிடம் காண்பித்து விட்டுத்தான் இறக்குவார்கள். மோசமான அரிசியாக இருந்தால் இறக்க அனுமதிக்க மாட்டேன். உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து விடுவேன் என்பதால் தரமான அரிசியே எங்கள் ஊர் ரேஷன் கடைக்கு வரும். என்னைப் பொருத்தவரை நான் பிறந்த மண்ணுக்குத் தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் செய்து விட்டேன்.

"ஒருசில மட்டும்தான் நிலுவையாக உள்ளது. வெள்ளத்தடுப்புச் சுவர் கட்டுவது, சமுதயாக கூடத்தில் முதல் தளம் கட்டுவது, தெருவோர கால்வாய் அமைப்பது இவை மூன்றுக்கும் ரூ.1.10 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து இவற்றை நிறைவேற்றித் தருமாறும் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். இவற்றையும் நிறைவேற்றாமல் விடமாட்டேன்" என்றார் வாத்தியார் அய்யா.

சுப்பிரமணியன் வாத்தியாரைப் பற்றி அதே ஊரில் வசிக்கும் விவசாயி பொ. ஜெயராமன் கூறியது:

கிதிரிப்பேட்டை விவசாயி பொ.ஜெயராமன்


"நானும் அவரிடம்தான் படித்தேன். எனக்கு ஆசிரியர். அப்போதே சமூக சேவையும் செய்வார். பணி ஓய்வுக்குப் பிறகு கிராமத்து மக்களுக்கு சமூக சேவை செய்வதே இவரது பணியாகிவிட்டது. கிராமத்து மக்கள் அனைவரும் வாத்தியார் அய்யா என்றுதான்  பெருமையுடன் சொல்லுவோம். எந்த  எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட அரசியல்வாதிகளும்  செய்யாததை  எங்கள்  கிராமத்துக்கு இவர் செய்திருக்கிறார். இவர் இல்லைன்னா எங்க  ஊருக்கு  குடிநீர் வசதியோ, சாலை வசதியோ, பஸ் வசதியோ வந்திருக்கவே வந்திருக்காது. வேறு யாரிடமும் ஒரு சிங்கிள் டீ கூட வாங்கிக் குடிக்க மாட்டார்.

யாரிடமும் பணமும் வாங்க மாட்டார். சொந்த செலவில்  அதிகாரிகளை போய்ப் பார்த்து திட்டங்களை இவரைப் போல யாரும் கொண்டு வரவும் முடியாது. எங்க கிராமத்தைப் பொருத்தவரை வாத்தியார் அய்யாவைப் போல இனி யாரும் வர முடியாது. அவர் இப்போது போல எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழனும்கிறதுதான்  எங்களோட  ஆசை"  என்றார் பொ.ஜெயராமன்.

உண்மைதான், முன்னேற்றம் வேண்டுமானால், ஊருக்கு ஒரு வாத்தியார் இருந்தால் போதும், சுப்பிரமணியனைப் போல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT