சிறப்புக் கட்டுரைகள்

காப்பகத்திலுள்ள முதியவர்களின் வியக்கவைக்கும் மனிதநேயம்!

1st Oct 2020 07:00 AM | வெ.செல்வகுமார்

ADVERTISEMENT

பெற்றெடுத்த வாரிசுகளும் உற்றார் உறவினர்களும் கைவிட்ட  நிலையில், வாழ்வின் எஞ்சிய நாள்களைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு, இந்தச் சமூகத்துக்கு இயன்ற உதவிகளைச் செய்யும் இந்த முதியவர்களின் மனிதநேயம் வியக்க வைக்கிறது.

கோவை, ஆர்.எஸ். புரம், ஆரோக்கியசாமி வீதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், 'ஈர நெஞ்சம்' அறக்கட்டளையின் பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது இந்த முதியோர் காப்பகம். இங்கு 6 முதியவர்கள், 59 மூதாட்டிகள் என 65 பேர் உள்ளனர்.

வாரிசுகளால் கைவிடப்பட்டோர், முதுமையில் சுயநினைவை இழந்து தவிப்பவர்கள், ஆதரவின்றி சாலையில் திரிபவர்கள் எனப் பலரையும் இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் கண்டறிந்து, காப்பகத்துக்கு அழைத்து வந்து உணவு, உறைவிடம் அளித்துப் பராமரிக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்தக் காப்பகத்தில் அதிகாலை 5 மணிக்கு எழும் முதியவர்கள், காப்பக வளாகத்தில் தோட்ட வேலை செய்வதுடன்,  கோயில்களுக்கு விபூதி, குங்குமப் பொட்டலங்கள் தயாரித்துத் தரும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் காப்பகத்தில், 2016 ஆம் ஆண்டு தன்னார்வலர்களின் உதவியுடன் சமையலறை அமைக்கப்பட்டது. அதன் பிறகு, மூதாட்டிகள், தங்களுக்கான உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றனர். இதுதவிர, காப்பகத்தின் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குக் காலை உணவு தயாரித்துத் தரும் பணியிலும் கடந்த 3 ஆண்டுகளாக  ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் சேவையின் அடுத்தகட்டமாக, அப்பள்ளியில் மாலையில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் படிக்கும் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பிஸ்கெட், சுண்டல், தேநீர் போன்ற சிற்றுண்டிகளை வழங்கியும் சேவையாற்றி வருகின்றனர்.

இந்த மூதாட்டிகளின் சேவையைப் பாராட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் புத்தாடை வழங்கி தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

தற்போது, கரோனா நோய்த்தொற்று பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு சிற்றுண்டி, தேநீர் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்பட்டதும் மீண்டும் இச்சேவையைத் தொடர உள்ளதாக மூதாட்டிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மகேந்திரன்  கூறுகிறார்:

"கோவையில் பல இடங்களில் ஆதரவின்றித் தவிக்கும் முதியவர்கள் குறித்த தகவல்களை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் "ஈரநெஞ்சம்" அமைப்புக்கு செல்லிடப்பேசியில் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையப் பகுதிகளில் தவிக்கும் முதியவர்கள் பற்றிய தகவல்கள் அதிக அளவில் வருகின்றன.

தகவல் வந்ததும் உடனடியாக அங்கு சென்று அவர்களை அழைத்து வந்து ஆதரவு அளிக்கிறோம். மீட்கப்படும் முதியவர்கள் ஆதரவற்றவர்களாக இருக்கும்பட்சத்தில் காப்பகத்தில் தங்க வைத்துப் பராமரிக்கிறோம். வழிதவறியோ, வீட்டில் கோபித்துக்கொண்டோ வெளியேறும் முதியவர்களை அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் 400 முதியவர்களை மீட்டு, அவர்களின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்து, அவர்களுடன் அனுப்பிவைத்துள்ளோம். கடந்த ஆண்டு மட்டும் 20-க்கும் மேற்பட்ட முதியவர்கள், அவர்களின் குடும்பத்தினருடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.

"சில நேரங்களில் நாங்கள் மீட்கும்போது, முதியவர்கள் சிலர் சுயநினைவற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளித்து, குணமடைந்த பிறகு, தங்கள் குடும்பத்தினரின் விவரங்களைக் கூறுவார்கள். அதன் பிறகு, அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் அளித்து, வரவழைத்து அவர்களுடன் அனுப்பிவைப்போம்.

"காப்பகத்தை ஒட்டியுள்ள கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலர் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், அவர்கள் காலையில் உணவு சாப்பிடாமல்  பள்ளிக்கு வந்து, பிரார்த்தனைக் கூட்டத்தில் மயங்கி விழுவதாகவும் கேள்விப்பட்டோம். உணவின்றித் தவிக்கும் மாணவர்களுக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் உதவியுடன் காப்பக மூதாட்டிகள் தயாரிக்கும் இட்லி, பொங்கல், சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறோம்.

"தினசரி அதிகாலை 5 மணிக்கே உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கி விடும் காப்பக மூதாட்டிகள், காலை 8 மணிக்குத் தாங்கள் தயாரித்த உணவுப் பொருள்களைப் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். காப்பகத்தில் இருக்கும் அனைத்து முதியவர்களும், தங்களை ஆதரவற்றவர்கள் என ஒருபோதும் நினைப்பதில்லை. உடன் இருப்பவர்களைத் தங்கள் உறவுகளாகப் பாவித்து மகிழ்வுடன் தங்களின் மீதமுள்ள வாழ்வை வாழ்கின்றனர்." 

Tags : eldersday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT