சிறப்புக் கட்டுரைகள்

4 பிள்ளைகள் பெற்றும் சோற்றுக்குப் பிச்சையெடுக்கும் 80 வயது முதியவர்!

கே.விஜயபாஸ்கா்

மூன்று மகன்கள், ஒரு மகள் இருந்தும், ஒருவேளை உணவுகூட சரியாகக்  கிடைக்காமல்  பேருந்து நிலையங்களில் பிச்சை எடுத்து சாப்பிடுகிறார் 80 வயது முதியவர் ஒருவர்.

உழைத்து, களைத்துக் குறுகிப்போன உடல், சரியாக உணவு சாப்பிட்டுப் பல நாள்கள் ஆகியிருக்கும் என்பதை அவரின் கண்கள் உணர்த்தின. அண்மைக் காலத்தில், முடிதிருத்தம் செய்ததற்கோ, முகம் மழித்ததற்கோ எந்த அறிகுறியும் இல்லை. இந்தத் தோற்றத்தில் ஈரோடு - பள்ளிபாளையம் சாலையில் இந்த முதியவர் சுற்றிக் கொண்டிருந்தார்.

விசாரித்ததில் அந்த முதியவரின் பெயர் ஆறுமுகம் (80).  மருமகள்களின் பேச்சைக் கேட்டு என் மகன்களே என்னைத் துரத்திவிட்டனர். ரொம்பக் காயப்படுத்திட்டாங்க என்று உடைந்த குரலில் பேசினார் ஆறுமுகம்.

"நான் கைத்தறி நெசவு வேலை செய்துவந்தேன். கடந்த 10 வருஷமா இந்த வேலையைச் செய்ய உடல் ஒத்துழைக்கல. மனைவி இருக்குற வரைக்கும் ரெண்டு பேரும் கிடைக்குற வேலையச் செஞ்சு வயித்தைக் கழுவுனோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க இறந்துட்டாங்க. 3 மகன்கள், ஒரு மகள் எல்லாருக்கும் திருமணமாகி வேலை நிமித்தமா வெளியூர்ல குடும்பத்தோட இருக்காங்க. 

"மனைவி இறந்த அப்புறம் மகன்கள் வீட்ல இருந்தேன். நான் சம்பாதிச்சுக் குடுக்கலைனு சொல்லி மகன்கள் என்னைத் திட்டிட்டே இருப்பாங்க. ஒரு வேளைதான் சாப்பாடு போடுவாங்க. பசிக்குதுன்னு கேட்டாலும், திரும்பவும் சாப்பாடு கொடுக்க மாட்டாங்க. நீ எங்களுக்கு என்ன பண்ண? சம்பாதிச்சுக் கொடுத்தியா? வெளியே போய் பிச்சையெடுத்துச் சாப்பிடுனு சொல்றாங்க. எனக்குப் பார்வையும் பிரச்னையா இருக்கு.

"ஒரு தடவைதான் மருத்துவமனைக்குக் கூட்டுப் போனாங்க. அறுவைச் சிகிச்சை பண்ணிக்கலாம்னு சொன்னாலும், நீ எக்கேடோ கெட்டு நாசமா போன்னு சொல்லிட்டாங்க. சாகறதுக்குக்கூட காசு வெச்சுக்கோ, எங்ககிட்ட எல்லாம் காசு இல்லை. காசு குடுத்துட்டு வீட்டுக்குள்ளே வான்னு வீட்டை விட்டுத் துரத்திவிட்டுட்டாங்க. ரொம்பப் புண்படுத்திட்டாங்க,  மருமகள்கள் பேச்சைக் கேட்டு, என் மகனே என்னைக் கழுத்தப் பிடிச்சு வெளியே தள்ளிட்டான். மனசுல நிம்மதியே இல்ல. நான் திரும்பவும் அங்க போக மாட்டேன்.

"சமீபத்துல என்னோட மகன் ஒருவன் இறந்துட்டான். அந்த தகவல்கூட எனக்கு தெரியாது. கால்போன போக்கில் ஈரோடு, பவானி பேருந்து நிலையம்,  குமாரபாளையம் பேருந்து நிலையம் என பேருந்து நிலையங்களில் தங்கிக்கொண்டு பிச்சையெடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார் அவர்.

இந்த முதியவரை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரோடு ஜீவிதம் அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் கே. மனிஷா கூறியதாவது:

"அந்த முதியவருக்கு மலம் கழித்துவிட்டு, சரியாகச் சுத்தம் செய்யக்கூட இயலவில்லை. மகன்கள், மருமகள்கள் தன்னைத் துன்புறுத்துவதாக பெரியவர் சொல்கிறார். கண் தெரியாத ஒரு முதியவர் அப்படி என்ன கொடுமை செய்துவிடப் போகிறார்? இவர்களால் முடியாவிட்டால் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு இல்லத்தில் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.  

"நமக்கு சிறுவயதில் பெற்றோர் செய்த பணிவிடைகளை அவர்கள் முதியவர்களான பிறகு நாம் செய்யப் போகிறோம் அவ்வளவுதான். ஆனால், இதையெல்லாம் இன்றைய தலைமுறையினர் மறப்பதால், பல முதியவர்கள் சாலைகளிலும், முதியோர் இல்லங்களிலும் சொல்ல முடியாத  துயரங்களுடன் நாள்களைக் கடத்தி வருகின்றனர். 

ஆறுமுகம் போன்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பது இந்தச் சமூகத்தைப் பொருத்தவரை நல்ல அறிகுறி இல்லை. கற்களைவிட கடினமான இதயத்துடன் பலர் இருப்பதால்தான் இப்படிப்பட்டவர்கள் உருவாகிறார்கள். நாளை நமக்கும் வயதாகும் என்பதை மட்டும் நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்" என்றார் மனிஷா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT