சிறப்புக் கட்டுரைகள்

அரவணைப்பு தேடிக் காப்பகங்களில் தஞ்சமடையும் முதியோர்!

1st Oct 2020 08:30 AM | ஆர். ராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

வயது மூப்பின் காரணமாக, உழைப்பைச் செலுத்த இயலாததால், ஒருசில குடும்ப உறுப்பினர்கள், முதியோரைச் சுமையாகக் கருதத் தொடங்குகின்றனர். இதனால், தன்னுடைய குடும்பத்திலேயே தனக்கு அரவணைப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டு, அந்தக் குடும்ப கட்டமைப்பிலிருந்து ஆதரவற்றோராக முதியோர் வெளியேறுகின்றனர்.

இதன் பின்பு, அவர்கள், யாருக்கும் சுமையாக இருக்கக் கூடாது எனக் கருதி, பெரும்பாலும் காப்பகங்களில் தஞ்சமடைகின்றனர். தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்த நிலையிலும், வாரிசுகள் மீது எவ்வித கோப தாபமும் இல்லாது மிகுந்த பற்றோடும், பாசத்தோடும் தங்கள் வாழ்நாள்களைப் பெரும்பாலான முதியோர் கழித்து வருகின்றனர்.

மாறி வரும் காலச்சூழலாலும், கூட்டுக் குடும்பம் என்கிற மிகப்பெரிய கட்டமைப்பு சிதைந்து வருவது தொடர்வதாலும், பெருநகரங்கள், நகரங்கள் எனப் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் ஆதரவற்ற முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில், அரசு உதவிபெறும் முதியோர் இல்லங்கள், தனியார் அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் அமைந்துள்ளன.

இதில், தருமபுரி நகரில், உள்ள விசாலாட்சி அம்மாள் நினைவு முதியோர் இல்லத்தில், கர்நாடக மாநிலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற வயதான 26  பெண்கள் தங்கியுள்ளனர்.

முதியோர் நாளையொட்டிப் பேசியபோது, தருமபுரியில் உள்ள இல்லத்தைச் சேர்ந்த சுமார் 85 வயதான கமலா என்பவர் கூறியது:

கமலா

"நான் கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள மல்லேஸ்வரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தேன், எனது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் தற்போது உயிரோடு இல்லை. அவர்களது வாரிசுகள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில், குடும்பத்தில் கவனித்துக் கொள்பவர்கள் யாரும் இல்லாததால் எனக்குத் தெரிந்தவர்கள் தருமபுரியில் உள்ள இந்த இல்லத்தில் சேர்த்தனர். இங்கு 15 ஆண்டுகளாக இருக்கிறேன். இந்த இல்லத்தில், எவ்வித இடையூறுமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றாக, குறிப்பாக ஒரு குடும்பமாக நினைத்து வசிக்கிறோம். இங்கு தங்கியிருப்பதற்கு நாங்கள் கட்டணம் எதுவும் செலுத்துவதில்லை. நல்ல முறையில் கவனித்துக் கொள்கின்றனர்" என்றார்.

இதேபோல, இந்த இல்லத்தில் உள்ள தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த ராஜம்மாள் (71) என்பவர் கூறியது:

ராஜம்மாள்

"எனக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் தனித்தனியே அவர்களுடைய குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். என்னைக் கவனிப்பவர்கள் யாரும் இல்லாததால், கடந்த ஓராண்டு முன்பு, தருமபுரி விசாலாட்சி அம்மாள் நினைவு முதியோர் இல்லத்தில் சேர்ந்தேன். குடும்ப உறவுகள் கவனிக்காமல் கைவிடும்போது, வேறு வழியின்றிக் குடும்பத்தைப் பிரிந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு குடும்ப உறவுகளைக் காணாது காப்பங்களில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது" என்றார்.

தருமபுரியைச் சேர்ந்த தெய்வானை (88) என்பவர் கூறியது:

தெய்வானை

"நான் தருமபுரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தேன், ஒரு மகன், மூன்று மகள்கள். கணவர் மறைந்துவிட்டதால், பிள்ளகளிடம் தொடர்ந்து வசிக்கும் சூழல் நிலவவில்லை. எனது மகள்கள் என்னை கவனித்துக்கொள்வதாகக் கூறினர். இருப்பினும், நான் அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது எனக் கருதி நானே குடும்பத்தை விட்டு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் முதியோர் இல்லத்துக்கு வந்து சேர்ந்தேன். இங்குள்ள நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல பாவித்து பழகி வருகிறோம்" என்றார்.

இதேபோல, இந்த இல்லத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு பின்னணியிலிருந்து ஆதரவற்றோராக மாறி, தங்களுடைய பேரன், பேத்திகளோடு கூட்டுக் குடும்பமாக வசித்துவர வேண்டிய சூழலில், மாறி வரும் காலச்சூழலால், அனைத்தையும் மறந்து, ஆதரவற்றோர் இல்லங்களில் தங்களது மீதமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

தங்களுக்கு வழிகாட்டியாக குடும்பத்தில் இருக்க வேண்டிய முதியோரை ஆதரவற்றோராக மாற்றி, வெளியேற்றும் நிலை தொடர்ந்தால் நாளை இச்சமூகத்தில், வருங்காலத் தலைமுறையினர் ஆறுதல் கூறக்கூட ஆளின்றி ஆதரவற்றோராக மாறும் சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

படங்கள்: யு.கே. ரவி

Tags : eldersday
ADVERTISEMENT
ADVERTISEMENT