சிறப்புக் கட்டுரைகள்

கொட்டும் மழையும் கோப்பைத் தேநீரும்

டி.குமாா்

நிவர் புயல் கரையைக் கடந்தாலும் மழை நிற்கவில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கிறது மழை. சாலைகளில்  மழைநீர், மின் இணைப்பு துண்டிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை, மரங்கள் முறிவு என இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் நம்மை ஆசுவாசப்படுத்த ஒரு தேநீர் போதும்.

கொட்டும் மழையால் நனைந்த நம் உடலும், மனமும் திடமாகி புத்துணர்ச்சி பெற தேநீர் போதுமானதாக உள்ளது. அதுவும் மழைக்காலத்து தேநீர் கூடுதல் புத்துணர்வு அளிக்கக் கூடியது. 

இந்தியாவின் தேநீர் சந்தை வளர்ச்சி ஆரோக்கியமானதாக உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவில் 1.10 மில்லியன் டன் தேயிலை உபயோகப்படுத்தப்படுள்ளது. வரும் 2025-ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 1.40 மில்லியன் டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நம் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் தேநீரைப் பருகுவதில் ஒவ்வொரு தனிநபருக்கும் வித்தியாசமான ரசனை உண்டு. பணி நேர இடைவெளி, அலுவலகக் கூட்டம்,  பயணங்கள், நண்பர்கள் சந்திப்பு, உறவினர் வருகை, விழாக்காலங்கள் என பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொருவர் வாழ்விலும் தேநீருக்கு முக்கிய இடம் உண்டு. உலக வரலாற்றின் வயதொத்த ஒரு பானமாக தேநீர் கருதப்பட்டாலும் சீன பேரரசர் ஷென் னாங் தேநீரை கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

உலகில் தேநீர் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் தேநீரைப் பருகுவதில் கடந்த 2016-ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 5-ஆம் இடத்தில் இருந்த இந்தியா கடந்த 2017-ஆம் ஆண்டு, 45 ஆண்டுகளில் அதிக அளவிலான தேயிலையை ஏற்றுமதி செய்தது. வட இந்திய மாநிலங்கள் தேயிலை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தேயிலை உற்பத்தியில் அஸ்ஸாம், அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் தேயிலையை உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் ஏறக்குறைய 80 சதவீதம் நகரங்களிலும், 75 சதவீதம் கிராமப்புறங்களிலும் தேயிலை வாங்கப்படுகிறது. 

இந்தியாவில் கேமிலியா சினன்சிஸ் (camillia sinensis), அஸ்ஸாமிகா (assamica) என இரண்டு வகையான தேயிலைகள் விளைவிக்கப்படுகின்றன. டார்ஜிலிங், அஸ்ஸாம், சிக்கிம், நீலகிரி மற்றும் காங்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உலகின் சிறந்த  தேயிலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சுமார் 11 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரியும் இந்த தேயிலை உற்பத்தி தொழிலில் சரிபாதி பெண் தொழிலாளர்கள் ஆவர். இந்தியாவில் பிளாக் , கிரீன், லெமன், இஞ்சி, மூலிகை, மசாலா, தந்தூரி என தேநீரில் பல வகைகள் உள்ளன.

சுமார் 2,000 சிறிய தேயிலைத் துணுக்குகளைக் கொண்டு ஒரு கோப்பைத் தேநீர் தயாரிக்கப்படுகிறது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகளவில் பருகப்படும் தேநீரில் 3,000 வகைகள் உள்ளன. ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி உலக தேநீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் தேசிய பானமாக தேநீர் உள்ளது. தேநீர் பருகுவதில் அயர்லாந்து, பிரிட்டன், துருக்கி உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளன.

அமெரிக்காவில் ஐஸ் டீயும், இந்தியாவில் பிளாக் டீயும் அதிகமாக பருகப்படுகிறது. சீனாவில் பிளாக் டீயை 'ரெட் டீ' என அழைக்கின்றனர். இமயமலைப் பகுதிகளில் யாக்கின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் தேநீரில் பயன்படுத்தப்படுகிறது. உப்புத் தன்மை கொண்ட அந்த தேநீர் மிக உயரமான இடத்தில் வசிக்கும் அவர்களுக்கு நீர்ச் சத்தைக் கொடுப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கரோனா கால பொதுமுடக்கக் கடை அடைப்பால் தேநீர் பருகுபவர்களின் எண்ணிக்கை 25 முதல் 30 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரம் வீடுகளில் இருந்து பணியாற்றும் நிலை ஏற்பட்டதாலும், வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டதாலும் வீடுகளில் தேநீர் பயன்பாடு அதிக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயே காலனி ஆதிக்க நாடாக இந்தியா இருந்தபோது, ஆங்கிலேயர்கள் தேநீருக்காக மலைகளை அழித்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். இந்த கடினமான பணிகளில் இந்தியர்களையே பயன்படுத்தினர். இன்று கதகதப்பாய் நாம் பருகும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ரத்தம் கலந்துள்ளது என்றாலும் தவறில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT