சிறப்புக் கட்டுரைகள்

பெண்களின் கருக்கால உணவும் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியமும்

19th Nov 2020 04:37 PM | பேரா. சோ. மோகனா

ADVERTISEMENT

பெண்களின் கருக்காலத்தில் உண்ணும் உணவு மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை, குழந்தைகளின் டி.என்.ஏ.வின் மாற்றங்களுடன் தொடர்புடையது என புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வின் முடிவுகள் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ப்ளாஸ்மெட் - 'PLosMed' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

உடல் பருமன் கொண்ட கருவுற்ற பெண்களும்கூட, ஆரோக்கியமான மேம்பட்ட உணவு மற்றும் அதிகமான உடல் செயல்பாடுகளின் மூலம், பிறக்கவுள்ள குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்களைக் குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
இது கருக்கால நீரிழிவு நோய் (Gestational Diabetes Mellitus) உள்ள தாய்மார்களுக்கு அதிக குளுக்கோஸின் தாக்கம் மற்றும் குழந்தைகளின் டி.என்.ஏ. மாற்றங்கள் குறித்து ஆராய்கிறது. உலகம் முழுவதும், கருக்காலத்தில் பெண்களின் உடல் பருமன் அதிகரிப்போடு கருக்கால நீரிழிவு நோய் அடிக்கடி வருகிறது, இதனால் கருக்காலம் மற்றும் பேறுகாலத்தின்போது ஏற்படும் சிக்கல்களின் அபாயம் அதிகரிக்கலாம் என்பதும் தெரிய வருகிறது.

அத்துடன் அதுவே குழந்தையின் பிற்கால வாழ்க்கையில் வளர்சிதை மாற்ற நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கவும் செய்யும் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. 

ADVERTISEMENT

கருக்கால நீரிழிவு நோய் கொண்ட தாய்மார்களின் அதிக அளவு குளுக்கோஸ், வளரும் கருவில் எபிஜெனெடிக் மாற்றங்களைத் (கருவின் மரபணு செயல்பாட்டின் வேதியியல் மாற்றங்கள்) தூண்டும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இது குழந்தைக்கு மோசமான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும்.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்தின் கருக்காலத்தில் சிறந்த உணவு மற்றும் செயல்பாட்டு சோதனை (UPBEAT) மையத்திலிருந்து, உடல் பருமன் கொண்ட 550-க்கும் மேற்பட்ட கருவுற்ற பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் தரவுகளைப் பெற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சோதனை இங்கிலாந்து முழுவதும் உள்ள பருமனான, கருவுற்ற பெண்களின் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இவற்றை ஒரு கட்டுப்பாட்டுக் குழுவில் உள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது, கருக்காலத்தில் அவர்களின் வாழ்க்கை மற்றும் உணவு முறையில் எந்த மாற்றமும் செய்யாத பெண்களைவிட, உடலால் விரைவாக உடைக்கப்படும் சர்க்கரைக் குறியீட்டு உணவுகளைக் குறைத்து, உணவில் மாற்றம் செய்து, கொழுப்பு குறைந்த உணவை உட்கொண்டு, உடல் செயல்பாடுகளை அதிகரித்து, எடையைக்  குறைத்த பெண்கள், வளர்சிதை மாற்ற அளவில் ஆரோக்கியமாக இருந்தனர்.

இந்த புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் மரபணு செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய எபிஜெனெடிக் முறையான டி.என்.ஏ.வின் மெத்திலேசனின் நிலை மற்றும் வடிவத்தை, புதிதாகப் பிறந்த குழந்தைகளில் கருக்கால நீரிழிவு நோய் உள்ள  தாய்மார்களிடமும், அது இல்லாத தாய்மார்களின் குழந்தைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

கருக்கால நீரிழிவு நோய் உள்ள தாய்மார்களின் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளினால், பிறந்த குழந்தைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என அவர்கள் சோதித்துப் பார்த்தனர். இதில், கருக்கால நீரிழிவு நோய் மற்றும் உயர் குளுக்கோஸ் அளவுகள் உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் டி.என்.ஏ.வில் மாற்றம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் எபிஜெனெடிக்ஸ் பேராசிரியர் கரேன் லில்லி கிராப் "எங்களின் இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் கருக்காலத்தில் தாய்மார்களின் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவது அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றன" என்றார். 

மேலும், "இவை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. மேலும் கருக்காலத்தில் தாயின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் இந்த எபிஜெனெடிக் மாற்றங்களைக் குறைப்பது என்பது பிற்கால வாழ்க்கையில் குழந்தைகளுக்கான மேம்பட்ட சுகாதார விளைவுகளுடன் சேர்ந்துள்ளதா என்பதை நிறுவ இப்போது கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன" என்றும் தெரிவித்தார்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் 'தாய் மற்றும் கரு ஆரோக்கியத் துறை'யின் தலைவரும், தலைமை ஆய்வாளருமான பேராசிரியர் லூசில்லா போஸ்டன், "கருக்கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் தங்களின் பிற்காலத்தில் உடல் பருமன் மற்றும் மோசமான கட்டுப்பாட்டுடைய சர்க்கரை அளவு கொண்டிருப்பதை நாங்கள் சில காலமாக அறிந்திருக்கிறோம்" என்றார். 

கல்லூரியின் தலைமை நிர்வாகி ஜேன் ப்ரூவின் இதுகுறித்து, "கருக்காலத்தில் தாயின் உடல் பருமன், தாய் மற்றும் குழந்தை மீது வாழ்நாள் முழுவதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே, கருக்காலம் தொடங்குவதற்கு முன்பு, தாய்மார்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியங்களில் ஒன்று, உடல் எடை உள்பட அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. இருப்பினும், இது அதிக எடை கொண்ட தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் கருவுற்று இருக்கும்போது ஆரோக்கியமான உணவைக் கடைப்பிடிப்பதன் மூலம் இன்னும் பயனடையலாம் என்றும் ஆய்வு காட்டுகிறது. அனைத்து தாய்மார்களுக்கும் ஆரோக்கியமான உணவு ஆலோசனை முறையை அணுக வேண்டும். மேலும் அதிக எடை கொண்டவர்களுக்கு நடைமுறை ஆதரவும் ஊக்கமும் வழங்கப்பட வேண்டும். தாய்மார்கள் எதிர்காலத்தில் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எண்ணி இப்போது, கருக்காலத்தில் ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்" என்கிறார்.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]


 

Tags : pregnancy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT