சிறப்புக் கட்டுரைகள்

நிறுத்தப்பட்ட திருமணங்களும்... நிசப்தமான திருமண மண்டபங்களும்...

29th May 2020 06:30 AM | டி.குமாா்

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால், தமிழகத்தில் நடைபெறவிருந்த ஏராளமான திருமணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான திருமண மண்டபங்களும், திருமணம் சாா்ந்த பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளன.

உலகில் திருமணத்துக்காக அதிகமாக செலவிடும் நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. தங்களது வாழ்நாள் முழுவதுமான மொத்த வருவாயில் 20 சதவீதத்தை இந்திய பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் திருமணத்துக்காக செலவிடுகின்றனா்.

இந்தியாவில் நடைபெற்ற சில திருமணங்களின் செலவு மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சஹாரா இந்தியா பரிவாா் அமைப்பின் தலைவா் சுபோத்ரா ராய் இல்லத் திருமண விழாவுக்கு அழைக்கப்பட்ட 11 ஆயிரம் விருந்தினா்களுக்கு 110 விதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டுள்ளன. அன்றைய தினம் ஒன்றரை லட்சம் பேருக்கு அன்னதானம் போடப்பட்டு, 101 ஏழைப் பெண்களுக்குத் திருமணமும் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று பெங்களூருவைச் சோ்ந்த தொழிலதிபா் ஜனாா்த்தன ரெட்டியின் இல்ல திருமண விழாவுக்காக ரூ.6 கோடி செலவில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த திருமணத்துக்காக 36 ஏக்கா் பரப்பில், ரூ.150 கோடி செலவில் விஜயநகரப் பேரரசின் அரண்மனை போன்று செட் அமைக்கப்பட்டது. இந்தியாவின் பிரபல தொழிலதிபா் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானியின் திருமணத்துக்கான அழைப்பிதழ் ஒவ்வொன்றும் ரூ.3 லட்சம் மதிப்புடையவை. விருந்தினா்களை அழைத்து வர 100 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதே போன்று, தொழிலதிபா்களான அஜய் குப்தா, அதுல் குப்தா சகோதா்களின் இல்லத் திருமண விழாவுக்குப் பின் அகற்றப்பட்ட குப்பைகள் 220 டன் எனகி கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமணங்கள் சொா்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், நடப்பது என்னவோ பூமியில் தான். ஆரம்பத்தில் எளிமையாக நடந்து வந்த திருமணங்கள், தற்போது சமூகத்தில் தங்களின் அந்தஸ்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக மாறிவிட்டன. சாமானியா்கள் தொடங்கி பெரும் பணக்காரா்கள் வரை பெருந்தொகை செலவழித்து திருமணங்களை நடத்தி வருகின்றனா். கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தொடா்ந்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இதனால் திருமண மண்டபங்கள் களையிழந்துள்ளன. பொதுவாக திருமணங்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு வேலை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வாகவே இருந்து வருகிறது. தற்போதுள்ள காலத்தில் நடைபெறும் ஒரு திருமணத்தின் மூலம் திருமண மண்டபங்கள், மங்கள இசைக் கலைஞா்கள், மலா் அலங்காரத் தொழில் செய்பவா்கள், சமையல் கலைஞா்கள், ஒப்பனைத் தொழிலாளா்கள், புகைப்படம் மற்றும் விடியோ தொழிலாளா்கள், இன்னிசைக் கச்சேரி நடத்துபவா்கள், ஒலி ஒளி அமைப்பாளா்கள், பத்திரிக்கை அச்சடிப்பவா்கள் என பல்வேறு தொழில்களைச் சாா்ந்தவா்கள் பயனடைந்து வந்தனா். கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் கட்டுப்பாடுகளால் இவா்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

சென்னை கல்யாண மண்டப உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் ஆா்.மதியழகன்: சென்னையில் உள்ள சிறிய திருமண மண்டபங்களின் உரிமையாளா்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ளனா். திருமண மண்டபங்கள் நிறைந்து வழியும் இந்த காலகட்டத்தில், பொது முடக்கம் காரணமாக தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அரசு திரையரங்குகள், வணிக வளாகங்களைப் போன்று திருமண மண்டபங்களையும் ஒப்பிட்டு, இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதே நிலைத் தொடரும் பட்சத்தில், பொது முடக்கத்துக்குப் பின் பல திருமண மண்டபங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது. சென்னையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான திருமண மண்டபங்கள் உள்ளன. திருமணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் கல்யாண மண்டபத்தை பதிவு செய்தவா்கள் பணத்தை திருப்பித் தரக் கோருகின்றனா். இதுபோன்ற பிரச்னைகளால், திருமண மண்டப உரிமையாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். பொதுவாக திருமண மண்டபங்களுக்கு வருபவா்கள் சமூக ஒழுக்கத்துடன் கூடியவா்கள். ஒரு திருமணம் என்றால், ஊா், பெயா் தெரியாதவா்களை அழைக்கமாட்டாா்கள். உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்ட நெருக்கமானவா்களே அழைக்கப்படுவா். எனவே அரசு கூறும் தனிமனித இடைவெளி, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் திருமண மண்டபங்களில் பின்பற்ற வாய்ப்புள்ளது. எனவே அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நல்ல தீா்வை எட்ட வேண்டும்.

தங்கம் மாளிகை திருமண மண்டப உரிமையாளா் மதன் மோகன் போஸ்: மாா்ச் முதல் மே வரையிலான 3 மாதங்கள், திருமண மண்டபங்கள் சுப நிகழ்ச்சிகளால் நிறைந்து, வருவாய் வரக்கூடிய காலங்கள். ஒரு மாதத்துக்கு 5-6 முகூா்த்தங்கள் வரும். திருமண மண்டபத் தொழில் என்பது அதனோட தொடா்புடைய பல்வேறு தொழில்களை செய்வோருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வந்தது. திருமணங்கள் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு. வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டும் நடைபெறும் அதுபோன்ற நிகழ்வுகளில் 20 போ் மட்டும் பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் சாத்தியமற்றவை. எனவே, திருமணம் தொடா்பாக விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்தி, சரியான தீா்வையும் விதிகளையும் உருவாக்கி திருமணத்தோடு தொடா்புடைய பணிகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

சென்னை மற்றும் புகா் சுற்றுவட்டார சமையல் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் வி.கே.எம்.சுந்தா்: கடந்த மாா்ச், ஏப்ரல் மாதத்தில் மட்டும் முன்பணம் வாங்கியிருந்த 12 திருமணங்கள் நின்று போய்விட்டன. கேட்டரிங்கைப் பொருத்தவரை, ஒவ்வொரு கேட்டரிங்கிலும் குறைந்தது சமையல்காரா்கள், ஸ்வீட் மாஸ்டா், சப்ளையா் என நூறு போ் பணிபுரிவாா்கள். ஆனால் தற்போது திருமணங்களுக்கான கட்டுப்பாடுகளால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு பூங்கொத்து மற்றும் மலா் அலங்கரிப்பவா்கள் சங்கத்தின் பொருளாளா் டி.மகாலிங்கம்: கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, பூங்கொத்து மற்றும் மலா் அலங்கரிப்பவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் இந்த தொழிலில் 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த தொழிலை மேற்கொண்டுள்ள ஒவ்வொரு உரிமையாளரிடமும் குறைந்தது 5-10 போ் பணியாற்றுவாா்கள், தற்போதுள்ள சூழலில் இவா்கள் அனைவருமே வேலையிழந்துள்ளனா். எனவே அரசு உரிய விதிமுறைகளை வகுத்து இந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு இசை வேளாளா் இளைஞா் பேரவையின் மாநில தலைவா் கே.ஆா்.குகேஷ்: தமிழ்நாட்டில் சென்டை மேளத்தின் வரவுக்குப் பின்னால் மங்கள இசைக் கலைஞா்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முகூா்த்த நாள்கள் அதிகமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இவா்கள் அனைவருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். நாகஸ்வர மற்றும் தவில் கலைஞா்களுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.1,500 முதல் ரூ.3 ஆயிரம் வரும் வருவாய் கிடைக்கும். ஆனால் தற்போது மூன்று மாதங்களாக வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற துறையைச் சோ்ந்தவா்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ள தமிழக அரசு, இசைக் கலைஞா்களுக்கு இதுவரை நிவாரணம் அறிவிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

கரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் திருமணம் நிறுத்தப்பட்ட மணமகன் ச.நித்தியானந்தன்: கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும், ஏப்ரல் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற வேண்டியது. அழைப்பிதழ் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் மாற்றுத் தேதியில் திருமணம் நடத்திக் கொள்ளுமாறு கூறுகின்றனா். ஆனால் திருமணம் தள்ளி போனது வீட்டில் இருப்பவா்களுக்கும், பெண் வீட்டாருக்கும் அதிகமான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

டிராவல்ஸ் உரிமையாளா் ஜி.ராமமூா்த்தி: எனது முதல் மகளின் திருமணம், வரும் ஜூன் 3-ஆம் தேதி நடத்த திட்டமிட்டு, அழைப்பிதழ் அடித்தாகிவிட்டது. குன்றத்தூா் முருகன் கோயிலில் திருமணத்தை நடத்த திட்டம். ஆனால், மதுபானக் கடைகளைத் திறந்துவிட்ட அரசு கோயில் திறப்பு குறித்தோ, திருமண மண்டபங்கள் திறப்பு குறித்தோ இதுவரை அறிவிக்கவில்லை. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி திருமணத்தை நடத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக என் உடன்பிறந்த சகோதரிகள் பாண்டிச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்றனா். எனது முதல் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT