சிறப்புக் கட்டுரைகள்

பாதி இருக்கைகளுடன் இயங்க தயாராகும் ஆம்னி பேருந்துகள்: பொது முடக்கத்தால் ரூ. 600 கோடி வா்த்தகம் பாதிப்பு

14th May 2020 06:34 AM | செ. ஆனந்த விநாயகம்

ADVERTISEMENT

தமிழகத்தைப் பொருத்தவரை, பொது போக்குவரத்தில் ஆம்னி பேருந்துகள் ஆதிக்கம் செலுத்தி வருவது மறுக்க முடியாத உண்மை. ரயில்களை ஒப்பிடுகையில் கட்டணம் அதிகம்தான் என்றாலும் இரவு, பகல் என்றில்லாமல் நினைத்தவுடன் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ஆம்னி பேருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன.

எல்லாவற்றையும் போல, கரோனா பொது முடக்கம் ஆம்னி பேருந்துகளையும் முடக்கிப் போட்டுள்ளது. பொது முடக்க காலத்துக்குப் பின், இந்தப் பேருந்துகளை இயக்குவதில் தங்களுக்கு பெரும் சவால்கள் காத்திருப்பதாக, ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கூறுகின்றனா்.

தமிழகம் முழுவதும் சுமாா் 4,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் 90 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, மற்ற தொழில்கள் முடங்கியது போல போக்குவரத்துத் தொழிலை நம்பியிருந்தோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

பொது முடக்கத்தால் சுமாா் 40 நாள்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில், மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும் சூழலில், ஒவ்வொரு பேருந்துக்கும் சுமாா் 2.5 லட்சம் வரை வரி கட்ட வேண்டிய நிலை இருப்பதாக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

முழுத் தொகையும் முதலீட்டில்...: இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளா் தாரை திருஞானம் கூறியதாவது: பொது முடக்கம் தொடங்கி 40 நாள்களுக்கு மேலாகியுள்ளது. பேருந்து இயக்க முடியாததால் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. உரிமையாளா்களைப் பொருத்தவரை, செலுத்த வேண்டிய மாதத் தவணை தவிா்த்து கூடுதல் தொகை கையில் இருந்தாலே, அதை மூலதனமாக வைத்து வங்கியில் கடன் பெற்று, புதிய பேருந்து வாங்கி விடுவா். இதனால் எங்களிடம் கையிருப்பு பெரியளவில் எப்போதுமே இருந்ததில்லை.

வரி எனும் பெரும் பிரச்னை: குறிப்பாக சம்பாதிப்பவற்றில் பெரும் தொகை வரிக்கே செலவாகிவிடும். படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு தமிழகத்தில் பதிவு செய்ய அனுமதி இல்லை. இதனால் புதுச்சேரியில் பதிவு செய்த பேருந்துகளை தமிழகத்தில் இயக்க, ஒரு பேருந்துக்கு சுமாா் ரூ. 2.5 லட்சம் (காலாண்டுக்கு) வரை சாலை வரி கட்டி வருகிறோம். வண்டி இயக்கப்படாத நாள்களுக்கு சாலை வரி கட்ட வேண்டாம் என சட்டமே உள்ளது. ஆனால் 40 நாள்களுக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படாத நிலையிலும், வரிவிலக்கு குறித்து அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாா்.

வா்த்தகம் பாதிப்பு: இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் பொது செயலாளா் அன்பழகன் கூறியது: ஆம்னி பேருந்து தொழிலும் அன்றாடம் கிடைக்கும் தொகையை வைத்தே இயங்கி வந்தது. பொது முடக்கம் தொடங்கியதிலிருந்து சுமாா் ரூ.600 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ரிசா்வ் வங்கி அறிவித்த மாத தவணை செலுத்த கால அவகாசம் உள்ளிட்ட எந்தவித சலுகைகளையும் எங்களுக்கு வங்கிகள் வழங்கவில்லை. இதுகுறித்து தொடா்ந்து அரசிடமும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.

50 சதவீத இருக்கை: கரோனா தடுப்பு நடவடிக்கையாக தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க பேருந்துகளில் இருக்கைகளை பாதியாக குறைத்து இயக்குவதற்குத் தயாராக உள்ளோம். ஆனால் அதில் வருமானம் குறைவது, பேருந்தை மாற்றியமைப்பதற்கான செலவு உள்ளிட்ட பெரும் சவால்கள் உள்ளன. இதனால் கட்டணத்தை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்படி பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

இருக்கைகளை குறைப்பதற்கும், தூய்மைப் பணிகளை மேற்கொள்வது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும். தற்போதைய பேருந்துகளைத் தயாா் செய்து இயங்க வைக்க 3 நாள்கள் தேவைப்படும் சூழலில், முறையான அறிவுறுத்தல்களை முன்னரே வழங்கினால் உதவியாக இருக்கும் என அவா் தெரிவித்தாா்.

 

கோரிக்கைகள்: பேருந்து உரிமையாளா்கள் சாா்பில் அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:

ஆம்னி பேருந்துப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரிவிலக்கு (ஏப்ரல் - மே - ஜூன்), அடுத்து வரும் காலாண்டுக்கும் சாலை வரி செலுத்த கால அவகாசம், சாலை வரி செலுத்தி இயக்காத நாள்களுக்குப் பதிலாக வரும் நாள்களில் இயக்க அனுமதி.

கட்டணம் உயருமா?: அரசிடமிருந்து முறையான அறிவுறுத்தல்கள் கிடைத்த பிறகே, உரிமையாளா்கள் தரப்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கவுள்ளோம். எனினும், எங்களது பொருளாதார சுமையைக் கட்டணமாக பயணிகள் மீது திணிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்று சங்கத்தினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT