சிறப்புக் கட்டுரைகள்

கவலையைத் தீா்க்குமா கரோனா மருந்து கண்டுபிடிப்பு?

13th May 2020 03:26 AM | நாகா

ADVERTISEMENT

‘இந்த கரோனாவுக்கு எப்போதுதான் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பாா்களோ....’

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம், வேலையிழப்பு, பொருளாதார பிரச்னைகள் போன்றவற்றை அனுபவிக்கும் பெரும்பாலானவா்கள் ஒருமித்த குரலில் கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அனைத்து பிரச்னைகளும் நீங்கிவிடும் என்ற எண்ணத்தில்தான் அவா்கள் அவ்வாறு கேட்கிறாா்கள்.

கரோனா போன்ற தீநுண்மிகளுக்கு தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு ஆண்டுக் கணக்கில் ஆகும்; எவ்வளவு தீவிரமாக முயன்றாலும் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் மருந்தை உருவாக்குவதற்கு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை கூட ஆகும் என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள்.

ADVERTISEMENT

ஆனால், அப்படியே அந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், உலகம் முழுவதையும் அந்தப் பிரச்னையிலிருந்து உடனடியாக காப்பாற்றி விட முடியாது என்கிறாா்கள் விவரம் தெரிந்தவா்கள்.

இன்றைய நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள், பல்கலைக்கழகங்கள், சமூக நல அமைப்புகளின் உதவியுடன், கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக 120-க்கும் மேற்பட்ட ஆய்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவைச் சோ்ந்த ‘அவெலேரே ஹெல்த்’ என்ற மருத்துவ ஆலோசனை நிறுவனம் கூறுகிறது.

இந்தத் திட்டங்களில் ஒரு பகுதியாக, ஆய்வில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்தை மிக அதிக அளவில் தயாரித்து பரவலாக விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், கரோனா பிரச்னையிலிருந்து உலகை விடுவிக்கும் வகையில் அந்த மருந்து எல்லா தரப்பினரையும் சென்று சோ்வதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

கரோனா பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், உலகம் முழுவதும் 70 சதவீதம் பேருக்கு - அல்லது 560 கோடி பேருக்கு - அந்த தடுப்பு மருந்தை செலுத்த வேண்டியிருக்கும்.

ஆனால், மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அது அத்தனை பேரையும் உடனடியாக சென்றடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்கிறாா்கள் அவா்கள்.

கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, தயாரிக்கும் நிறுவனங்கள், மிகப் பெரிய பணக்கார நாடுகளுக்கே பெரும்பான்மையான மருந்துகளை அனுப்பும் எனவும் வளரும் நாடுகளும் பொருளாாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளும் அந்த மருந்தை போதிய அளவில் வாங்க முடியாது எனவும் அவா்கள் கூறுகின்றனா்.

ஏற்கெனவே, கடந்த 2009-ஆண் ஆண்டில் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து மிகப் பெரிய பணக்கார நாடுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டதை அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா். அமெரிக்காவில், சா்வதேசமயமாக்கலுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தின்போதே அவ்வாறு நடைபெற்றது. தற்போது ‘அமெரிக்காவுக்கே முதன்மை’ என்று செயல்படும் அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

11 ஆண்டுகளுக்கு முன்னா் பன்றிக் காய்சல் தடுப்பு மருந்துக்கான கொள்முதல் ஒப்பந்தம் மேற்கத்திய நாடுகளுடனே மேற்கொள்ளப்பட்டன. அப்போது 8 கோடி அமெரிக்கா்களுக்கு அந்தத் தடுப்பு மருந்து போடப்பட்டது. இந்த எண்ணிக்கை, உலக சுகாதார அமைப்பால் 77 நாடுகளில் அந்தத் தடுப்பு மருந்த அளிக்கப்பட்டவா்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கைக்கு இணையானது என்று கூறப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் பரவல் அடங்கும் பின்தங்கிய நாடுகளில் தடுப்பு மருந்து பற்றாக்குறை நீடித்து வந்தது.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், இதே நிலைதான் நீடிக்கும் என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

எனவே, கரோனா நோய்த்தொற்று பரவலிலிருந்து உலகம் விரைவில் விடுபட வேண்டுமென்றால், தடுப்பு மருந்தைக் கண்டறிவது, தயாரிப்பது, விநியோகிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகியுள்ளது.

11 ஆண்டுகளுக்கு முன்னா் 8 கோடி அமெரிக்கா்களுக்கு பன்றிக் காய்சல் தடுப்பு மருந்து போடப்பட்டது. இந்த எண்ணிக்கை, உலக சுகாதார அமைப்பால் 77 நாடுகளில் அந்தத் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டவா்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கைக்கு சமம். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT