சிறப்புக் கட்டுரைகள்

சிவகங்கை மாவட்டத்தில் மாயமாகும் சிற்றாறுகள்

22nd Mar 2020 06:00 AM | எஸ். சந்தானகுமார்

ADVERTISEMENT


சிவகங்கை மாவட்டத்தில் பாயும் சிற்றாறுகள் கடந்த அரை நூற்றாண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாத காரணத்தாலும், அலுவலர்களின் அலட்சியத்தால் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் வேளாண் பணிகள் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் வைகை, பாம்பாறு, பாலாறு, தேனாறு, நாட்டாறு, உப்பாறு, சருகனியாறு, கிருதுமால், மணிமுத்தாறு, விருசுழியாறு என 10 சிற்றாறுகள் உள்ளன. இதில், உப்பாறு (சிலம்பாறு) மதுரை மாவட்டம், திருவாதவூர் பெரிய கண்மாயில் தொடங்கி, சிவகங்கை மாவட்டம் வழியாக மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கலக்கிறது.

நாட்டார் கால்வாய் ஆறு ஊத்திக்குளம் பெரிய கண்மாயிலும், சறுகணி ஆறு அலவாக்கோட்டையிலும் தொடங்கி, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை அடைகிறது. மணிமுத்தாறு ஏரியூர் பெரிய கண்மாயில் தொடங்கி பாம்பாற்றில் கலக்கிறது. விருசுழியாறு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி முருக்கைக் கண்மாயில் தொடங்கி கல்லல் அருகே பொய்யலூர் அணையை அடைகின்றது.

பாம்பாறு திருப்பத்தூர் தாமரைக் கண்மாயில் தொடங்கி, மணிமுத்தாறாக மாறி வங்க கடலில் கலக்கிறது. வைகையாறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாய் பகுதிக்குச் சென்று அங்கிருந்து அழகன்குளம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. வைகை ஆறு மட்டுமே தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

ADVERTISEMENT

மழைக் காலங்களில் பெய்யும் நீர் மேற்கண்ட ஆறுகள் வழியாகச் சென்று மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 968 கண்மாய்கள், 4 ஆயிரத்து 871 ஒன்றிய கண்மாய்களில் நேரடியாகவும், மறைமுகவும் பாய்கின்றன. இவையனைத்தும், ஒன்றுக்கொன்று சங்கிலித் தொடர் போன்று அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 2 லட்சத்து 83 ஆயிரம் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கண்ட கண்மாய்களிலும், ஆறுகளிலும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டன. இவற்றின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பணிகள் மட்டுமே முதன்மை பணிகளாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஆறுகள் முறையாக பராமரிக்காததால் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

பல இடங்களில் நடைபெற்று வரும் மணல் திருட்டால் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், உரிய கண்காணிப்பு இல்லாததால் ஆறுகள் மற்றும் கண்மாய்கள் முழுவதும் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதனால் ஆறுகளின் தொடர்பு தடைப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மாயமாகி உள்ளன. இவைதவிர, பாசன மற்றும் வரத்துக் கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இதன்காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் வேளாண் பணிகளை முற்றிலும் கைவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விட்டனர். அண்மையில், வேளாண் துறை கணக்கெடுப்பின்படி சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு மட்டுமே வேளாண் பணிகள் நடைபெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை மானாவாரி பயிர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் வேளாண்மை பிரதான தொழிலாகவும், முதன்மை தொழிலாகவும் மாற வேண்டுமெனில் ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் மட்டுமின்றி வரத்துக் கால்வாய்களையும் முறையாக பராமரிக்க முன் வர வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது: 

சிவகங்கை மாவட்டத்தில் வைகையை தவிர மீதமுள்ள 9 ஆறுகள் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் முற்றிலும் அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்களுக்கு ஆற்று வழியே நீர் வழிப்பாதைகள், பாசன கட்டமைப்பு வசதிகள் முன்னோர்களால் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு, மணல் கடத்தல், சீமைக்கருவேல மரங்களால் வழித்தடங்கள், கட்டமைப்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆறுகள் அனைத்தும் பராமரிப்பில்லாமல் போனதால் கண்மாய்கள் வறண்டு போய் விவசாயம் அழிந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் மாவட்டத்தில் சராசரி அளவு மழை பெய்தாலும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாததற்கு ஆறுகள் மற்றும் வரத்துக் கால்வாய்கள் உரிய பராமரிப்பின்றி போனதும் காரணமாகும்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அண்மையில் மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஆறுகளில் குறைந்த தூரம் வரை தூர்வாரும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து ஆறுகள் மற்றும் வரத்துக் கால்வாய்களையும் முழுமையாக தூர்வார வேண்டும். மேலும் ஆறுகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், மணல் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் போதிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆறுகள் காப்பாற்றப்படும் என்றனர்.

Tags : worldwaterday
ADVERTISEMENT
ADVERTISEMENT