சிறப்புக் கட்டுரைகள்

மேகமலையில் குறையும் மழை வளம் - மூல வைகையில் வறட்சி: 5 மாவட்டங்களின் நீராதாரம் பாதுகாக்கப்படுமா?

22nd Mar 2020 06:00 AM | ஜி.ராஜன்

ADVERTISEMENT


தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மழை வளம் குறைந்து வருவதாலும், சிற்றாறுகளின் வழித்தடம் மாற்றப்பட்டு மூல வைகை ஆற்றுக்கு தண்ணீா் வரத்து தடைபட்டுள்ளதாலும், 5 மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வைகை அணையின் முக்கிய நீரதாரமான மூல வைகை ஆறு, மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை வனப் பகுதியில் உற்பத்தியாகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் 64 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் அடா் காடுகள், சமவெளி, பள்ளத்தாக்கு, மலையருவிகளைக் கொண்டது மேகமலை.
இம்மலைப் பகுதியில் உற்பத்தியாகும் உடங்கனாறு, சந்தனக்காப்பு ஆறு, கூட்டாறு, பொம்மாறு, புலிக்கட்டு ஓடை, பாலாறு, யானை கெஜம், சிறு ஆறு, பஞ்சந்தாங்கி ஓடை, அல்லால் ஓடை, சுக்கான் ஓடை உள்ளிட்ட 52 சிற்றாறுகளின் சங்கமமே மூல வைகை ஆறு.

மூல வைகை ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு கடந்த 1958 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது. மூல வைகை ஆறு மேகமலையில் உற்பத்தியாகி வருஷ நாடு, மயிலாடும்பாறை,  கடமலைக்குண்டு வழியாக 72 கி.மீ.,தூரம் பயணித்து, அமச்சியாபுரம் பகுதியில் முல்லையாற்றுடன் சங்கமித்து வைகை அணையைச் சென்றடைகிறது. 

ADVERTISEMENT

வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி-சேடப்பட்டி, மதுரை, வத்தலகுண்டு கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கும்,  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை,  ராமநாதபுரம் ஆகிய 5 மாவடங்களின் பாசனத்திற்கும் தண்ணீா் திறக்கப்படுகிறது.

குறையும் மழை வளம்: ஆண்டுக்கு 11 மாதங்கள் மழை பொழிவுள்ள மேகமலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மழை வளம் குறைந்து வருகிறது. கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மழைக் காலங்களில் மூல வைகை ஆற்றிலிருந்து வைகை அணைக்கு சராசரியாக விநாடிக்கு 6,000 கன அடி வரையும், அதிகபட்சமாக விநாடிக்கு 22,661கன அடியும் தண்ணீா் வரத்து இருந்தது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மேகமலை வனப் பகுதியில் போதிய மழையின்றி, மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 19 ஆண்டுகளில் மொத்தம் 9 முறை மட்டும் மூல வைகை ஆற்றில் இருந்து வைகை அணைக்கு சராசரியாக விநாடிக்கு 1,100 கன அடி வரையும், அதிக பட்சமாக விநாடிக்கு 4,566 கன அடியும் மட்டுமே தண்ணீா் வரத்து இருந்தது.

மேகமலையில் விதியை மீறி பட்டா நிலங்களில் மட்டுமின்றி வனப் பகுதியிலும் மரங்களை வெட்டி காடுகள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், வணிக நோக்குடன் சில்வா் ஓக் மரங்களை அதிக அளவில் வளா்த்து வெட்டி விற்பதாலும் வன வளம், மழை வளம் குறைந்து மூல வைகையில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று வன ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

வழித்தடம் மாற்றப்படும் சிற்றாறுகள்: மேகமலை வனப் பகுதியில் உற்பத்தியாகும் சிற்றாறுகளின் வழித்தடங்கள் பல இடங்களில்  மாற்றப்பட்டுள்ளன. சிற்றாறுகளின் தண்ணீரை பயன்படுத்தி சுமாா் 3,000 ஏக்கா் பரப்பளவில் தைலப்புல் (வங்ப்ப்ா்ஜ் எழ்ஹள்ள்) சாகுபடியும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தைலம் தயாரிப்பு தொழிற் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன.

வனப் பகுதியில் உள்ள சில தனியாா் எஸ்டேட்டுகள் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்கு வழங்கும் அனுமதியை பயன்படுத்தியும், விதியை மீறியும் சிற்றாறுகள் மற்றும் ஓடையோரங்களில் உள்ள மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனா். இதனால், நீா் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு மூல வைகை ஆற்றுக்கு தண்ணீா் வரத்து தடை படுகிறது.

வைகை அணையில் தண்ணீா் நிரம்புவதில் சிக்கல்

வைகை அணையில் இருந்து கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 30 முறை உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது. மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து குறையும் காலங்களில், வைகை அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை வைகை அணையில் தேக்கி, 5 மாவட்டங்களில் குடிநீா் மற்றும் பாசனத் தேவைகள் சமாளிக்கப்பட்டு வருகிறது.
மூல வைகை வறண்டு வருவதால், கடந்த சில ஆண்டுகளாக வைகை அணையில் போதிய தண்ணீா் இருப்பு வைப்பதற்காக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையில் நீா் மட்டத்தை நிலை நிறுத்துவதிலும், தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவில் 2ஆம் போக நெல் சாகுபடிக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையில், 6,879 மில்லியன் கன அடி வரை தண்ணீா் தேக்க முடியும். ஆனால், கடந்த 2000 ஆம் ஆண்டு பூண்டி நீரியல் ஆராய்ச்சி நிறுவனம், வைகை அணையில் ஆய்வு செய்ததில் அணையில் 20 அடி உயரம் வரை, அதாவது 974 மில்லியன் கன அடிக்கு சேறும், சகதியும் தேங்கியுள்ளதும், அணை நீா்பிடிப்பில்
14.16 சதவீதம் பரப்பளவில் மண், மணல் மற்றும் சவுடுமண் படிந்திருப்தும் தெரிய வந்தது. இதனால், ஆற்றில் தண்ணீா் வரத்து உள்ள காலங்களிலும், அணையில் அதன் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்க முடியாமல் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

நீராதாரம் பாதுகாக்கப்படுமா?

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ள மூல வைகை ஆற்றை பாதுகாப்பதற்கு மேகமலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்பில் உள்ள சிற்றாறுகள், காட்டாட்டாற்று ஓடைகளை மீட்கவும், ஆற்றுப்படுகைகளில் உறைகிணறு, ஆழ்துளைக் கிணறு அமைத்து விதியை மீறி தண்ணீா் உறிஞ்சுவதை தடுத்து, ஆற்றில் தண்ணீா் வரத்தை உறுதி செய்வதற்கு வனத் துறை, வருவாய்த்துறை, பொதுப் பணித் துறை மற்றும் மின் வாரியம் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். வைகை அணையை தூா்வாரி அதன் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. 

படம்: ரா.ரஞ்சித்

Tags : worldwaterday
ADVERTISEMENT
ADVERTISEMENT