சிறப்புக் கட்டுரைகள்

வறட்சியிலும் வற்றாத குளம்: 100 நாள் பணியாளர்களின் சாதனை

சி.சண்முகவேல்


அரியலூர் மாவட்டம் திருமானூர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களின் முயற்சியால், கடும் வறட்சியிலும் வற்றாமல் உள்ளது சாத்தமங்கலம் நல்ல தண்ணீர் குளம்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலான ஏரிகள், குளங்கள் தூர்வாரி, தண்ணீரைச் சேமிக்காமல் போனதே காரணம். தமிழகத்தில் 39,000 ஏரி, குளங்கள் உள்ளன. அதில் பெரும்பாலான ஏரி, குளங்கள் தூர்வாராததால், சீமைக் கருவேல மரங்கள் முளைத்து மறைந்து போயுள்ளன.

இதனால் ஒவ்வோர் ஆண்டும் கோடை காலங்களில் வறட்சியின் பிடியில் தமிழகம் சிக்கித் தவித்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் தண்ணீரைத் தேக்கிவைத்துப் பயன்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் ஏதும் கிடையாது. ஆனால் இந்த மாவட்டத்தில் ஏரி, குளங்கள் அதிகம். மருதையாறு வடிநில கோட்டத்திற்கு உள்பட்ட 67 ஏரிகள் என பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 95 ஏரிகள் உள்ளன.

இதில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்டராதித்தம் பெரிய ஏரி, 300.77 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராயபுரம் ஏரி, 203 ஏக்கர் கொண்ட ரெட்டிப்பாளையம் உப்போடை ஏரி, 129.78 ஏக்கர் பரப்பளவு கொண்ட மடக்குடையான் ஏரி, 102 ஏக்கர் கொண்ட கல்லக்குடி பெரிய ஏரி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரி, சுத்தமல்லி பெரிய ஏரி, காமரசவல்லி சுக்கிரன் பெரிய ஏரி, தூத்தூர் பெரிய ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் குடிநீர் விநியோகத்துக்கும், விவசாயப் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்தன.

தற்போது இந்த ஏரிகள் நீர்வரத்தின்றி காணப்படுகின்றன. இதனால் சீமைகருவேல மரங்கள் மற்றும் காட்டாமணக்கு செடிகள், குளங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, இருக்கின்ற கொஞ்ச நீரையும் அதன் பங்குக்கு உறிஞ்சி வளர்கின்றன. இம்மாவட்டத்தை பொருத்தவரை முற்றிலும் மழையை நம்பியே விவசாயிகள் வாழ்வாதாரத்தைப் பெருக்கி வருகின்றனர். ஆனால் பெய்கின்ற மழை நீரைச் சேமிக்கும் வகையில் முறையான கட்டமைப்பு வசதி இல்லாததும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.

இந்த நிலையில் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலத்தில் சுமார் 10 ஏக்கர் கொண்ட நல்ல தண்ணீர்க் குளத்தில் கடந்த 3 ஆண்டுகளாகத்  தண்ணீர் வற்றாமல் உள்ளது. கரை ததும்பத் தற்போதும் தண்ணீர் உள்ளது. இந்தக் குளத்தில் உள்ள தண்ணீரையே அந்தக் கிராம மக்கள் குளிக்கவும், புழங்கவும் பயன்படுத்தி வருகின்றனர். கால்நடைகளின் குடிநீருக்குத் தேவையான தண்ணீரை கிராம மக்கள் இந்த ஏரியிலிருந்து எடுத்துச் செல்கின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் குளமும் கோடையில் வறண்டு காணப்பட்டபோது, 100 நாள் வேலைத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கிராம மக்கள் குளத்தினைப் போதுமான அளவு தூர்வாரினர். கரைகளைப் பலப்படுத்தினர். கரைகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதுடன், குளத்தில் சீமைக் கருவேல முட்கள், கோரைகள், சம்பு உள்ளிட்ட புல் பூண்டுகள் முளைக்காமல் பார்த்துக்கொண்டனர்.
இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக குளத்தில் உள்ள தண்ணீர் சற்றும் குறையாமல் உள்ளது. மேலும், குளத்தின் கரைகளை சுற்றி மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர்.

இதன் காரணமாக குளத்தில் உள்ள தண்ணீர் எப்போதும் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றது. மழைக் காலங்களில் இங்கே கிடைக்கும் தண்ணீரின் மூலம் குளத்தை முழுமையாக நிரப்பி விடும் கிராம மக்கள் கிராமத்தின் முக்கிய நீராதாரமாக இந்தக் குளத்தை எண்ணி பாதுகாக்கின்றனர்.

இது குறித்து ஊராட்சி செயலாளர் ரமேஷ் கூறுகையில், கிராம மக்களின் முழு ஒத்துழைப்போடுதான் இந்த குளத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும் முடிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் வறண்டு காணப்பட்டபோது, கிராம மக்கள் எடுத்த முயற்சியே கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் ததும்ப உள்ளது. இதனால், எங்கள் கிராமத்தில் இந்த வறட்சியின் போதும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. ஊராட்சி சார்பில் மக்களுக்கு போது மான குடிநீர் வழங்கப்படுகிறது.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பும் பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரும் குளத்திற்குச் சென்றடையும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் தண்ணீரைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதால் தண்ணீர் தற்போதும் தூய்மையாக உள்ளது.

எங்கள் கிராமத்தில் உள்ள குளத்தின் தண்ணீரை திருமானூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, பராமரிப்பு பணிகள் குறித்து அவ்வபோது விளக்கங்களை கொடுத்து செல்கின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

SCROLL FOR NEXT