சிறப்புக் கட்டுரைகள்

காரைக்காலில் 3 மாதங்களில் பொலிவு பெற்ற 178 குளங்கள்

22nd Mar 2020 06:00 AM | என்.எஸ். செல்வமுத்துக்குமாரசாமி

ADVERTISEMENT

 

'நீரின்றி அமையாது உலகு' என்ற திருவள்ளுவர் வாக்கு நிதர்சனமான உண்மை. பூமியில் 79 சதம் தண்ணீர் உள்ளதாகவும், இவை கடல் நீராகவும், மிக சொற்ப சதவீதமே நல்ல நீராக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இருக்கக்கூடிய நன்னீரும் பல்வேறு காரணிகளால் வறண்டு வருகின்றன. ஒருபுறம் மழை குறைவு, மறுபுறம் நிலத்தடி நீர்மட்டம் குறைவு என சென்று கொண்டிருந்தால், தண்ணீரின் தேவைக்கு மக்கள் வரும் காலத்தில் பெரும் பணத்தை செலவிடவேண்டிய நிலையே ஏற்படும் என்பது ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்து.

இந்தியாவைப் பொருத்தவரை பருவ மழையானது ஒருபுறம் சேதத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், ஒருபுறம் தேவைக்கான வகையில் இல்லாமலும் போவதால், பாரத நிலப்பரப்பில் வானம் தேவையான தண்ணீரை தந்தும், கடலுக்குச் செல்லும் நிலைதான் ஏற்படுகிறது.

நதிகளை இணைந்து அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற வேண்டுமென்ற திட்டமிடல் ஆட்சியாளர்களால் எடுக்கப்படவேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்டாலும் அது நிறைவேற காலங்கள் கூடுதல் தேவைப்படும். அதற்கிடையே தண்ணீரின் தேவை பிரச்னை தோன்றிவிட்டால், மக்கள் துன்பத்தை குறைந்த காலத்திலேயே அனுபவிக்க நேரிடும். எனவேதான் தண்ணீரின் சிக்கனம் குறித்தும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும் விழிப்புணர்வுகளும், செயல்பாடுகளும் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

தண்ணீர் சிக்கனம், நிலத்தடி நீர் மட்டம் உயரவேண்டுமென்ற சிந்தனை ஒவ்வொரு தனி மனிதரிடமும் ஏற்படவேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

புதுச்சேரி யூனியன் பிரசேதமானது ஒரே நிலப்பரப்பைக் கொண்டதாக இருக்கவில்லை. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் வெவ்வேறு மாநில நிலப்பரப்புக்குள் அடங்கியுள்ளன. இந்த பிராந்தியங்களின் தண்ணீர் தேவைக்கு அதைச் சுற்றியிருக்கும் மாநிலத்தையே நாட வேண்டிய நிலை உள்ளது.

புதுச்சேரி பிராந்தியம் தமிழகத்தையும், காரைக்கால் பிராந்தியம் கர்நாடகம், தமிழகத்தையும், மாஹே பிராந்தியம் கேரளத்தையும், ஏனாம் பிராந்தியம் ஆந்திரத்தையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு சார்பு நிலையிலேயே எவ்வளவு காலம்தான் இருக்கமுடியும் என்றால், அவ்வப்போது இடர்பாடுகளை தண்ணீர் விவகாரத்தில் பிராந்தியங்கள் சந்தித்து வருகின்றன. குறிப்பாக காரைக்கால் பிராந்தியம் இதில் பெரும் பிரச்னையை எதிர்கொள்கிறது. காவிரி நீர் வரத்தில் பிரச்னை, மழை பொய்த்துப் போகும்போது விவசாயம் பெரிதளவு இல்லாமல் போகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைவால் குடிநீருக்கு ஆபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. நிலத்தடி நீர் உயரவேண்டும் என்ற சிந்தனை மக்களிடையே ஏற்படுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.

குறிப்பாக காரைக்கால் பிராந்தியம் என்பது கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் திறந்துவிட்டால் மட்டுமே, தமிழகத்தின் நிலப்பரப்பின் வாயிலாக காரைக்காலுக்குள் நுழையும் நீர், வேளாண்மைக்கும், குடிநீர் தேவையையும், நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தக் கூடிய வகையில் பயன்பட்டு கடலுக்குச்  சென்றடைகிறது.

இதோடு வடகிழக்குப் பருவமழையும் காரைக்கால் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது. இவையிரண்டும் பாதிக்கப்படும்பட்சத்தில் காரைக்காலின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது.

நிரந்தரத் தீர்வுக்கான நடவடிக்கை: உச்சநீதிமன்றமானது காவிரி தொடர்பான இறுதித் தீர்ப்பில் காரைக்கால் பிராந்தியத்துக்கு 7 டிஎம்சி நீரை தரவேண்டுமென உத்தரவிட்டதன் மூலம் காரைக்காலின் வேளாண்மை, குடிநீர் போன்றவற்றுக்கான தேவை பூர்த்தியாகும் உத்தரவாதம் கிடைத்தது.

இவற்றைப் பயன்படுத்தி காரைக்காலில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற திட்டம் ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, காரைக்காலைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், காரைக்காலில் நம் நீர் திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கினார் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா. நம் நீர் திட்டத்தை  3 மாத காலத்தில் முறையாக செயல்படுத்தி காரைக்காலில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்கச் செய்திருக்கிறார் விக்ரந்த் ராஜா.

நம் நீர் திட்டத்தின் செயல்பாடுகள்: காரைக்கால் மாவட்டத்தில் பிரதான ஆறுகளாக நண்டலாறு, அரசலாறு, முல்லையாறு, திருமலைராஜனாறு, பிரவடையனாறு ஆகியவை இருந்தாலும், இவை காவிரி நீரையும், தமிழகப் பகுதியிலிருந்து வெளியேறும் வெள்ள நீரையும் ஈர்த்து, கடலுக்குக் கொண்டு சேர்க்கிறது. இந்த ஆறுகளின் குறுக்கே வேளாண்மை, குடிநீர்த் தேவைக்காகத் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவை யாவும் ஓரளவே கை கொடுக்கிறது என்ற நிலையில், நம் நீர் திட்டத்தின் மூலம் காரைக்காலில் குளங்களையும், வாய்க்கால்களையும் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவை அரசின் நிதியுதவியின்றி செயல்படுத்தப்பட்டதே பெருமைக்குரியதாகும்.

இந்த மாவட்டத்தில் மட்டும் 540 குளங்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்டறியப்பட்டது. இவை அரசு சார்பிலும், கோயில் நிர்வாகம் சார்பிலும், தனியார் கட்டுப்பாட்டிலும் உள்ளதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், தூர்வாரப்படாமலும், புதர் மண்டியும், ஆக்கிரமிப்புகளாலும் குளம் போன்ற காட்சியே இல்லாமல் பல்லாண்டுகளாக இருந்த பல குளங்களை தேர்வு செய்தது. கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதை அவர்களது நிதியின் மூலமாகவும், அரசு சார்பில் உள்ளவற்றை அரசுத்துறையினர் சமூகப் பொறுப்புணர்வு மூலமும் தூர்வார நடவடிக்கை எடுத்தது. 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கிய குளங்கள் தூர்வாரும் திட்டம் செப்டம்பர் நிறைவுக்குள் அதாவது காவிரி நீரும், மழை நீரும் குளங்களில் சேர்க்கும் விதத்தில் 178 குளங்களாக முடிக்கப்பட்டது.

ஒவ்வொரு குளமும் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் முதல் பரப்பைக் கொண்டதாகும். இதோடு நம் நீர் திட்டத்தின் மூலமாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாகவும் காரைக்கால் மாவட்டத்துக்குள் 720 கிலோ மீட்டர் அளவில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு முடிக்கப்பட்டன. 

குளங்கள் தூர்வாரப்பட்டதன் மூலம் ஏறக்குறைய 1 டிஎம்சி காவிரி நீர், மழை நீரைச் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவையாவும் பல்லாண்டுகளாகத் தண்ணீரைக் காணாததாகவும், குட்டை போன்ற காட்சியில் தண்ணீரை இருப்பு வைத்த நீர் நிலைகளாகும். 3 மாத காலத்திற்குள் சீரிய திட்டமாக நிறைவேற்றி முடித்த அப்போதைய ஆட்சியர் விக்ரந்த் ராஜாவுக்கு முதல்வரும், துணை நிலை ஆளுநரும், தேசிய அளவில் பிற முக்கிய பிரமுகர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

நம் நீர் திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட 540 குளங்களில் 178 இல் நீர் நிரப்பிய நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கிடைத்த தண்ணீர் முழுமையாக நிரப்பப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

நம் நீர் திட்டத்தின் செயல்பாடுகளை அறிந்த தேசிய நீர் மேலாண்மை வாரியத்தினர் காரைக்காலில் ஆய்வு செய்து முந்தைய நிலையைக் காட்டிலும் 10 அடி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. இது மேலும் 3 ஆண்டுகள் வரை பயனளிக்கக்கூடியது என தெரிவித்துச் சென்றனர்.

குளங்களும், வாய்க்காலும் தூர்வாருதல்  என்பது இதில் பங்களிப்பாளராக இருந்தோருக்கு அந்த காலக்கட்டத்தில் நிதி செலவிடுவதாலும், உடல் உழைப்பாலும் சற்று வெறுப்பாக இருந்திருந்தாலும், தண்ணீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, மக்கள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதன் மூலம் பங்காளர்களாலும், பெரும்பான்மையினராலும் பாராட்டக்கூடியதாக மாறியிருக்கிறது பெருமைப்படக்கூடியது.

காரைக்கால் திட்டத்தை முன்வைத்து, புதுச்சேரியில் 'நீரும் ஊரும்' என்ற திட்டத்தை புதுச்சேரி முதல்வர் அறிவித்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியதே, நம் நீர் திட்டத்தின் வெற்றியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

திட்டத்தால் குளங்கள் மேம்பட்டாலும், குளங்களை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டதும், குளத்தையும், மரக்கன்றையும் பராமரிக்க வேண்டியது அந்தந்த பகுதியினருக்குப் பொறுப்பாக அளிக்கப்பட்டதும், இதுவரை சற்றேரக்குறைய நல்ல முறையிலேயே இருந்துவருகிறது.

நீர் நிலைகள் மேம்பாட்டால் பயன்கள்: குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதன் மூலம் கடந்த ஆண்டு இறுதியில் தண்ணீர் காவிரி மூலமாகவும், மழை மூலமாகவும் சேமிக்க முடிந்தது. ஆற்றில் தேங்கியிருக்கும் தண்ணீர், குளத்தில் உள்ள தண்ணீரைக்கொண்டு விவசாயம் செய்யப்படுவதோடு, குளங்களில் உள்ள நீரை பயன்படுத்தி தோட்டப் பயிர் சாகுபடியும் நீர்நிலையோர கிராமங்களில் பரவலாக  நடைபெறுகிறது.

இந்த செயல்பாடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்ததாகவும், இப்போது பரவலாக வேளாண்மை பசுமையாக இருப்பதற்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து சேமிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்ததே என விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

உலக தண்ணீர் நாளில், காரைக்கால் பிராந்தியத்தில் செய்யப்பட்டிருக்கும் தண்ணீரின் அவசியத்தை உணரச் செய்த நடவடிக்கை மக்கள்  ஒரு உறுதிமொழியாக ஏற்று, 178 குளங்களைத் தாண்டி மேலும் குளங்களை சீர்செய்யும் நடவடிக்கையில் களமிறங்கவேண்டும். இதுவொரு இயக்கமாக மாறவேண்டும். மாவட்டத்தின் இப்போதைய அரசு நிர்வாகமும் இதில் மக்களை பங்கெடுக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். காரைக்கால் செயல்பாடுகள் பிற பகுதிகளில் முன் மாதிரியாக எடுத்து செயல்பட்டால் சந்ததி நம்மை வாழ்த்தும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tags : worldwaterday
ADVERTISEMENT
ADVERTISEMENT