சிறப்புக் கட்டுரைகள்

நாகரத்தினம்மாள் முயற்சியால் ஆராதனையில் பெண்களுக்குக் கிடைத்த உரிமை

8th Mar 2020 06:00 AM | வி. என். ராகவன்

ADVERTISEMENT

 

பக்தி உணர்வும், செல்வாக்கும் நிறைந்த கர்நாடக இசை உலகில் வேறு யாரும் செய்யாத, செய்யத் தோன்றாத ஒரு மகத்தான சேவையை பெங்களூர் நாகரத்தினம்மாள் செய்துள்ளார். 

இவர் 1878 ஆம் ஆண்டு நவ. 3ம் தேதி பெங்களூரில் பிறந்தார். இவரது தந்தை வழக்குரைஞர் சுப்பாராவ். தாய் புட்டலட்சுமி அம்மாள். நாகரத்தினத்துக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது சுப்பாராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புட்டலட்சுமி அம்மாள் பிரிந்தார். எனவே, புட்டலட்சுமி அம்மாள் தன்னந்தனியாக பெரும் சிரமங்களுக்கு இடையே நாகரத்தினம்மாளை வளர்த்து ஆளாக்கினார். இதனால், இளம் வயதிலேயே நாகரத்தினம் கடும் போராட்டத்தைச் சந்தித்தார்.

நாகரத்தினம் சிறு வயதிலேயே கிரிபட்டா திம்மையா என்பவரிடம் சம்ஸ்கிருதமும், இசையும் பயின்றார். நாகரத்தினத்துக்கு 9 வயதுக்குள்ளேயே இசையிலும், நாட்டியத்திலும், வடமொழியிலும் புலமைப் பெற்றார். பின்னர், இவருடைய மாமா வெங்கடஸமப்பாவிடம் வயலின் கற்றார். இதையடுத்து, வாலாஜாபேட்டை கிருஷ்ணசாமி பாகவதரிடம் சீடரானார். பெங்களூர் கிட்டண்ணாவிடம் பரதம் பயின்றார். மேலும், சென்னை திருவேங்கடாசாரியிடம் அபிநயம் பயிற்சி பெற்றார்.

ADVERTISEMENT

தன்னுடைய 15 ஆம் வயதில் வீணை சேசண்ணா இல்லத்தில் முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இவர் இசையோடு கூடிய கதாகாலட்சேபம் செய்வதில் வல்லவர். அந்தக் காலகட்டத்தில் கதாகாலட்சேபத்தை ஆண்கள் மட்டுமே செய்து வந்தனர். அப்போது, முதல் முதலாகப் பெண் கதாகாலட்சேபம் செய்த பெருமை நாகரத்தினத்தையே சாரும்.

பின்னர், நாகரத்தினத்துக்கு சென்னையிலும் ஆதரவு பெருக எல்லோரும் இவரை பெங்களூர் நாகரத்தினம் என அழைக்கத் தொடங்கினர். இவர் 26 ஆண்டுகளில் 146 நகரங்களுக்குப் பயணம் செய்து, 1,235 கச்சேரி செய்தார். இதில், சென்னையில் மட்டும் செய்த கச்சேரிகளின் எண்ணிக்கை 849. 

இதையடுத்து, நாகரத்தினம்மாள் திருவையாறில் குடியேறினார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். இதன் விளைவாக, தியாகராஜரின் சமாதியை தேடிச் சென்ற நாகரத்தினம்மாளுக்கு வேதனையே மேலிட்டது. சுற்றிலும் செடிகளும், புதர்களும் அடர்ந்து கிடந்தன. பல சமாதிகளுக்கு இடையே தியாகராஜரின் சமாதி இருந்ததைத் தேடிக் கண்டுபிடித்தார். பராமரிப்பின்றி இருந்த தியாகராஜர் சமாதிக்கு விமோசனம் கொடுத்தார். நாகரத்தினம்மாள் வருவதற்கு முன்பு தியாகராஜர் சமாதி கட்டடம் இன்றி பிருந்தாவனம் மட்டுமே இருந்தது. நாகரத்தினம்மாள் தனக்குச் சொந்தமான நிலங்களை விற்று, கொஞ்சம் கொஞ்சமாக சமாதியைச் சுற்றியிருந்த நிலங்களையும் வாங்கத் தொடங்கினார்.

பின்னர், 1921 ஆம் ஆண்டு அக். 27ம் தேதி சமாதியை கட்டினார். 1925ஆம் ஆண்டு ஜன. 7ம் தேதி தியாகராஜர் ஆஸ்ரமத்துக்கு குடமுழுக்கு நடத்தினார். இவர் தியாகராஜ சுவாமிகளுக்கு செய்த சேவை மிகப் பெரியது.
இதனிடையே, 1904 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தியாகராஜ ஆராதனை விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, தில்லைஸ்தான சகோதரர்களான நரசிம்ம பாகதவர், பஞ்சு பாகவதர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக நரசிம்ம பாகவதரின் அணி பெரிய கட்சி என்றும், பஞ்சு பாகவதரின் அணி சின்னக் கட்சி எனவும் இரு பிரிவுகளாகப் பிரிந்தன. இந்த இருகட்சிகளும் தனித்தனியாக ஆராதனை நடத்தி வந்தது என்றாலும், தன் சொத்தையெல்லாம் விற்று தியாகராஜருக்கு கோயில் எழுப்பிய நாகரத்தினம்மாளை இரு கட்சிகளும் சேர்க்கவில்லை. ஆராதனையில் பெண்கள் பாடக்கூடாது என்ற எழுதப்படாத விதி அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இதை மாற்றுவதற்கு இரு கட்சிகளிடமும் நாகரத்தினம்மாள் போராடவில்லை. மாறாக பெண்களுக்கென்று தனியாக ஒரு கட்சியை உருவாக்கினார். ஆராதனை நாளன்று 40 பெண்களுடன் வந்த நாகரத்தினம்மாள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி புரட்சி செய்தார்.

இதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து இசைக் கலைஞர்களான தேவதாசியரை வரவழைத்து, சமாதியில் ஆராதனை நடத்தினார். இதை அருகில் இருந்த செவ்வாய்க்கிழமைப் படித்துறையில் நின்று உள்ளூர் மக்கள் வேடிக்கை பார்த்தனர்.  

ஏற்கெனவே, இரு கட்சிகள் இருந்த நிலையில் நாகரத்தினம்மாளின் பெண்கள் கட்சியும் சேர்ந்து கொள்ளவே, தியாகராஜ ஆராதனை மூன்று இடங்களில் நடைபெற்றது. முதல் இரு கட்சிகளிலும் கச்சேரி செய்ய முடியாத ஆண் பாடகர்கள் நாகரத்தினம்மாளின் பெண்கள் கட்சியில் சேர்ந்து பாடத் தொடங்கினர். தன்னைப் புறக்கணித்தவர்களையும் மேடைக்கு அழைத்து வந்து பாடச் செய்து பாராட்டி, அவர்களிடையே மனமாற்றத்தை ஏற்படச் செய்தார்.

இந்நிலையில், ஐ.சி.எஸ். அதிகாரி எஸ்.ஒய். கிருஷ்ணசாமி, இசைக் கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயரின் முயற்சியால் பிரிந்து கிடந்த மூன்று கட்சிகளும் இணைக்கப்பட்டன. இதில், நாகரத்தினம்மாளின் பெரும் முயற்சியால் ஆராதனையில் பெண்களுக்கும் பாடும் உரிமை கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ஆராதனை விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போது முதல் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஆராதனையில் பங்கேற்று பாடுகின்றனர். இதன் மூலம், ஆராதனையில் பெண்கள் திரளாகக் கலந்து கொள்கின்றனர். அன்று நாகரத்தினம்மாள் செய்த புரட்சியே இதற்குக் காரணம். முதலில் இதை எதிர்த்தவர்களெல்லாம் நாகரத்தினம்மாளின் புரட்சியைப் பின்னாளில் பாராட்டினர்.

தியாகராஜர் விழாவாக நடந்த அந்த நிகழ்ச்சியை முதல் முதலில் ஆராதனை விழாவாக 5 நாள்கள் நடத்திய பெருமை நாகரத்தினத்தையேச் சாரும். தியாகராஜருக்காக அனைத்தையும் தியாகம் செய்தவர் நாகரத்தினம்மாள். இவர் தன்னுடைய இறுதி காலத்தில் திருவையாற்றிலேயே கழித்தார். தன்னுடையே செல்வம், நகைகள் எல்லாம் தியாகராஜருக்கே கொடுத்தார். மேலும், தன்னுடைய இசை, ஆற்றல் மட்டுமல்லாமல் உயிரையும் தியாகராஜருக்கே அர்ப்பணித்தார். 

அவர் எதையும் விரும்பாமல் அனைத்தையும் தியாகராஜருக்கே அளித்து இசை பரப்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் 1952 ஆம் ஆண்டு காலமானார். தன்னுடைய கடைசி ஆசையாக தன்னுடைய சமாதியை தியாகராஜருக்கு எதிரில் அமைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்படி, இவரது சமாதி தியாகராஜரின் சமாதிக்கு எதிரில் வைக்கப்பட்டுள்ளது. ஆராதனை நாளில் இவருக்கும் தீபராதனை காட்டி வருவது இப்போதும் தொடர்கிறது.

Tags : womensday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT