சிறப்புக் கட்டுரைகள்

பெண் விடுதலை என்பது மன விடுதலை

8th Mar 2020 06:00 AM | அகிலா கிருஷ்ணமூர்த்தி

ADVERTISEMENT

 

ஒவ்வொரு ஆண்டின்  மகளிர் தினத்திற்கான எழுத்துகள் பெண்களிடமிருந்தே எழுகின்றன. பெண்கள் எல்லாக் காலத்திலும் போராடவே செய்கிறார்கள். எந்தக் காலகட்டம், எதற்காக, எங்கெங்கு, யாருக்காக என்பதெல்லாம் மிக முக்கியமானவை. தங்கள் உயிரை துச்சமாக மதித்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்த பெண் போராளிகளான கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன், மணலூர் மணியம்மாள், நீலாவதி போன்றவர்களை நினைவில் நிறுத்தாமல் கடந்துபோக முடியாது. குடும்பத்தில் இருந்துகொண்டே சமூக மாற்றத்திற்காக இரத்தம் சிந்திய மக்கள் தலைவர்களின் துணைவியார்கள் என்றைக்கும் மகத்தானவர்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களின் மனைவியார் ரஞ்சிதம் அம்மாள் சமீபத்தில் காலமானார். அவரை நினைவு கூறும் வகையில் தோழர் சொல்கிறார் “எந்த ராத்திரி வீட்டை விட்டுக் கிளம்புவேன். எந்த ராத்திரி வீடு திரும்புவேன்னு தெரியாத ஒரு வாழ்க்கை என்னோடது. உண்ணாவிரதம் இருக்கக் கெளம்பினாலும், ஜெயில்ல இருக்க வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை வருத்தமாவோ, மறுப்பாவோ சொல்லாம அனுப்பி வைப்பாள். கண்ண மூடுனா முழுக்க ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு” என்கிறார்.

பெ. மணியரசு அவர்களின் துணைவியார் லட்சுமி அம்மாளின் வாழ்க்கை வரலாறை வாசிக்கிறபோதுகூட தமிழ் தேசிய பேரியக்கத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் இருந்து பெரும் பங்காற்றியவர் என்பதை அறிந்து கொள்ள முடியும். உழைக்கும் பெண்களே என் முன்னேற்றத்திற்கு காரணமானவர்கள் என்று லட்சுமி அவர்கள் சொல்கிறபோது தஞ்சையைச் சுற்றியிருக்கும் கிராமத்து மக்களோடு தன்னைக் கரைத்துக்கொண்ட மாண்பு புரியும்.

ADVERTISEMENT

நோயுற்ற காலத்திலும் சிறிதும் மனம் தளராது சாதி ஒழிப்பு, பெண் விடுதலை எனத் தன் வாழ்நாட்களை சமத்துவ மேடைகளுக்கு அர்ப்பணித்தவர் தந்தைப் பெரியார். அவரின் ஆலோசனைப்படி மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டார். இந்தியப் படைகளில் பெண்கள் முக்கியத்துவம் வகித்தாலும் அரசியலில் பெண்கள்  அரிதாகவே களமிறங்கினார்கள். பெரியாரின் நிழலும் சாயலுமாகத் தொண்டு செய்தவர் மணியம்மை. 

அன்னை மீனாம்பாள் போராளிகள் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். அம்பேத்காரியத்தில் தன்னை சேர்த்துக்கொண்டு இணையர் சிவராஜ் அவர்களுடன் இணைந்து தலித் பெண்களின் முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றியிருக்கிறார். ஒரு பெண்ணின் தனிப்பட்ட சமூக அக்கறையால் மட்டுமே இவ்வளவுதூரம் பயணிக்க முடியும். உலகலாவிய உரிமைப் போராட்டங்களில் பெண்களின் குரல் வலிமையானது.

பசுமைப்பகுதி நிறுவனர். வான்காரி மாத்தாய். கென்யநாட்டுப் போராளி. தன் மண்ணிற்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் போராடியவர். பழங்குடி மக்களின் வாழ்க்கையோடு இணைத்துக்கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதும் இலக்கியங்களில் குறிப்பாகக் ‘காட்டில் உரிமை’  போன்ற நாவலின் வழி தன் பங்களிப்பைச் செய்தவர் மகாசுவேதாதேவி.

அருந்ததிராயின் ‘நொறுங்கிய குடியரசு’ கட்டுரைகள், “நாம் வரலாறு அற்றவர்களாக இருக்கிறோம். வரலாற்றைத் தொலைத்தவர்கள் அடிமைகளாகிவிடுகிறார்கள்” போன்ற ரொமீலாதாப்பரின் எழுத்துகளும் குடியுரிமைக்கான மிகப்பெரிய அரசியலை முன்னிறுத்தும். பெண்கள் முன்னெடுக்கிற போராட்டங்கள் எதிராளிகளை அச்சுறுத்தும். நிலைகுலையச் செய்யும். அதற்குக் காரணம் வெற்றியோ, தோல்வியோ அல்ல. நின்று களமாடுகிற அவர்களின் ரௌத்ரகுணம். அதற்காகவே, பெண்கள் வீதியில் இறங்கிப் போராடக்கூடாது என்கிற அடக்குமுறை லகான்கள் இழுத்துப் பிடிக்கப்படுகிறது. 

கலாச்சாரப் பண்பாடுகளை மீட்டெடுப்பது, குடிநீர் பிரச்னை, மதுக்கடைகளை மூடவேண்டியும் எண்ணற்ற பெண்கள் சாலைகளை மறித்துப் போராடுகிறார்கள். நிர்பயா வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு கொடூரர்களையும் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குப் பின்னால் பெருவாரியானப் பெண்களின் வெவ்வெறு வகையான போராட்ட வடிவம் இருக்கிறது. பெண்கள் என்றால் நகைகளுக்கும் ஆடைகளுக்கும் ஆசைப்படுபவர்கள் என்கிற திரையை கிழித்து எறிந்தவர் கொல்லம் அருகேயுள்ள சடையமங்லத்தைச் சேர்ந்த அஜ்னா, தனக்கு மஹராக நூறு புத்தகங்கள் வாங்கித்தர வேண்டும் என்ற கோரிக்கையை மணமகனிடம் வைத்தவர். 

சமீபத்திய அரசியல் சூழலில் தங்களின் வாழ்வுரிமைக்காக முன்பிருந்ததைவிட வீரியத்தோடு சொல்லப்போனால் பலமான சொற்களின் மூர்க்கத்தோடு பெண்கள் போராடுகிறார்கள். ஷாகின் பாக் போராட்டத்தில் 90 வயது மதிக்கத்தக்க அஸ்மா கடூன் என்பவர் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது போராட வேண்டியத்தேவை என்ன இருக்கிறது? நாங்கள் இந்த நாட்டின் மக்கள். எங்கள் தலைமுறைகளுக்கும் அப்படியே என்கிற அடையாளத்தை அங்கீகாரத்தை வாங்கிக்கொடுத்துவிட வேண்டும் என்கிற முனைப்பு. 

தலைநகரங்களில் நடக்கும் போராட்டங்களில் பெண்களின் தலைமைப்பண்பு தீர்வு காணாமல் விடாது என்பதான நெருக்கடியை அரசுக்கு கொடுத்திருக்கிறது. கூட்டத்தில் ஒரு பெண் பேசுகிறார் “ நாங்கள் வீதிகளில் இறங்கி வரமாட்டோம். அப்படி வந்துவிட்டால் ஒன்று வெற்றியடைவோம் இல்லையென்றால் உயிர்விடுவோம் “ என்கிறார்.

எப்படியான சொல். என்ன மாதிரியான தீர்க்கமான போராட்டம் அது! டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காவலர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டபோது மாணவி ஒருவர் ஒற்றை விரலை உயர்த்தி “என் சகோதரனின் மீது கை வைத்தால் நடப்பதே வேறு” என்கிறார். பெண்கள் ஆண்களை பாதுகாக்கத் துவங்கிருக்கிறார்கள். தாங்கள் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை சமூக மாற்றத்திற்காகவும் எளிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் செலவிடுகிறார்கள். பெண் விடுதலை என்பது மன விடுதலை. அடக்குமுறையிலிருந்து விடுதலை. தனிப்பட்ட தேவைக்காகக் குரல் உயர்த்த தயங்கிய பெண்கள் இன்றைக்கு உலகம் அதிர முழக்கமிடுகிறார்கள். படித்த இளம் பெண்கள் கூர்மையான அறிவாயுதங்களுடன் அரசியலுக்குள் இறங்குவார்கள். மக்களுக்கு எதிரான அரசியல் சட்டங்களை அவர்கள் திருத்தும் நாளொன்று வரும். காத்திருப்போம்.

Tags : womensday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT