சிறப்புக் கட்டுரைகள்

பெரும் நம்பிக்கையை விதைக்கும் பெண்களின் போராட்டம்

8th Mar 2020 06:00 AM | ஜி. மஞ்சுளா

ADVERTISEMENT


பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பெண்கள் அமைப்புகளால் மட்டுமே பெரிதும் அனுசரிக்கப்பட்ட மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம் இன்று ஒரு திருவிழாவை போலவே மாறிவிட்டது. பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள், தொழிற்கூடங்கள் என எல்லா இடங்களிலும் மகளிர் தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மார்ச் 8 ல் மட்டுமல்ல. மார்ச் மாதம் முழுவதுமே மகளிர் தின நிகழ்வுகள் நடைபெறுவதை இப்போது நாம் காண்கிறோம். அனைத்து தரப்பினராலும் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. 

அதேசமயத்தில் இத்தினமும் ஒரு சடங்காக மட்டும் மாற்றப்பட்டு விட்டதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏனெனில், உலக மகளிர் தினம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தீர்மானம் 1910ல் நிறைவேற்றப்பட்டு அதன்பின் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மகளிர் தின நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டு வந்தாலும் பாலின பாகுபாடு இன்றளவும் தொடர்வதையும் உலகின் ஒரே ஒரு நாடு கூட பாலின சமத்துவத்தை அடையவில்லை என்பதையும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக் காட்டியுள்ளது. 

அதனால்தான் இந்த ஆண்டு அதன் மகளிர் தின முழக்கமாக “சமத்துவமான ஒரு எதிர்காலத்தை உருவாக்க பெண்களுக்கான உரிமையை  உணரும் ஒரு தலைமுறையாக நான் இருக்கிறேன்”  என்பதை முன்வைத்து இயக்கங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. மதம், இனம், வயது, பாலினம் என்ற அனைத்து வேறுபாடுகளை கடந்து அனைவரும் பெண்களின் உரிமைக்காக நிற்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

இன்றளவும் கல்வி மற்றும் உடல்நலம் போன்ற அடிப்படையான உரிமைகள் கூட பெண்களுக்கு மறுக்கப்பட்டே வருகிறது. பணிடங்களில் ஆண்களை காட்டிலும் குறைவான சம்பளமே பெண்களுக்கு கிடைக்கிறது. திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தைகள் உட்பட எதைக் குறித்தும் சுயமான முடிவுகளை பெண்கள் எடுக்க முடிவதில்லை. அனைத்திலும் ஆண்களின் குடும்பங்களின் தலையீடு தொடர்கிறது. எனவேதான் பெண்களின் உரிமைகளை தலைமுறை கடந்து அனைவருமே உணர வேண்டும் என்பது இப்பிரசாரங்களின் நோக்கமாக முன்நிறுத்தப்படுகிறது. 

ADVERTISEMENT

இந்தியாவை பொறுத்தவரை 2012ல் டெல்லியில், ஓடும் பேருந்தில், இளம் மருத்துவ மாணவி பாலியல் பாலியல் வன்முறை செய்யப்பட்டு மரணமடைந்த சம்பவத்தில் இருந்தே பெண்களுக்கான பிரச்னைகளுக்காக பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பது நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தியாவிலும், தமிழகத்திலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பழமையான இச்சமுகத்தின் அங்கீகாரத்துடன் தான் நடைபெற்று வருகின்றன என்பதிலும் சந்தேகமில்லை. 

துரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 31 நாட்களே ஆன பெண்குழந்தையை அக்குழந்தையின் தந்தை, தாய் மற்றும் தாத்தா சேர்ந்து கொன்றிருக்கிறார்கள். இச்சம்பவம் நடந்தது ஏதோ பத்தாண்டுகளுக்கு முன்பு அல்ல. இந்த ஆண்டு மார்ச் 2 அன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. காரணம் ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை அந்த தம்பதிகளுக்கு இருக்கிறது. அடுத்த குழந்தையும் பெண் என்பதால் கொல்லப்பட்டிருக்கிறது. 

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி தாலுகாவில் உள்ள கோவிலப்புரம் கிராமம் உட்பட மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் சில கிராமங்களில் பெண் மீது நிகழ்த்தப்படும் நுட்பமான வன்முறைகள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன.

மதுரையில் இருந்து 50 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கோவிலப்புர கிராமம். இக்கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து அரை கிமீ தூரத்தில் இரு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மாதவிடாய் காலங்களில் அந்த இரு கட்டங்களில் தான் பெண்கள் கட்டாயம் தங்கி இருக்க வேண்டும். அவை வெறும் இரண்டு அறைகள் மட்டும் தான். கழிப்பிட வசதி அதில் கிடையாது. அதற்கு வெட்டவெளிக்குத்தான் செல்ல வேண்டும். அக்கிராமத்தின் மக்கள் தொகை ஏறக்குறை 3000 இருக்கும். 

கோவிலப்புரம் மட்டுமல்ல. புதுபட்டி, கோவிந்தநல்லூர், அலகாபுரி, சின்னையாபுரம் கிராமங்களிலும் இதே நிலைதான். அக்கிராமத்தின் சிறு தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்ற காரணத்திற்காக காலம்காலமாக இத்தகைய நடைமுறை அங்கு பின்பற்றப்படுகிறது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துள்ள 21ம் நூற்றாண்டில் கூட இப்படி நடந்துக் கொண்டிருப்பது ஒரு பேரவலம் தான்.  இதை பெண்கள் மீற நினைத்தாலும் சமூகம் விடாது என்பதே நிதர்சனம். எனவேதான் பெண்களின் உரிமைகளைப் பற்றி உரத்து பேச வேண்டியது இன்றைக்கும் அவசியமானதாக இருக்கிறது. 

ஆனால், பெண்கள் தங்கள் தனிப்பட்ட உரிமைகளை பெறுவது என்பது சமூக மாற்றத்தின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஒட்டுமொத்த சமூக மாற்றத்தில் பங்கேற்கும்போதே அவர்களுடைய தனிப்பட்ட கோரிக்கைளும் நிறைவேறும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. மகளிர் தின வரலாறும் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால், அதன் உண்மையான வரலாற்றை பெண்கள் அறிந்திருக்கிறார்களா? மகளிர் தினத்தின் தோற்றம் என்ன? என்பதை இச்சமூகமும், குறிப்பாக பெண்களும் அறிந்திருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியது.
மகளிர் தினத்தின் உண்மை வரலாறு பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. அதற்கான காரணம் அது ஒரு எழுச்சிமிகு வரலாறு. பெண்கள் பெரும் சாதனைகள் படைத்த போதும், அதை சமூகம் அங்கீகரிப்பதில்லை. காலந்தோறும் பெண்களின் சாதனைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டே வருகிறது. ஆனால், மகளிர் தின உண்மை வரலாறு மறைக்கப்பட்டதற்கு காரணம் அது பெண்களால் நிகழ்த்தப்பட்டது என்பது மட்டுமல்ல. அதன்பின் அரசியலும் உள்ளது.

மகளிர் தின வரலாறு என்பது போராட்டத்தின் வரலாறு. புரட்சியின் வரலாறு. உலகின் முதல் சோசலிச சமூகம் உருவாகக் காரணமான ரஷ்ய புரட்சியை உழைக்கும் பெண்கள் துவக்கி வைத்த தினம் தான் மார்ச் 8 மகளிர் தினம். 

1910 ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த உலக சோஷிலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் “உலக மகளிர் தினம்” கடைப்பிடிக்க வேண்டும் என்ற தீர்மானம் பெண் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கினால் முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டது. அன்றிலிருந்து பல நாடுகளில் மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால் மார்ச் 8 அன்று தான் மகளிர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று முடிவானது.

1921ம் ஆண்டு ஜூன்  9 முதல் 15 வரை மாஸ்கோவில் நடைபெற்ற உலக கம்யூனிஸ்ட் பெண்களின் இரண்டாவது மாநாட்டில் தான். மார்ச் 8ஐ மகளிர் தினமாக அனுசரிக்க வேண்டும்  என்ற தீர்மானம் அந்த மாநாட்டில் தான் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்பே முறையாக உலகம் முழுவதும் மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவின் பெண் தொழிலாளர்கள் அன்றைக்கு அங்கு கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஜார் மன்னனை எதிர்த்து “ரொட்டி வேண்டும் போர் வேண்டாம். சமாதானம் வேண்டும்”  என்ற முழக்கங்களோடு வீதிகளில் இறங்கி பெரும் போராட்டத்தை தொடங்கினார்கள். அந்த பெரும் போராட்டம் தான் மக்களின் கிளர்சியாக மாறி நவம்பர் 7 அன்று லெனின் தலைமையில் நடைபெற்ற உலகின் முதல் சோசலிச புரட்சியாக உருவெடுத்தது. அதை நினைவுகூறும் விதமாகவே மார்ச் 8 என்பது முடிவானது.

புரட்சி நடந்து லெனின் தலைமையில் அமைந்த சோசலிச அரசு ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பெண்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கான உரிமைகளுக்காக பல சட்டங்களை இயற்றியது. அனைவருக்கும் வாக்குரிமை, சமவேலைக்கு சம ஊதியம், கருவுற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கு முன்பும் பின்பும் 2மாத சம்பளத்துடன் கூடிய விடுப்பு, குழந்தைகளை பராமரிக்க ஓய்வறைகள், சட்டப்பூர்வமான கருக்கலைப்பு என பெண்களின் நலனுக்காக உலகிலேயே முதன்முதலாக சட்டங்கள் இயற்றப்பட்டன. ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்காக பெண்கள் நடத்திய போராட்டம் அவர்களது தனிப்பட்ட உரிமைகளையும் மீட்டுத் தந்தது என்பதே இதிலிருந்து பெண்கள் கற்கும் பாடம் எனலாம்.

இன்றைக்கு இந்தியாவில் குஜராத்தில் ஸ்ரீ சகஜானந் பெண்கள் மையத்தில் படித்து வரும் 68 பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளாடை களையப்பட்டு மாதவிடாய் ஆகியிருக்கிறாதா என பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இழிவான சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. அக்கல்லூரி வாளகத்தினுள் இருக்கும் கோயிலிலும், சமையலறையிலும் மாதவிடாய் ஆகியுள்ள பெண்கள் நுழையக் கூடாது என்ற விதிமுறையை பெண்கள் மீறுகிறார்களா என்பதை பரிசோதிக்க இத்தகைய கீழ்தரமான செயலை கல்லூரி நிர்வாகம் நடத்தியுள்ளது. இது மத விவகாரம் அதனால் காவல்துறை புகார் எடுத்துக் கொள்ளாது என புகாரளிக்க விரும்பிய மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து மிரட்டியுள்ளது கல்லூரி நிர்வாகம். 

படித்துக் கொண்டிருக்கும் பெண்களை மட்டுமல்ல படித்து முடித்து இராணுவத்தில் பணியாற்றும் பெண்களும் பாகுபாட்டிற்கு ஆளாகின்றனர். விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் குறுகிய காலம் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வருவதை எதிர்த்து கடற்படை பெண் அதிகாரிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'இராணுவத்தில் கமாண்டர் போன்ற பதவியிடங்களுக்கு ஏன் பெண்களை தேர்வு செய்யக்கூடாது?” என எழுப்பிய கேள்விகளுக்கு “ஆண்களை ஒப்பிடும் போது பெண்களின் உடல் வலிமை மிகவும் குறைவு, அதேபோல் கர்ப்பக் காலங்களில் அவர்கள் நீண்ட விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளைப் பராமரிப்பது, கணவர்களின் தேவைகளை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளன. மேலும், ராணுவத்தில் பணிபுரியும் ஆண்கள்  உடல் வலிமையில் குன்றிய பெண் அதிகாரிகளின் உத்தரவுகளை கேட்டு நடப்பதும் கேள்விக்குறிதான்' என பதிலளித்துள்ளனர்.

1930களில் ஹிட்லர் பெண்களுக்கு எதிராக முன்வைத்த 'ஓண்ய்க்ங்ழ், ஓன்ஸ்ரீட்ங், ஓண்ழ்ஸ்ரீட்ங்' அதாவது, குழந்தை பெற, சமையல்  செய்ய, சர்ச்சுகளில் பிரார்த்திக்க மட்டுமே பெண்கள் உரிமையுள்ளவர்கள் என்ற முழக்கத்தை ஏற்படுத்தினார். 

ஆனால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள உச்ச நீதிமன்றம் பணிகளில் பாலின பாகுபாடு கூடாது என வலிறுத்தி பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. இ

தில்லியில் நடந்த வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி முரளிதர் இரவோடு இரவாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளை பெண்கள் சம்பந்தபட்ட விஷயங்களிலும் இவை நடக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 

அது மட்டுமல்ல தற்போது மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. அதோடு இணைந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவை ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் தான் என நிருபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுகிறது. சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கும் இத்திட்டம் இந்துத்துவ கருத்தியலை நிலைநிருத்துவதற்கு மட்டுமல்ல. 

கடந்த ஜனவரி 31 அன்று மத்திய அரசு தாக்கல் செய்த 2020-21 பட்ஜெட்டில் பெண்களுக்கான உயர்கல்வி குறித்தோ அவர்களின் வேலைவாய்ப்பு குறித்தோ எதுவுமே இல்லை. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடும் பெருமளவு குறைக்கபட்டிருக்கிறது. இதனால் ஒரளவு வேலைவாய்ப்பை பெற்றிருந்த கிராமப்புற பெண்கள் அதையும் இழக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

இவையனைத்தையும் உணர்ந்துதான் இன்றைக்கு பெண்கள் வீதிகளை போராட்டகளமாக்கி வருகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டதைக் கண்டித்து டிசம்பர் 14 அன்று உள்ளூரில் உள்ள 15 இஸ்லாமியப் பெண்களால் தொடங்கப்பட்ட போராட்டம் தொடர் போராட்டமாகி குடியரசு தினமான ஜனவரி 26 அன்று  ஒரு லட்சத்தையும் தாண்டியது. ஒரு புதிய வகையான சத்தியாக்கிரக போராட்டம் என அழைக்கப்படும் 'ஷாஹின் பாக்' போராட்டம் முழுமையாகப் பெண்களால் தலைமை தாங்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது. போராட்டம் துவங்கிய முதல் நாளில் இருந்தே குழந்தைகளும் இதில் பங்கேற்று வருவது போராட்டக்களத்தை மேலும் அழகாக்கி உள்ளது. குழந்தைகள் பள்ளி சென்று திரும்பிய பின் போராட்டக்களத்திலேயே படிப்பது, வரைவது, பாடுவது என இருக்கிறார்கள்.

ஷாஹின் பாக்கைத் தொடர்ந்து இதே வகையான தொடர் போராட்டங்கள் மேற்குவங்கம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், பிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் துவங்கிய இப்போராட்டம் மதுரை, சேலம், திருப்பூர் என பரவி வருகிறது. 

இந்திய பெண்களின் போராட்ட வரலாற்றின் புதிய அத்தியாயத்தை பெண்கள் எழுதத் துவங்கியிருப்பது மார்ச் 8 உலக மகளிர் தினத்தில் நமக்கு சமூக மாற்றத்திற்கான பாலின சமத்துவத்திற்கான பெரும் நம்பிக்கையையும் நம்முள் விதைக்கிறது.

Tags : womensday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT