சிறப்புக் கட்டுரைகள்

பெரியார் வீட்டுப் புதுமைப் பெண்கள்

8th Mar 2020 06:00 AM | நசிகேதன்

ADVERTISEMENT

 

பெண் கல்வி மற்றும் பெண்ணுரிமைக்கு உலகளவில் முதல் குரல் கொடுத்த இந்திய சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் ஈ.வெ. ராமசாமியின் வீட்டுப் பெண்களும் அவருக்கு நிகரான சேவைகளை தமிழகத்திற்கு புரிந்தவர்கள். 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்பதற்கு நிகராக பெரியாருக்கு நிகராக அவரது வீட்டுப் பெண்கள் களத்தில் இறங்கி தங்களை நிருபித்தவர்கள். 

ஈ.வெ.ரா. நாகம்மை

ஈ.வெ.ரா நாகம்மையாக உலகிற்கு அறிமுகமான நாகம்மை 1885ம் ஆண்டு சென்னை மாகாணத்திற்குட்பட்ட சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் ரெங்கசாமி, பொன்னுத்தாயிக்கு மகளாகப் பிறந்தவர். 1895ம் ஆண்டு தனது மைத்துனரான ஈ.வெ.ராமசாமியை மணம் புரிந்தார். இவர்களுக்குப் பிறந்த 5 மாத குழந்தை எதிர்பாராத விதத்தில் உயிரிழந்தது. இதுவே நாகம்மையாரின் பிந்தைய தீவிரப் பணிக்கு காரணமாக அமைந்தது என்று கூறலாம். தந்தை பெரியாராக பரிணாமம் அடைந்திருந்தவருக்கு முதல் மனைவியான தன்னை தகுதியுள்ளவராக நிகழ்த்திக் காட்டுவதற்குரிய சந்தர்ப்பமாகவே அனைத்துப் போராட்டங்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டார்.

ADVERTISEMENT

1919ம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி இந்திய தேசிய காங்கிரஸில் இணைத்துக் கொண்ட போது நாகம்மை தன்னையும் காங்கிரஸ் உறுப்பினராக்கிக் கொண்டார். அந்தக் காலக்கட்டத்தில்  மகாத்மா காந்தி தொடங்கிய கள்ளுக்கடைப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்திருந்தது. அப்போது பிரசாரத்திற்காக ஈரோடு வந்திருந்த மகாத்மா காந்தி தந்தை பெரியார் வீட்டில்தான் தங்கியிருந்தார். அப்போது மகாத்மா காந்தி கள்ளுக்கடை போராட்டத்தில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் கூறி பெண்கள் மீது அதீத அக்கறையுடன் இருந்ததை பெண்ணாக இருந்து நாகம்மை உணர்ந்தார். உண்மையை அறிந்தார். அப்போதுதான் போராட்டத்திற்கு ஆதரவாக தந்தை பெரியார் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த 200 தென்னைமரங்களை உடனடியாக அழித்தார்.

காந்தியின் பிரச்சாரத்தில் வெகுவாக ஈர்க்கப்பட்ட நாகம்மை ஈரோட்டில் தங்களது வீட்டின் அருகே தெருவொன்றில் பெண்களைத் திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். நாகம்மை கள்ளுக்கடைக்காக நடத்திய போராட்டத்தின் காரணமாக மறியல் போராட்டம் நடைபெற்ற இடம் தற்போதும் கள்ளுக்கடை மேடு என்றழைக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கள்ளுக்கடை போராட்டத்தில் பிரச்னைகள் எழுந்த போது ஏனைய காங்கிரஸ் தலைவர்கள் கள்ளுக்கடை போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள மகாத்மாவை கேட்டுக் கொண்டபோது போராட்டத்தின் முடிவு எனது கைகளில் இல்லை அது ஈரோட்டிலுள்ள நாகம்மை மற்றும் அவரது மைத்துனி கண்ணம்மாள் ஆகியோரிடம் உள்ளதாக பதிலளித்தார். அன்றைய திருவாங்கூர் மாகாணத்தில் தீண்டாமை ஆதிக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் அங்குள்ள கோவில்களில் நுழையவும், தெருக்களில் நுழையவும் இருந்த தடையை நீக்குவதற்கு காங்கிரஸ் கட்சி வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து 1924ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தந்தை பெரியாரும், நாகம்மையும் வைக்கம் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். நாகம்மையார் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன் அங்கிருந்த பெண்களைத் திரட்டி போராடி, மே மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் 1925ம் ஆண்டு பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போது சுயமரியாதை இயக்கத்தில் பெண்களும் பங்கேற்று தங்களது உரிமைகளை நிலை நாட்டிட வேண்டும் என்று பெண்களை அதிகளவில் சுயமரியாதை இயக்கத்தில் இணைப்பதற்கு காரணமாக இருந்தார். அதேபோல் சுயமரியாதை இயக்கத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் விதவை மறுமணங்கள் மற்றும் சுயமரியாதைத் திருமணங்களை நடத்திக் காட்டியவர். மேலும், தந்தை பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது குடியரசு இதழின் ஆசியராகவும் பணியாற்றிய பெருமை பெற்றவர். தந்தை பெரியாருடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் அவரது கொள்கைப் போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவராக விளங்கி 1933ம் ஆண்டு மே மாதம் 11ம் நாள் உலகத்தை விட்டு மறைந்தார். தந்தை பெரியாரின் மனைவியாக வாழ்ந்ததுடன் அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டவராக தந்தை பெரியார் வலியுறுத்திய புதுமைப் பெண்ணாகவும் வாழ்ந்து காட்டியவர் நாகம்மை.

ஈ.வெ.ரா மணியம்மை

தமிழகத்திலுள்ள வேலூர் மாவட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் தீவிரத் தொண்டரான கனகசபை மற்றும் பத்மாவதி ஆகியோருக்கு 1917ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் நாளில் காந்திமதி பிறந்தார். அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அண்ணல்தங்கோ தனது இயக்கத் தொண்டரான கனகசபையின் மகளுக்கு அரசியல்மணி என்று பெயரிட்டார். காந்திமதியாக இருந்து அரசியல்மணியானவர் வேலூரில் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு தமிழிலக்கியம் படித்து புலவர் பட்டத்தைப் பெற்றார்.

திராவிடர் கழகத்தின் தீவிரத் தொண்டரான கனகசபைக்கு தந்தை பெரியார் கடிதமொன்றை எழுதி, ஈ.வெ.ராவை எல்லாரும் தூரத்தில் இருந்தபடி உடலை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் உதவி செய்வதற்கு யாருமில்லை என்னமோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருந்தார். இக்கடிதத்தைப் படித்து அதிர்ச்சியடைந்த கனகசபாபதி தனது மகள் மணியம்மையுடன் எதற்காக ஈரோடு போகிறோம் என்பதைக் கூட கூறாமல் ஈரோட்டிற்கு வந்து தந்தை பெரியாரைப் பாரத்து தனது மகள் அரசியல்மணி இனிமேற்கொண்டு உங்களைப் பார்த்துக் கொள்வார் என்று கூறி தனது  மகள் அரசியல்மணியை ஈரோட்டில் விட்டுச் சென்றார். தந்தை கூறிவிட்டார் என்பதற்காக அதனை மனமார ஏற்றுக் கொண்டு தனக்குப் பிடித்தத் தலைவருக்கு சிரமபரிபாலனம் செய்வதை தன்விருப்பமாக ஏற்றுக் கொண்டார்.

1943ம் ஆண்டு தனது மகளைப் பெரியாரிடம் ஒப்படைத்துச் சென்றதற்குப் பிறகு தந்தை பெரியார் அரசியல்மணியின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து தனது இயக்கப்பணியை ஒப்படைத்தார். அரசியல்மணி என்கிற பெயரை தந்தை பெரியார் மணியம்மை என்று மாற்றினார். அதற்கு ஏற்றார்போல் தனது தமிழ்ப்புலமையை வெளிப்படுத்திடும் வகையில் 1944ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தன்னை சொற்பொழிவாளராக நிருபித்தார். இதனைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநாடுகளில் தொடர்ந்து உரையாற்றும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பெண் செயற்பாட்டாளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இவரது சொற்பொழிவுகள் திராவிடர் கழகத்தின் பதிப்பில் அம்மா பேசுகிறார் என்கிற நூலாக வெளியிடப்பட்டது.

தந்தை பெரியார்  கலந்து கொள்ளும் கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் பெரியாரின் பேச்சுக்களைக் குறிப்பெடுத்து அவற்றை குடியரசு நாளில் இடம்பெயரச் செய்தார். மேலும் குடியரசு, விடுதலை, உண்மை போன்ற திராவிடர் கழகத்தின் இதழ்களிலும்  பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு, உரிமைகளின் முக்கியத்துவம் குறித்து கட்டுரைகளை எழுதினார். இதனிடையே ஈரோட்டினை விட்டு பெரியார் சென்னைக்குச் சென்றதற்கு பிறகு குடும்பத்தில் சொத்து பராமரிப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தங்களது குடும்பச் சொத்து பாதுகாப்பிற்காக 1949ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். தனது வாரிசாக மணியம்மையை அறிவித்தார்.

திருமணத்திற்கு பிறகு திராவிடர் கழகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மணியம்மை தொடர்ந்து அரசியல் தடைச் சட்டம், இந்தித் திணிப்புப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு அதற்காக சிறைவாசத்தையும் பெற்றார். 1977ம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கு எதிராக  நடைபெற்ற கருப்புக் கொடி போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். திருச்சியில் தொடங்கப்பட்ட பெரியார் கல்வி நிறுவனங்களையும், குழந்தைகள் காப்பகத்தையும் பாதுகாவலராக இருந்து நிர்வகித்தார்.

தந்தை பெரியார் மரணத்திற்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவியாகவும் விளங்கியவர் மணியம்மை. திராவிடர் கழகத் தோன்றலுக்கு காரணமாக இருந்த தந்தை பெரியாரின் இரண்டாவது மனைவி என்பதற்கு மிகவும் உண்மையாக இருந்த மணியம்மை 1974ம் ஆண்டு தனது உடல் நலம் குன்றி மார்ச் மாதம் 3ம் தேதி மரணமடைந்தார். உலகம் பூராவும் ஆண்களுக்கு நிகராகவும், ஆண்களுக்கு சமமானவர்களாகவும் பெண்கள் விளங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி புதுமைப் பெண்ள் சமுதாயத்தை உய்வுறச் செய்திட வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தந்தை பெரியாரின் குடும்பத்திலும் புதுமைப்பெண்கள் வாழ்ந்தனர் என்பதை வரலாறாக்கியவர்கள் நாகம்மையாரும், மணியம்மையாரும்.

தமிழ் உலகில் பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உதாரணங்களாகவும் தங்களது உரிமையைப் பெற்றிட பெண்கள் போராட்டத்திற்கு முன்வர வேண்டும் என்பதை தாங்களும் போராடி சாதித்துக் காட்டியவர்கள் நாகம்மையாரும், மணியம்மையாரும்…

சர்வதேச மகளிர் தினத்தில் தந்தை பெரியாரின் குடும்பத்துப் புதுமைப்பெண்களையும் நினைவு கூர்ந்து அவர்களது புகழ் பாராட்டுவோம்.. போற்றுவோம்…

Tags : womensday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT