சிறப்புக் கட்டுரைகள்

எனது ரோல்மாடல் பி.டி.உஷாதான்! - தடகள வீராங்கனை டின்டு லுகா

8th Mar 2020 06:00 AM | ஆர்.ஆதித்தன்

ADVERTISEMENT

எனது வழிகாட்டி, ரோல்மாடல் தங்க மங்கை பி.டி.உஷா தான் என்றார் அர்ஜுனா விருது பெற்ற தடகள வீராங்கனை டின்டு லுகா.

கேரள மாநிலம் கண்ணூர் வள்ளத்தோடு கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் டின்டு லுகா (31). இவரது தந்தை லுகா, தனது சிறு வயதில் நீளம் தாண்டும் போட்டியில் மாவட்ட அளவில் சாம்பியனாக இருந்தவர். தாய் லிஸி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்.

பெற்றோர் இருவரும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வந்தவர்கள் என்பதால் டின்டு லுகாவிற்கும் சிறுவயது முதலே தடகள போட்டியில் ஆர்வம் காண்பித்து வந்தார்.

உறவினர் ஒருவர் மூலம் நாளிதழ் ஒன்றில் வந்த பி.டி.உஷா தடகளப் பயிற்சி மையம் குறித்து தெரியவந்த டின்டு லுகாவின் பெற்றோர் அவரைப் பயிற்சி மையத்தில் சேர்த்தது திருப்புமுனையாக மாறியது. அப்போது டின்டு லுகா 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

ADVERTISEMENT

பயிற்சி மையத்தில் சேர வந்த 600 பேரில், 12 பேர் இறுதிப் பட்டியலில் டின்டு லுகாவும் தேர்வாகி இருந்தார்.

பி.டி. உஷாவின் தடகள பயிற்சி மையத்தில் டின்டு லுகாவின் பயிற்சி தினமும் காலை 5 மணிக்கு தொடங்கும். 5 மணி முதல் 8 மணி வரை பயிற்சி செய்யும் டின்டு அதன் பின் பள்ளிக்கு செல்வார். 

பள்ளியில் இருந்து திரும்பிய பிறகு மீண்டும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். 17 ஆண்டுகள் வரை பி.டி.உஷாவின் தடகள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த டின்டு லுகா தடகளப்  போட்டியில் தடம் பதித்தார்.

800 மீட்டர் ஓட்டத்தை மட்டும் முக்கியமாகக் கருதி அதில் மட்டும் டின்டு லுகா கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். 800 மீட்டர் ஓட்டத்தில் 1.59.17 நிமிடங்களில் கடந்து ஷைனி வில்சனின் சாதனையை முறியடித்தார். 

2010 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 9 ஆம் இடம் பிடித்தார். 2014 ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார். 2015 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.

2016 பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி சுற்று வரை தகுதி பெற்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 6 பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தடகளத்தில் சாதனை படைத்த டின்டு லுகா 2014 இல் விளையாட்டு பிரிவில் அர்ஜுனா விருது பெற்றார். காலில் காயம் காரணமாக தடகள போட்டியில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் விளையாட்டு பிரிவு சிறப்பு அலுவலராக டின்டு லுகா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலம் ரயில்வே விளையாட்டு பிரிவில் தேசிய அளவில் சாதனை படைத்து வரும் 4 பெண் அலுவலர்கள் உள்ளிட்ட 22 விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக டின்டு லுகா கூறுகையில், எனது பெற்றோர் விளையாட்டு வீரர்களாக இருந்தனர். எனக்கும் விளையாட்டில் ஆர்வம் இருந்தது. இதனால் 12 வயதில் பி.டி. உஷா தடகள பயிற்சி மையத்தில் சேர்ந்து 17 ஆண்டு தீவிர பயிற்சி பெற்றேன். 800 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவுகளில் தேசிய போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளி்ல் பதக்கம் வென்றேன். எனது பயிற்சியாளர் பி.டி. உஷாதான் வழிகாட்டி, ரோல்மாடல் எல்லாமே என்றார்.

Tags : womensday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT