சிறப்புக் கட்டுரைகள்

'சந்தோஷம் கலந்த சவாலான பணி' - ராணிப்பேட்டை முதல் பெண் ஆட்சியர் திவ்யதர்ஷினி

8th Mar 2020 06:00 AM | பெ.பாபு

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை என்ற வரலாற்று சரித்திரப் புகழ் வாய்ந்த புதிய மாவட்டத்தை கட்டமைக்கும் பொறுப்பு என்பது எனக்கு கிடைத்த சந்தோஷம் கலந்த சவாலான பணி என மகளிர் தின சிறப்பு நேர்காணலின் போது ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

சென்னையில் நடுத்தர குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்த பெண் ஒருவர் வழக்குரைஞராக வேண்டும் என ஆசைப்பட்டு வழக்குரைஞர் பட்டம் பெற்ற பின் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற வேண்டி ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் (பிரிலிமினரி) தேர்வில் முதல் முயற்சியில் தோல்வி, இரண்டாவது முயற்சியில் 2011ல் ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம், தொடர்ந்து  ஐ.ஏ.எஸ். பயிற்சியுடன் உயர்கல்வியும் வெற்றிகரமாக முடித்து கோவையில் உதவி ஆட்சியர்(பயிற்சி), இதையடுத்து மயிலாடுதுறை சார் ஆட்சியர் பணி, பொதுத்துறை  துணை செயலர், வட சென்னை வட்டார துணை ஆணையர், ராணிப்பேட்டை புதிய  மாவட்டத்தின் சிறப்பு அதிகாரி, ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் முதல் ஆட்சியர், புதிய மாவட்டத்தை கட்டமைக்கும் மிகப்பெரிய சவாலான பொறுப்பு என்பது உள்ளிட்ட என்னை சார்ந்த அனைத்து  பெருமைகளுக்கும் என் பெற்றோர்கள் தான் காரணம் என்று கூறுகிறார். 

இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் ஏதாவது நல்லது  செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன், தன்னை சந்திக்க வரும்  விஐபி-கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை தாங்கள் கொண்டு வரும் பூச்செண்டு கூட வாங்க மறுத்து அடுத்த முறை வரும் போது எதையும்  கொண்டு வரக்கூடாது, மக்கள் நலக் கோரிக்கையுடன்  தான் வரவேண்டும்  என அன்பான எச்சரிக்கையுடன் பம்பரமாய் சுற்றிச் சுழன்று வருபவர்.

ADVERTISEMENT

வரலாற்று சரித்திரப் புகழ் வாய்ந்த ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் முதல் ஆட்சியர், அதிலும் குறிப்பாக பெண் ஆட்சியர்  என்ற  பெருமைக்குரியவர் ச.திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ்.

அவரை தினமணி.காம் மகளிர் தின சிறப்பு நேர்காணலுக்காக சந்தித்தபோது 

என் மீது நம்பிக்கை வைத்து ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தை கட்டமைக்கும் மிகப்பெரிய பொறுப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பொறுப்பு எனக்கு சந்தோஷம் கலந்த சவாலான பணியாக கருதுகிறேன். இன்றைய சூழலில் பெண்கள் மட்டுமல்ல குறிப்பாக இளைஞர்களுக்கும் எந்தவித முயற்சியும் எடுக்காமலே எல்லாமே எளிதாக கிடைக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கின்றனர்.

தன்னம்பிக்கை இல்லாமலும்,இலக்கு இல்லாமலும் போகிற போக்கில் செல்லாமல் நல்ல வழியை தேர்வு செய்து இந்த இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். ஒரு காலத்தில் பெண்கள் கல்வி கற்க  பெரிய தடைகள் இருந்தன. ஆனால் தற்போது பெண்கள் பட்டம் பெறுவது கட்டயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் அனைவரும்  தன் சுய காலில் நிற்கும் வகையில் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை அல்லது தொழில் செய்ய வேண்டும்.அப்போது தான் ஆண்களுக்கு நிகரான தகுதியை பெண்கள் பெற முடியும் என நம்புகிறேன்.

அதே போல் இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் சமூக  ஊடகங்களில் எத்தனை லைக் கிடைக்குது என்ற மாயையில் விழுந்துவிடாமல், சமூக ஊடகங்களை நல்லதுக்கு பயன்படுத்த வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிறகு உங்களை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பதே உண்மையான வெற்றியாகும். ஒரு பெண், தாயாக, மகளாக, சகோதரியாய், மனைவியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் இருக்கிறார்.

அதேபோல்தான் ஒரு ஆண் என்பவர் தந்தையாக, கணவனாக, சகோதரனாக, நண்பனாக என அவரவர் பணியை இருவருமே தன் கடமைகளை சரிவர செய்ய வேண்டும். மேலும் ராணிப்பேட்டை  புதிய மாவட்டம் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற அரசுக்கு, மாவட்ட மக்களும் துணை நிற்க வேண்டும். அதே போல் ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் குவிந்துகிடக்கும் குரோமியக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றினால் என்னுடைய பிறவி பயன் அடைந்ததற்கான பலன் என நம்பிக்கை வார்த்தைகளுடன் வழியனுப்பி வைத்தார்.

Tags : womensday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT