சிறப்புக் கட்டுரைகள்

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

15th Jun 2020 05:00 AM | போற்றி ராஜா

ADVERTISEMENT

ஜூன் 15: உலக முதியோர் புறக்கணிப்பு தடுப்பு விழிப்புணர்வு தினம்

அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு முதிர்ந்த பெண்மணி என் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி வாழ்ந்து வந்தார். கணவரை இழந்தவர். அவருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. மகள் திருமணமாகி சென்னை சென்றுவிட்டார்.

அடுத்த ஒரு வருடத்தில் தன் மகனுக்கு ஆசை ஆசையாக திருமணம் செய்து வைத்தார். மேடையில் மணமக்களை அவர் கண்ணீர்மல்க ஆசீர்வதித்து வாழ்த்தியது இன்னும் என் நெஞ்சில்  நிழலாடுகிறது. ஆறு மாத காலம் அவர்களின் வாழ்க்கை சண்டை சச்சரவு இல்லாமல் சுமுகமாகச் சென்றது.

பின் மாமியாரும் மருமகளும் அடிக்கடி சண்டைபோடத் தொடங்கி, பிரச்னை கட்டுக்கு அடங்காமல் மகனும் மருமகளும் வேறு ஊருக்கு தனிக் குடித்தனம் பெயர்ந்தனர். இரண்டு மாதத்துக்கு  ஒரு முறை தன் தாயைப் பார்த்துவிட்டு போவார் அந்தப் 'பாசமுள்ள' மகன். அந்த இரண்டு மாத இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக நீண்டுகொண்டே போனது. ஒரு கட்டத்தில் தன் தாயைச் சந்திப்பதையே நிறுத்திவிட்டார்.

ADVERTISEMENT

தமிழக அரசின் முதியோர் உதவித் தொகையை வைத்து அவரின் ஒவ்வொரு மாதமும் கழிந்தது. பேசுவதற்குக்கூட ஆள் இல்லாமல் அவ்வப்போது தன் மகன், மகளுடன் பேசிய வார்த்தைகளை அசைபோட்டு தனக்கு தானே சத்தமாகப் பேசிக் கொள்வார். திடீரென்று மகன், மகள் மீதுள்ள வெறுப்பால் அவர்களைத் திட்டித் தீர்ப்பார். தனிமையின் கொடுமையால் மனநலம் பாதிக்கப்பட்டு, ஒரு நாள் கேட்பாரற்று அனாதையாக செத்துக் கிடந்தார்.

அவரின் பிள்ளைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓடி வந்து கதறி  அழுதனர். பின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு தத்தம் ஊருக்குச் சென்றுவிட்டனர். இன்று அந்த வீடு நூலாம்படையும் வெளவாலுமாக களையிழந்து பொலிவிழந்து காணப்படுகிறது. என் கண்ணெதிரிலேயே ஒரு முதியவருக்கு நடந்த மிகப்பெரிய கொடுமை இது.

பெரும்பாலான வீடுகளில் முதியவர்கள் ஒரு சுமையாகவே கருதப்படுகின்றனர். இதற்கு முக்கியமாக மூன்று காரணங்களைச் சொல்ல முடியும். ஒன்று, போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் குடும்பங்களில், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகள் கூடுதல் சுமையாக இருக்கலாம். இரண்டாவது, வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் போதிய புரிதல் இல்லாமல் அடிக்கடி நிகழும் சண்டைகளால் அவர்களைச் சுமையாகக் கருத வாய்ப்புண்டு. மூன்றாவது, கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், ஒரு வேளை கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் நிலையில், வீட்டில் உள்ள முதியவர்களுக்கு என்று தனிக் கவனம் செலுத்த முடியாமல் அவர்களைச் சுமையாகக் கருத வாய்ப்புண்டு.

இப்படி முதியோரை நிராகரிக்க எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், இவை அத்தனையையும் தாண்டி அவர்களை அன்போடு அரவணைத்து பாதுகாக்க வேண்டியது நம் தலையாய கடமையாகும். இதே காரணங்கள் நாம் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும் பொருந்தும் அல்லவா? அவர்களாலும் மருத்துவச் செலவுகள் வரலாம் அல்லவா? அவர்களாலும் வீட்டில் பிரச்னைகள் ஏற்படலாம் அல்லவா? அதற்காக நம் பிள்ளைகளை ஒதுக்கியா வைக்கிறோம்?

நம் சிறுவயதில் நமக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டால் கூட துடிதுடித்துப் போய், இரவு முழுவதும் நம் தலைமாட்டிலேயே அமர்ந்து, வாஞ்சையோடு நெற்றியை வருடி முடியைக் கோதிவிடும் அந்த மாசில்லா அன்புக்கு பிரதிபலனாக அவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களைப் பேணி பாதுகாக்காமல், முதியோர் இல்லத்தில் கொண்டுசேர்ப்பது துரோகத்தின் உச்சம் அல்லவா?

கோயில் வாயிலிலும்,பேருந்து நிலையங்களிலிலும் யாசகம் கேட்கும் ஒவ்வொரு முதியவரும் ஏதோ ஒரு குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள்தானே. ஒரு புதுக் கவிதை நினைவுக்கு வருகிறது; "வீட்டின் பெயரோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்'. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவிலேயே அதிகமான முதியோர் இல்லங்கள் இருப்பது எழுத்தறிவு அதிகமுள்ள கேரளத்தில் தான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதுதானே கல்வியின் அடிப்படை. அப்படிப்பட்ட தெய்வங்களை மனதில் வைத்து பூஜிக்காமல் முதியோர் இல்லங்களில் கொண்டுசேர்ப்பது எந்த வகையில் நியாயம்?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில 10 கோடியே 40 லட்சம் முதியவர்கள் வாழ்கிறார்கள். மருத்துவத் துறையின் அபார வளர்ச்சியால் மனிதனின் சராசரி வயதும் கூடிக்கொண்டே போகிறது.

ஆனால், முதுமையில் பொதுவாக வரக் கூடிய உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஞாபக மறதி, மூட்டுத் தேய்மானம் ஆகிய பல காரணங்களால் அறுபது வயதுக்கு மேல் அவர்களால் உடல் அளவில் இயல்பு வாழ்க்கை வாழ முடிவதில்லை. எழுபது வயதுக்கு மேல் சொல்லவே வேண்டாம், பிறரின் துணை கொண்டே அவர்களால் வாழ முடிகிறது. பல நேரங்களில் சாலையை கடக்கும் போது நிதானமில்லாமல் விபத்துக்கு உள்ளாவதும் அவர்களே.

இப்படி மெல்ல மெல்ல தங்களின் இறுதி நாள்களை எண்ணிக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தேவையெல்லாம் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து வரும் வாஞ்சையான வார்த்தைகள் மட்டுமே. அவர்கள் பேசுவதை பெரும்பாலான நேரங்களில் நாம் காதுகொடுத்துக்கூட கேட்பதில்லை. நூலகங்களில் கிடைக்காத ஞானத்தையும், இணையத்தில் கிடைக்காத அறிவையும் நம் வீட்டுப் பெரியவர்களிடம் இருந்து நாம் பெற முடியும். அதற்கு அவர்கள் வாழ்வில் சந்தித்த அனுபவங்களைக் கேட்டாலே போதும். நாம் தற்போது செய்து கொண்டிருக்கும் பெரும்பாலான தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும்.

வீட்டில் முதியவர்கள் இல்லாததால், குழந்தைகளைப் பராமரிக்கக்கூட ஆள் இல்லாமல், இரண்டு வயதிலேயே பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் அவல நிலை தற்போது உள்ளது. குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டால் வீட்டில் உள்ள முதியவர்கள் கை வைத்தியம் செய்து குணப்படுத்துவது உண்டு. ஆனால், இன்று குழந்தை தும்மிய மறு நொடியே மருத்துவமனையில் போய் நிற்கிறோம்.

நம் பெற்றோரை முதியோர் இல்லங்களில் தவிக்க விட்டுவிட்டு நாம் ஆயிரம் அன்னதானம் செய்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதியோர் இல்லத்தில் விடப்பட்ட ஒவ்வொரு தாய் - தந்தையும், தன் மகனையோ - மகளையோ கடைசியாக ஒரு பார்வை பார்க்க நேரிடும். அந்தக் கடைசி பார்வைக்கு " இன்று நான் நாளை நீ' என்று பொருள்.

முதியோரைப் பாதுகாக்க 2007-ஆம் ஆண்டு அரசால் "முதியோர் பாதுகாப்பு சட்டம்' இயற்றப்பட்டது. இதன்மூலம், சட்டப்படி வாரிசுகளாக இருப்பவர்கள் தங்களின் பெற்றோரைப் பேணல் வேண்டும். ஒருவேளை தவறினால், பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், புறக்கணிக்கப்பட்டாலும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி புகார் செய்வதில்லை. பெற்ற மனம் பித்தல்லவா!

[கட்டுரையாளர் - அமைப்புச் செயலாளர்,

அஞ்சல் தொழிற்சங்கம், சிவகங்கை கோட்டம்]

ADVERTISEMENT
ADVERTISEMENT