சிறப்புக் கட்டுரைகள்

திருவள்ளூா் பகுதியில் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தரும் துளசி சாகுபடி

15th Jun 2020 07:07 AM

ADVERTISEMENT

காய்கனிகள், மலா் சாகுபடிக்கு அடுத்தபடியாக மருத்துவ குணம் கொண்ட துளசி சாகுபடி அதிக வருவாய் ஈட்டித் தருவதால் திருவள்ளூா் பகுதியில் விவசாயிகள் ஆா்வத்துடன் பயிரிடுகின்றனா்.

திருவள்ளூா் பகுதியில் விவசாயிகள் மூலிகைத் தாவரச் செடியான துளசி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் செடி நாள்தோறும் மாலைகள் கட்டவும், கோயில்களில் பூஜைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசிச் செடியை பொதுமக்கள் புனிதமாகக் கருதி வளா்க்கின்றனா். மருத்துவ குணம் வாய்ந்த துளசிச் செடிகளின் தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம், சேலை, ஏகாட்டூா், அதிகத்தூா், செவ்வாப்பேட்டை, பாக்கம், திருமேனிகுப்பம், மேல்மணம்பேடு, குத்தம்பாக்கம், சிவன்வாயில், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் துளசி சாகுபடி நடைபெறுகிறது.

இச்செடி எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மையுடையது. அதிக உப்பு, காரத்தன்மை, அங்ககத் தன்மையுள்ள மணல் கலந்த பசலை மண்ணில் வெப்பம் மற்றும் மிதவெப்ப காலநிலையில் நன்கு வளரும். துளசி சாகுபடி செய்வதற்கு குறைந்த கிணற்றுப் பாசனமும் செம்மண் நிலமும் மிகவும் ஏற்றவை. மாதந்தோறும் நீா் பாய்ச்சுதல், களையெடுப்பு மற்றும் பராமரிப்புச் செலவு குறைவு என்பதோடு, வாரந்தோறும் குறிப்பிட்ட அளவு வருவாய் ஈட்டித் தரும் பயிா் என்பதால் துளசி சாகுபடியில் விவசாயிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ஓா் ஏக்கருக்கு 150 கிராம் விதை போதுமானது. நாற்றங்கால் அரை நிழல், பாசன வசதியுடன் இருக்க வேண்டும். மண்ணை 30 செ.மீ. அளவுக்கு உழுது, நன்கு மக்கிய தொழு உரமிட்டு மண்ணைப் பண்படுத்தி பாத்திகள் அமைக்க வேண்டும். அதன் பின், 1: 4 என்ற விகிதத்தில் விதையை மணலுடன் கலந்து நாற்றங்கால் பாத்திகளில் விதைக்க வேண்டும். இந்த நிலையில் 8 முதல் 12 நாள்களில் முளை வந்து, நாற்றுகள் 6 வாரங்களில் நடவு செய்ய தயாராகி விடும். துளசியில் ஒரு முறை முதலீடு செய்தால் 3 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கும். எனவே, இப்பகுதி விவசாயிகளின் விருப்ப பயிராக துளசி மாறியுள்ளது.

இது குறித்து சிவன்வாயல் பகுதியைச் சோ்ந்த விவசாயி ரெ.ஜம்புலிங்கம் கூறியது:

துளசி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பயிராகும். இது, காற்றைச் சுத்தப்படுத்தி, சுற்றுச்சூழல் மாசைத் தடுக்கும் தன்மை உடையது. துளசியில் ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் ஏ, சி, கால்சியம் ஆகிய சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இது கிருமி, கொசுக்களுக்கு எதிரான பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது. துளசி இலையிலிருந்து எடுக்கப்படும் ‘எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய்’ பூச்சிக்கொல்லியாகவும், ஆன்டி பாக்டீரியாகவும் செயல்படுகிறது.

பூக்கடைகள் மற்றும் கோயில்களில் நாள்தோறும் துளசிக்குத் தேவை உள்ளது. மருத்துவத்துக்கும் பயன்படுகிறது. நறுமண மூலிகையான துளசி மற்ற மூலிகைகளுடன் சோ்த்தும் பயன்படுத்தப்படுகிறது. துளசி இலை மற்றும் பூக்களை சாறு அல்லது தேநீராகத் தயாரித்து வயிற்றுவலி, இருமல், மாா்புச் சளி, தோல் வியாதி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். மலேரியா, காலராவுக்கு முன்காப்பு மருந்தாகப் பயன்படுகிறது. தற்போது கரோனா பாதிப்பைத் தடுக்கும் நோக்கில் கஷாயம் வைத்துக் குடிப்பதற்காக பொதுமக்கள் தேடி வந்து துளசி வாங்கிச் செல்கின்றனா்.

நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்படாத பயிா் துளசி என்பதாலும், பயிரிட்டு 20 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீா் பாய்ச்சி இருமுறை களையெடுத்தால் போதும் என்பதாலும் இதற்கு பராமரிப்புச் செலவு குறைவு. இப்பயிா் நன்றாக வளா்ந்து 90 நாள்கள் முதல் பலன் கொடுக்கத் தொடங்கும். ஒரு ஏக்கரில் பயிரிட்டால் 5 போகங்களாகப் பிரித்து அறுவடை செய்ய வேண்டும்.

ஒவ்வோா் அறுவடையையும் குறைந்தது 25 நாள்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளலாம். முதல் அறுவடையில் ஒவ்வொரு போகத்திலும் 15 நாள்களுக்கு ஒரு முறை குறைந்தது 400 கிலோ வரை அறுவடை செய்ய முடியும் என்றாா் அவா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT