சிறப்புக் கட்டுரைகள்

கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு?- பழங்குடியின விவசாயிகள் எதிர்பார்ப்பு

26th Jul 2020 10:54 AM | எம்.மாரியப்பன்

ADVERTISEMENT

 

இயற்கை முறையில் விளைவிக்கப்படும், மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்ட கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது அங்கு வாழும் பழங்குடியின விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இதற்கான நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.       

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுவது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை. கடல் மட்டத்தில் இருந்து 4663 அடி உயரம் கொண்டது. 280 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த மலைப்பகுதியில் கொல்லிமலை, ராசிபுரம் வட்டத்துக்குள்பட்டு 14 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் மா, பலா, வாழை, அன்னாசி, மிளகு, நெல், மரவள்ளி, சிறு தானியங்கள் பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.  

இதில், உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கொல்லிமலை மிளகு. கருப்பு தங்கம், 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பதற்கு ஏற்ப கர்நாடகம், கேரளத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல்  மாவட்ட மலைப்பகுதிகளில் மிளகு உற்பத்தி செய்யப்படுவதை காண முடியும். 

ADVERTISEMENT

அத்தகைய மிளகுக் கொடிகள் கொல்லிமலையில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. சில்வர்ஒக் மரங்களில் ஊடு பயிராக பரவவிடப்படும் மிளகு கொடிகள் வளர்ந்து பருவநிலையை எட்ட 4 ஆண்டுகள் வரை ஆகும். அறுவடைக்கு ஏற்றவாறு மிளகு கொடி படர்ந்து விட்டால் குறைந்தபட்சம் 15 முதல் 18 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மிளகு வகைகளில்  பன்னியூர்–1, கரிமுண்டா, பன்னியூர்–5 ஆகியவை இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. 

கொல்லிமலையில் மிதமான தட்பவெப்ப நிலை, ஈரப்பதம் அதிகம் உள்ளதால் மிளகு வளர்ச்சிக்கு உதவியாக அமைகிறது. மேலும் இயற்கை விவசாய முறையில் மிளகு விளைவிக்கப்படுகிறது. தற்போது மிளகு அறுவடை முடிவடைந்து பறிக்கப்பட்ட பழங்களைப் பிரித்தெடுக்கும் பணியும், அவற்றை வெயிலில் உலர்த்தி விற்பனைக்காக அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. 

தரமிக்க கொல்லிமலை மிளகை அனைவரும் விரும்பி வாங்கும் வகையில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி கெளரவிக்க வேண்டும் என்பது இங்குள்ள விவசாயிகள் பலரின் எதிர்பார்ப்பாகும். திருநெல்வேலி  அல்வா, திருவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், திருப்பதி லட்டு போன்ற உணவு பொருள்களுக்கு மட்டுமல்ல, விளைவித்து பயன்பாட்டுக்கு வரும் உணவுப் பொருள்களுக்கும் மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 13 மாவட்டங்களில் விளைவிக்கப்படும் பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கினால் அது மாநில விவசாயிகளை ஊக்கப்படுத்துவதாக அமையும். இது தொடர்பாக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் செளஹான் வலியுறுத்தி உள்ளார். அதேபோல் தரமிக்க கொல்லிமலை மிளகுக்கும் புவிசார் குறியீடு கிடைத்திட தமிழக அரசும், மக்களவை உறுப்பினர்களும் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் எழுந்துள்ளது.                 

தமிழ்நாடு பழங்குடியின மலையாளிகள் நல அமைப்பு தலைவர் கே.குப்புசாமி கூறியதாவது: கொல்லிமலை பகுதி விவசாயிகள் மரவள்ளியையே ஆரம்பத்தில் அதிகம் பயிரிட்டு வந்தனர். தற்போது மிளகு பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். 

ஒவ்வோர் ஆண்டும் மிளகு உற்பத்தி அதிகரித்து கொண்டு தான் செல்லும். பெரிதாக இழப்பை ஏற்படுத்தாது. ஆண்டுக்கு சுமார் ஆயிரம் டன் அளவில் மிளகு உற்பத்தியாகிறது. குறைந்தபட்சம் ரூ.500 கோடிக்கு விற்பனை நடைபெறும். 

தற்போது கரோனா பாதிப்பால் கொல்லிமலை வரும் வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் பாதிப்படைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ மிளகு ரூ.350, 400 என்ற விலைக்கே விற்கப்படுகிறது. தரமான கொல்லிமலை மிளகை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதனை செயல்படுத்த வேண்டும் என்பதை எங்களுடைய  அமைப்பு சார்பிலும் வலியுறுத்துகிறோம். சர்வதேச அளவில் கொல்லிமலை மிளகின் தரம் பேசப்பட வேண்டும் என்றார்.                   

கொல்லிமலை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது; கொல்லிமலைப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மிளகு பயிரிடப்படுகிறது. புவிசார் குறியீடு கிடைப்பதற்கான முயற்சியை இங்குள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த சிலர் மேற்கொண்டனர். அதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இயற்கை முறையில், தரமான, எவ்வித ரசாயனமும் இல்லாமல் மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது என்ற ஒப்புதலை அதற்கான ‘ஆர்கானிக்’ கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இங்குள்ள சுமார் 400 விவசாயிகள் அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். பழங்குடியினத்தவர் மட்டுமின்றி பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் எஸ்டேட்டுகளை வாங்கி மிளகு விவசாயத்தை செய்து வருகின்றனர். மத்திய அரசு வழங்கும் இந்த குறியீடை பெறுவதற்கு  அனைத்து தரப்பிலும் முயற்சி மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு புவிசார் குறியீடு கிடைத்தால் கொல்லிமலை மிளகுக்கான சந்தை சர்வதேச அளவில் கிடைக்கும் என்றார்.

விளைச்சல் அதிகரிப்பால் மிளகு விலை சரிவு!
மிளகு கொடியில் மூன்றாவது ஆண்டில் இருந்தே ஒரு கொடிக்கு சுமார் 100 கிராம் வீதம் மிளகு விளையத் தொடங்கும். ஏழாம் ஆண்டில் அரை கிலோ வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு நடப்பட்டுள்ள சில்வர் ஓக் மரங்களை பொருத்து அதிகபட்சம் 900 செடிகளை வளர்க்க முடியும். எட்டாவது ஆண்டில் இருந்து ஒரு முறை அறுவடை செய்தால் 450 கிலோ வரையில் மிளகு மகசூல் கிடைக்கும். கடந்த ஆண்டு கிலோ ரூ.900–க்கு விற்பனையான மிளகு தற்போது ரூ.500 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. கரோனா பொது முடக்கம் முழுமையாக தளர்த்தப்பட்டால்  மிளகு விற்பனை அதிகளவில் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர். 

மேலும் அவர்கள் கூறியது; மிளகு கொடிகளுக்கு ரசாயன உரம் பயன்படுத்துவதில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை 8 கிலோ அளவில் தொழு உரம் இடுவோம். உதிரும் இலைகளும் இயற்கை உரமாகிறது. காய்க்கும் தருணத்தில் கடலைப் புண்ணாக்கு இடுவோம். காய்களில் பூச்சிகள் இருந்தாலோ, காய்கள் திரட்சியாக இல்லாதிருந்தாலோ பஞ்சகவ்யம் தெளிக்கிறோம். மிளகுக் கொத்தில் சில பழங்கள் சிவப்பு நிறத்தை அடைந்தவுடன் முழுக் கொத்தை கைகளால் பறிக்க வேண்டும். பழங்களைப் பிரித்தெடுத்து சுடுநீரில் (80 டிகிரி செல்சியஸ்) ஒரு நிமிடத்திற்கு அதில் முக்கி எடுத்து 10 நாள்கள் வெயிலில் உலர்த்த வேண்டும்.  பல்வேறு மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் கொல்லிமலைக்கு நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். கொல்லிமலை மிளகுக்கு காரத்தன்மை அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என்றனர்.

‘சந்தைப்படுத்தலை அதிகரிக்க வேண்டும்‘ 
கொல்லிமலை மிளகானது ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும், சேலத்தில் உள்ள வார சந்தைகள், மொத்த விற்பனை சந்தையான லீ பஜார் மற்றும் நாமக்கல், ராசிபுரம் வாரச் சந்தைகளிலும் அதிகம் விற்பனை செய்யப்படும். கொல்லிமலைக்கு சுற்றுலா வருவோர் இங்குள்ள மிளகை தவறாமல் வாங்கி செல்வர். 

சேந்தமங்கலம் வட்டம் பேளுக்குறிச்சியில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையில் சனிக்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தையில் கொல்லிமலை மிளகு மற்றும் பல்வேறு மளிகை தொகுப்புகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வருவர். தற்போது கரோனா தொற்று  பரவலால் சந்தைகள் சரிவர செயல்படவில்லை. பேளுக்குறிச்சி ஆண்டு சந்தையும் நிகழாண்டில் நடைபெறவில்லை. அதனால் மிளகு விளைவித்த விவசாயிகளும், கொள்முதல் செய்த வியாபாரிகளும் அதை சந்தைப்படுத்த முடியாமல் இருப்பில் வைத்துள்ளனர். கரோனா பொது முடக்கம் தளர்த்தப்பட்டால் கிடங்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ள மிளகு அதிக விலைக்கு விற்பனையாக வாய்ப்புள்ளது.    

ADVERTISEMENT
ADVERTISEMENT