சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திர காற்றை சுவாசிக்கும் பாக்கியராஜின் குடும்பம்: உண்மைச் சம்பவம்

14th Jan 2020 11:37 AM | கிறிஸ்டி ஸ்வாமிகன்

ADVERTISEMENT

ஏமாற்றம், வலி, விரக்தி, கோபம், பயம் சுயமரியாதை இழப்பு என எல்லாவற்றையும் கடந்து வந்த 30 வயதான இளைஞர் பாக்கியராஜ் தனக்கு நேர்ந்த கொடுமைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் அரியலூரை அடுத்து உள்ள ஒரு சிற்றுரை சார்ந்தவர் பாக்கியராஜ். அவரின் பெற்றோர் படிப்பறிவு இல்லாத முதியவர்கள். அவர்கள் செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு முன், கடனாக ஐம்பதாயிரம் ரூபாயை ஒரு முதலாளியிடம் பெற்றிருந்தனர். 

சுமார் 11 ஆண்டுகள் உழைத்த அவர்கள் தினமும் செங்கல் செய்வது, களத்தைச் சுத்தப்படுத்துவது, மண் கொணர்ந்து போடுவது, செங்கற்கள் செய்ய களிமண்ணை தயார் செய்வது போன்றவை அடங்கும்.  இரவு நேரங்களில் யாரும் அறியாமல் ஆற்றிலிருந்து ஆற்று மணலை எடுத்து வரவேண்டும். இவர்கள் தினமும் ஆயிரம் செங்கற்கள் செய்ய வேண்டும். உருவாக்கிய செங்கற்களை வெய்யிலில் காய வைக்க ஏதுவாக அடுக்க வேண்டும். அவை காய்ந்த பின் செங்கல் சூளையில் அடுக்கிச் சுட வேண்டும். கூலி சனிக்கிழமைதோறும் 500 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் செய்யும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் செங்கற்களுக்கு அவர்கள் பெற்ற தொகை வெறும் 500 ரூபாய் மட்டுமே. வேறு எதுவும் அவர்களுக்கு தரப்படாது.  தங்களுக்கு வரவேண்டிய மீதப் பணம் எங்கே போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் தன் வயதான பெற்றோர்  கஷ்டப்படுவதைப் பார்த்து பாக்யராஜின் மனம் வேதனைப்படும். ஆனால் அவர்கள் வெளியே வரமுடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் வார்த்தையில் சொல்வதானால், "வளர்ந்த மகனாக அதைப் பார்க்கும்போதெல்லாம் நான் எதுவும் செய்ய முடியாத தோல்வி நிலையில் இருப்பதாகத் தோன்றும். அப்பா இறந்த பின்பு நான் செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்தேன். செங்கல் செய்வது இருப்பதிலேயே மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று. ஆனால் என் தந்தை நான் வளர்ந்த பின்பும் அதைச் செய்ய வேண்டி இருந்ததே என்று மனம் வருத்தும்." என்றார்.

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி 2019-இல்தான் பாக்கியராஜின் தந்தை தனக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டிருக்கிறார். பாக்யராஜ் கரும்பு வெட்டும் குழுவில் வேலை செய்யும்போது அதனை கேட்டு அச்சூளைக்கு விரைந்தார்.  விஷயம் தெரிந்த உடன் தன் முதலாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏலக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு தன் தாயையும் தந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் பாக்கியராஜ். சூளையின் முதலாளியோ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தாரே தவிர பணம் ஏதும் தரவில்லை. பாக்கியராஜ் தன் தந்தையை இரவு நேரங்களில் பராமரித்து, உணவு ஊட்டி வந்தார். காலையில் அவரும் அவரின் மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. 

"நான் வேலைக்கு சென்றவுடன் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை முதலாளி வீட்டிற்கு வந்து சத்தம் போட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் மாலை நாலு முப்பது மணிக்கு என்னை அழைத்து தந்தை இறந்து விட்ட செய்தியை எனக்கு சொன்னார்கள்". என்று கண்ணீருடன் கூறினார் பாக்கியராஜ்.

நெஞ்சு வலிக்கிறது என்று தன் மகனை அழைத்துவர ஒரு வாரத்திற்கு முன்பு அவர் சொன்னபோது முதலாளி அவரை கடுமையாக திட்டியுள்ளார். அந்த அவமானத்தால் தான் அவருக்கு மனம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று பாக்யராஜ் கருதுகிறார். 

பக்கத்து வீட்டுக்காரர் அழைத்து விஷயத்தைச் சொல்லும்போது பாக்கியராஜ் விரைந்து சென்றுள்ளார். ஆனால் நடந்தது என்னவோ பாக்யராஜின் தந்தை தன் தாயிற்கு தூக்க மருந்து கொடுத்து விட்டு அவர் தூக்கு மாட்டி இருக்கிறார். பாக்யராஜ் விரைந்தோடி பார்க்கும்போது  தூக்கு மாட்டி அவர் இறந்து விட்டிருந்தார். பாக்யராஜ் தன் தந்தையை இழந்த பின்பு மீண்டும் அச்சூளை வேலைக்கு சென்றார். எப்போதும் அவருடன் இருக்கும் பாக்யராஜின் தாயோ மிகவும் விரக்தி அடைந்திருந்தார். "இச்சூளையில்தான் என் சாவு எனக்கு வேறு வழியில்லை" என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

தந்தையின் 16-ஆம் நாள் முடிந்த பின்பு சூளையில் முதலாளி வீட்டிற்கு வந்து இருக்கிறார்.  "உங்க அப்பா இறந்ததால் நீதான் வேலைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் இந்த வீட்டை எழுதி வாங்கி விடுவேன்" என்று மிரட்டி இருக்கிறார். பாக்யராஜ் வேறு வழியில்லாமல் வேலை செய்து கடனை திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்து வேலைக்கு சென்றுள்ளார்.

இப்போதும் அதே சம்பளம்தான். ஆற்றின் ஓரம் இருந்த சுளையின் இந்தப் பக்கம் வாழ்ந்தார் பாக்கியராஜ். சூளையிலே தாய் இருப்பதனாலும் தந்தையின் மரணத்திற்கு பின்பு பேய் பயம் என்று வீட்டுக்கு செல்ல பாக்யராஜுக்கு அனுமதி அளித்திருந்தார் முதலாளி. அவர் எப்படியும் ஓடி விட மாட்டார் என்ற நம்பிக்கை அவருக்கு.  இரண்டு முறை பாக்யராஜை அடித்தும் இருக்கிறார். ஆக பாக்யராஜின் மொத்த வாழ்க்கையும் முதலாளியின் கையில் இருந்தது.தன் வீட்டில் சண்டை வந்து விட்டால் முதலாளி பாக்யராஜை அடித்து துன்புறுத்துவார். அங்கே வேலை செய்த மேஸ்திரியையும் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார். வயதையெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரையும் திட்டி, அடிப்பார் முதலாளி. 

தன் தாயுடன் சூளையில் வேலை செய்த பாக்யராஜ் தினமும் சந்தைக்குச் செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தினமும் 12 மணி நேரம் அவர்கள் உழைக்க வேண்டி இருந்தது. அவர்களுக்கு முன்பு போலவேதான் சம்பளம் தரப்பட்டது. அப்போதுதான் பாக்யராஜை பற்றிய தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்தது.

அவர்கள் மீட்கப்படும் நாளில் மாவட்ட வருவாய்த்துறை ஆணையர் போலீஸார் உதவியுடன் அங்கு வந்து சேர்ந்தார். இவர்களையும் பக்கத்தில் உள்ள சூளைகளில் வேலை செய்த கொத்தடிமைகளையும் மீட்டார்கள். தேர்தல் நேரமாக இருந்தாலும் கூட அரசு நிர்வாகம் விரைவாக சென்று அவர்களை மீட்டது பாராட்டுக்குரியது. அன்றே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இவர்களின் கடனும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. எனினும் முதலாளி தண்டிக்கப்படாததால் இன்னும் ஒரு சிறு பயம் இவர்களுக்கு உண்டு.  

இப்போது மனைவி சுமதியோடும் மகள் காவியா மற்றும் கனிமொழியோடும் சுதந்திரமாக வாழ்கிறார் பாக்கியராஜ். தன் தாயையும் உடன் வைத்திருக்கிறார். தான் பள்ளிக்கு செல்லாத தாலேயே தான் கொத்தடிமையாக விட்டதாக உணர்ந்த பாக்கியராஜ் தன் மகள்களை படிக்க வைக்கிறார். முதலாளி மீது சிறு பயம் இப்போதும் இருந்தாலும் கூட தன்னை மீண்டும் கொத்தடிமையாக சிக்க வைக்க முடியாது என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் பாக்யராஜ். விரைவாக செயல்பட்டு சரியான நேரத்தில் மீட்கப்பட்டால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். மக்களுக்கும் அரசு இயந்திரத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். மக்கள் சுதந்திரமாகவும் கொத்தடிமையிலிருந்து மீண்டு வாழவும் வழி செய்ய முடியும்.

இன்று தினக்கூலியாக சுற்றியுள்ள ஊர்களில் மரம் வெட்டும் வேலைக்குச் சென்று பிழைக்கிறார் பாக்கியராஜ். ஒருவேளை சாப்பிட்டாலும் கூட சுதந்திரமாக உணர்வதாக சொல்கிறார். "முன்பு நான் சூளையில் வேலை செய்யும் போது சுதந்திரமாக இருக்கவே முடியாதோ என்று பயந்தேன். ஆனால் இப்போது அச்சுதந்திரத்தை அடைந்து விட்டேன். ஒவ்வொரு நிமிடமும் விடுதலையை உணர்கிறேன்" என்கிறார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT