சிறப்புக் கட்டுரைகள்

எட்டு வழிச்சாலை திட்டம் என்னவாகும்?

15th Dec 2020 07:32 AM | ஆர்.ஆதித்தன்

ADVERTISEMENT


சேலம்: சேலம்-  சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கிய நிலையில், புதிய அறிவிக்கை வெளியிட்டாலும் தங்கள் வாழ்வாதாரமாக உள்ள நிலங்களைத் தர மாட்டோம் என அதிருப்தி அடைந்த விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இதனால் அத்திட்டத்தின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.

திட்டமும் எதிர்ப்பும்:  மத்திய அரசின் "பாரத் மாலா' திட்டத்தின் கீழ் ரூ. 10,000 கோடி செலவில் சென்னை-  சேலம் இடையே 276 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவில் நிலத்தைக் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 கி.மீ. தொலைவில் இந்தச் சாலை அமைகிறது.

சேலத்தில் சாலை அமையவுள்ள பூலாவரி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி விவசாயிகளும் பொதுமக்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சேலத்தில் 20 கிராமங்களில் 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி 35 நில உரிமையாளர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஏப். 8- ஆம் தேதி, எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், 8 வழிச்சாலை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றம் அனுமதி: உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதைத் தொடர்ந்து, விவசாயிகள், நில உரிமையாளர்கள் சார்பில் "கேவியட்' மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை-  சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்து கடந்த 8- ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும், எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த புதிய அறிவிக்கை வெளியிடுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் உறுதி: இந்தத்தீர்ப்பால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், புதிய அறிவிக்கை வெளியிட்டாலும் நிலங்களைத் தர மாட்டோம் என உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:

சேலம்-  சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவில், ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது. அதேவேளையில், சேலம்-  சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த புதிய அறிவிக்கை வெளியிட்டாலும், விவசாயிகள் தங்களது நிலத்தை தர மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

விவசாயிகள் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக, ஏற்கெனவே உள்ள அரூர்-  சென்னை, சேலம்-  ஆத்தூர்-   உளுந்தூர்பேட்டை வழியாக உள்ள சாலையை விரிவாக்கம் செய்யலாம் என்பதே எங்கள் கருத்து. இந்த இரு வழித்தடங்களிலும் ஏற்கெனவே கையகப்படுத்திய நிலமும் உள்ளது என்றார்.

காலத்தின் தேவை சாலை மேம்பாடு
சேலம் மாநகர மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் ஆர்.பி.கோபிநாத் கூறியதாவது: சேலம்-  சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் வளர்ச்சிக்கான திட்டமாகும். இதில் விவசாயிகள் பாதிக்கும் நிலையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, நிவாரண நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும். ஏற்கெனவே சாலைகள் இருந்தாலும், சாலை மேம்பாடு காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப விரிவாகிக் கொண்டே செல்லும்.  இப்போது சேலம்-  சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தினாலும் கூட அடுத்த 30 ஆண்டுகளில் மேலும் புதிய சாலைகளை அமைக்க வேண்டிய சூழல் வரும். 

பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் மட்டுமே இத்திட்டத்தை வரவேற்கவில்லை. எந்த ஒரு உள்கட்டமைப்புத் திட்டமும் 30 ஆண்டுகால தொலைநோக்குத் திட்டமாக இருக்க வேண்டும். இதை மத்திய அரசின் திட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. வளர்ச்சிக்கான திட்டமாகவே பார்க்கிறோம் என்றார்.

அதிகாரிகள் விளக்கம்
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது, சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறித்து சொலிசிட்டர் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளோம். அதன் பிறகு, துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் 
என்றனர்.

மூன்று மாற்றுச் சாலைகள்
8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயி நாராயணன் கூறியதாவது: சேலத்தில் இருந்து சென்னைக்கு, ஆத்தூர், உளுந்தூர்பேட்டை வழியாகச் செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை, அரூர் வழியாகச் செல்லும் சாலை, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாகச் செல்லும் நான்கு வழிச்சாலை என மூன்று சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. 

இவற்றில், ஆத்தூர்-  உளுந்தூர்பேட்டை வழியிலான நான்கு வழிச்சாலை பல இடங்களில் விரிவுபடுத்தப்படாமல் இரண்டு வழிச்சாலையாகவே உள்ளது. இந்தச் சாலை அமைக்கும்போது ஆறுவழிச் சாலைக்காகவே நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் சேலத்திலிருந்து சென்னை செல்ல காலதாமதம் ஏற்படுவதுடன், சாலை விபத்துகளால் மனித உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. 

சேலம்- அரூர் வழியாக சென்னை செல்லும் சாலை, ஆத்தூர் வழியாக சென்னை செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளுக்கும் இணையாக 500 மீட்டரில் வேறொரு எட்டு வழிச்சாலை திட்டம் தேவையா என்பதை மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும்.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தங்களின் வாழ்வாதாரமாக உள்ள நிலங்களை விட்டுக் கொடுக்க விவசாயிகள்  தயாராக இல்லை. ஏற்கெனவே உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT