சிறப்புக் கட்டுரைகள்

விரைவாக தீவிரத் தன்மை அடையும் புயல்களும் வானிலை முன்னறிவிப்பு சவால்களும்

டி.குமாா்

கடல் வெப்பமயமாதலும், விரைவான தீவிரத் தன்மையும் புயல் தொடர்பான வானிலை முன்னறிவிப்பில் பல்வேறு சவால்களை உருவாக்குகிறது. புயல் குறித்த வானிலை முன்னறிவிப்பு தற்காலத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த முன்னேற்றத்தின் காரணமாக, கடந்த 1999-ஆம் ஆண்டு ஒடிசாவில் வீசிய அதி தீவிர புயலின்போது 10 ஆயிரமாக இருந்த பலி எண்ணிக்கை, அதே தீவிரத் தன்மையுடன் வீசிய ஒக்கி புயலுக்கு 844  என இறப்பு விகிதம் மூன்று இலக்கமாக மாறியது.

இந்த நிலைமாற காரணமாக இருந்த வானிலை முன்னறிவிப்பு மையங்கள், பேரிடர் மீட்புக் குழுவினருக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இதுபோன்ற  முன்தடுப்பு திறன் மேம்பாட்டில், கடலை உன்னிப்பாக கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள் மற்றும் நவீன சாதனங்கள் வானிலை முன்னறிவிப்பை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இப்படி எத்தனையோ முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், புயல்கள் எப்போதும் மனித வாழ்வுக்கும், அவர்களது சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக புயலால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள். உலக அளவில் வங்காள விரிகுடாவில் 4 சதவீத வெப்பமண்டலச் சூறாவளிகளே உருவாகின்றன. ஆனால், இந்த பகுதியில் உருவாகும் புயல்களால் தான் 80 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. புயல் போன்ற ஆபத்துக்களை எதிர் கொள்வதில் புவியியலும் சமூக பொருளாதார காரணிகளும் முக்கியப் பங்காற்றுகின்றன.

வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்கள் விரைவில் தீவிரத் தன்மை அடைய பருவநிலை மாற்றம் மற்றும் கடல் வெப்பமயமாதல் போன்றவை ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இவை சாதாரண புயலை 24 மணி நேரத்துக்குள் அதி தீவிர புயலாக மாற்றி விடுகின்றன. இதுவே விரைவு தீவிரத் தன்மை என கூறப்படுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயலின் போது இதுவே நிகழ்ந்தது. நிவர் புயலின் போதும் இவ்வாறு நடக்கலாம் என கணிக்கப்பட்டது. புயலின்போது 24 மணி நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீ. அதிகரிப்பது விரைவான தீவிரத்தன்மை என கூறப்படும். தற்காலத்தில் வரும் வரும் புயல்கள் இவ்வாறே உள்ளன. கடல் வெப்பமயமாதல் காரணமாக தொடர்ச்சியாக புயல் விரைவாக தீவிரத்தன்மையை அடைவதால், வானிலை முன்னறிவிப்புகள் அதனை உருவகப்படுத்துவது கடினமாகிறது. உதாரணமாக அரபிக் கடலில் உருவான கதி புயல், சாதாரண காற்றழுத்தமாக ஆரம்பத்தில் இருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறியது.

பசிபிக் பெருங்கடலில் லா நினாவின் நிலை தற்போது குளிர்ச்சியாக உள்ளது. இது வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்களின் வளர்ச்சியில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சாதக அம்சங்களைக் கொண்டுள்ளது.  பசிபிக் பெருங்கடலில் தொடரும் இதுபோன்ற லா நினாவின் நிலையால், கடந்த 40 ஆண்டுகளில் 6 இல் 5 தீவிர புயல்கள் தமிழக கடலோரங்களைத் தாக்க நவம்பர் மாதங்கள் ஒத்துப்போகின்றன.  இதனால் இந்த காலக் கட்டங்களில் புயல்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல், நாம் எதிர்பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டன.
நவம்பர் மாதங்களில் வங்கக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 28-29 டிகிரி செல்சியசாக இருக்கும். சில நேரங்களில் 30 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இதுபோன்ற உயர்ந்தபட்ச வெப்பநிலை புயல்களின் வளர்ச்சிக்கு உகந்தவை. கடலின் வெப்பமான நீரில் இருந்து தேவையான ஆற்றலை புயல்கள் பெறுகின்றன. 

செயற்கைக்கோள், நவீன சாதனங்கள், மிதவைகள், கணினி என பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு புயல் தொடர்பான வானிலைகளை நாம் கணித்தாலும், சில குறைபாடுகள் உள்ளன. புவி வெப்பமயமாதல் வானிலை முன்னறிவிப்பு பணியில் புதிய சவால்களை உருவாக்குகிறது. குறிப்பாக விரைவாக தீவிரத் தன்மை அடையும் புயல்களை இன்னும் கூடுதல் உன்னிப்பாக, மிகத் துல்லியமாக கணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT