சிறப்புக் கட்டுரைகள்

ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்ட நாள்!

1st Dec 2020 11:47 AM | பேரா. சா. விஸ்வநாதன்

ADVERTISEMENT

டிசம்பர் 1- ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின் (கருப்பின மக்கள்) வாழ்வில் மாற்றம் தந்த நாள். பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனதற்கும் தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆவதற்கும் வித்திட்ட நாள். ரோசா பார்க்ஸ் நாள் எனக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விதை போட்டவர் "அமெரிக்க மனித உரிமைகளின் தாய்"  என்றழைக்கப்படும் ரோசா பார்க்ஸ் (Rosa Parks).

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், குறிப்பாக மாண்ட்கோமரி நகரில், பேருந்தில் 'வெள்ளையர் மட்டும்' (Whites only) என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது (ஏதோ பல நூறு ஆண்டுகளுக்கு முன் என்றில்லை, வெறும் 65 ஆண்டுகளுக்கு முன்னர்தான்). அதாவது பேருந்தின் முன்பகுதி இருக்கைகளில் வெள்ளையர் மட்டுமே அமர வேண்டும். கருப்பின மக்கள் பின் இருக்கைகளில் அமர வேண்டும். வெள்ளையர்கள் அருகில் கருப்பினத்தவர்கள் அமரக் கூடாது. முன்பகுதியில் இடமில்லையென்றால் கருப்பினத்தவர்கள் எழுந்து நின்று வெள்ளையர்களுக்கு இடம் தர வேண்டும். 75% பேருந்து பயணிகள் கருப்பினத்தவர்கள். பேருந்து ஓட்டுநர் வெள்ளையர் மட்டுமே.

தையல் பணி செய்யும் பெண்மணி ரோசா பார்க்ஸ். 1955 டிசம்பர் 1 ஆம் தேதி, கருப்பு இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் மற்ற மூன்று பேருடன் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தார். சில நிறுத்தங்கள் போனபின், முன்பகுதி இடங்கள் நிறைவடைந்து விட்டதால் பேருந்தில் ஏறிய வெள்ளையருக்கு இடம் தருமாறு கருப்பினத்தவரை ஓட்டுநர் கேட்டார். ரோசா பார்க்ஸுடன் அமர்ந்திருந்தவர்கள் தங்களுடைய இடத்திலிருந்து எழுந்து விடுவார்கள். ஆனால் ரோசா பார்க்ஸ் இடம் தர மறுத்துவிடுவார். உடனடியாக அவர் கைது செய்யப்படுகிறார்.

ADVERTISEMENT

பின்னர் 100 டாலர் உத்தரவாதத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைப் பயன்படுத்தி கருப்பினத் தலைவர்கள் 'பேருந்து புறக்கணிப்பு'ப் போராட்டம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இது 1955 டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

சாதாரணமாக ஒரு நாள் என்று தொடங்கி ஒரு வாரம் என்று மாறி பின்னர் நிரந்தரமாக இந்த வழக்கம் எப்போது முடிவுக்கு வருகிறதோ அதுவரை என்று முடிவாகியது. இந்தப் போராட்டம் 381 நாள்கள், ஓராண்டுக்கும் மேலாக, நீடித்தது. அதுவரை எந்த கருப்பினத்தவர்களும் பேருந்துகளைப் பயன்படுத்தவில்லை. பின்னர்தான் "வெள்ளையர் மட்டும்" என்ற விதி மாற்றப்பட்டது. 

கருப்பு இனத்தவர்கள் பேருந்துப் பயணத்தைத் தொடர்ந்தனர். காந்திக்குப் பிறகு காந்தியக் கொள்கையை வெற்றிகரமாக்கியது இந்த நிகழ்வு.

"அன்று அவர் எழுந்திருக்க மறுத்ததால்தான் இன்றைக்கு நாங்கள் எழுந்து நிற்கவும், தலைநிமிர்ந்து நடக்கவும் முடிகிறது" என்கிறார்கள் கருப்பினத்தவர்கள்.

ரோசா பார்க்ஸ்க்கு நல் வணக்கங்கள்.

Tags : history
ADVERTISEMENT
ADVERTISEMENT