சிறப்புக் கட்டுரைகள்

உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புப் பகிர்வால் எய்ட்ஸ் இல்லா உலகம்

எஸ். மணிவண்ணன்


டிசம்பர் 1-ஆம் தேதி எய்ட்ஸ் நாள். எய்ட்ஸ் நாளைக் கடைப்பிடிக்கத் தொடங்கி 33 ஆண்டுகளாகின்றன. எய்ட்ஸ் பரவாமல் தடுத்தல், அதன் பாதிப்புகளைக்  குறைத்தல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்புக்கரம் நீட்டுதல் போன்ற சேவைகளுக்காகவும் இந்த சேவைகளை உலகம் முழுவதும் ஒருங்கிணைக்கும் செயலுக்காகவும் தேர்வு செய்யப்பட்டதே டிசம்பர் 1.

முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ள இந்த 2020-ம் ஆண்டின்  டிசம்பர் ஒன்றை கரோனா முற்றிலும் மாற்றியமைத்துள்ளது என்றே கூறலாம்.  உலகின் ஒட்டுமொத்த கவனமும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து காத்துக் கொள்வதிலும், அதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறிவதிலுமே தற்போது உள்ளது.

ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டே எய்ட்ஸ் நாள் கடைப்பிடிப்பது வழக்கமாகவுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 'உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புப் பகிர்வை' மையமாகக் கொண்டு இந்த ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

மனித உரிமைகள், பாலின சமத்துவம், சமூகப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு நோய் வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளோடும் பிணைக்கப்பட்டுள்ளதை கரோனா உணர்த்தியுள்ளதால், 'உலகளாவிய ஒற்றுமை மற்றும் பொறுப்புப் பகிர்வு' கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு எய்ட்ஸ் ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

எயிட்ஸ் ஓர் உயிர்க்கொல்லி நோய் என்ற அச்சத்தின் மத்தியில் ஒதுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்தவர்களை சமூகத்தின் ஓர் அங்கமாக பாவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இதனை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இதற்கு போதிய நிதிகளும் திரட்டப்படுகின்றன. வீதி நாடகங்கள், சுவரொட்டி விளம்பரங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் பகடிச் சித்திரங்களாகவும் (மீம்ஸ்களாகவும்) எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் முதல்முதலாக 1986-ஆம் ஆண்டு முதல் நபருக்கு எய்ட்ஸ் கண்டறியப்பட்டது. தமிழகத்திலும் அதே ஆண்டுதான் முதல்முறையாக ஒரு நபருக்கு எய்ட்ஸ் கண்டறியப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் இதன் தீவிரத்தை உணராத நிலையில், 1999 ஆண்டு நாடு முழுவதும் பரிசோதனை செய்யப்பட்ட 36,72,144 மாதிரிகளில் 92,312 பேருக்கு எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் 7,62,426 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 14,750 பேருக்கு எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி 30.98 லட்சம் மக்கள் எச்.ஐ.வி. வைரஸுடன் வாழ்ந்து வருகிறார்கள். இதில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 22 லட்சம் பேர், 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 9.94 லட்சம் பேர், குழந்தைகள் (15 வயதிற்குட்பட்டவர்கள்) 7 ஆயிரத்து 900 பேர் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3.96 லட்சம் பேர் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆந்திரத்தில் 3.14 லட்சம் பேரும், கர்நாடகத்தில் 2.69 லட்சம் பேரும், உத்தரப்பிரதேசத்தில் 1.61 லட்சம் பேரும், தெலங்கானாவில் 1.58 லட்சம் பேரும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 1.55 லட்சம் பேரும் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்ந்து வருகின்றனர். 

கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக 1.21 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 8,540 பேரும், அதற்கு அடுத்தபடியாக பிகாரில் 8,040 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 6,720  பேரும், மேற்குவங்கத்தில் 3,970  பேரும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 920 பேருக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 190 பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுவதாகவும், ஒரு மணி  நேரத்தில் புதிதாக 8 பேருக்கு பரவுவதாகவும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவிக்கிறது. எனினும் கடந்த 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது எச்.ஐ.வி. பரவல் நாட்டில் 37% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க இதுவரை 37.9 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், எச்.ஐ.வி. தொற்று உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்னையாகியுள்ளது. கரோனாவிற்கு முன்பிருந்தே எச்.ஐ.வி. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், சிகிச்சைக்கான மருந்து கண்டறிவதற்கும் தேவையான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் எடுத்து வருகிறது.

உலகத்தில் இன்றும் கூட 1.2 கோடி மக்கள் எச்.ஐ.வி. சிகிச்சை பெற காத்திருக்கிறார்கள். அத்தியாவசிய சேவைகளை அணுக இயலாததால், 2019-ஆம் ஆண்டு மட்டும் 17 லட்சம் மக்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது எச்.ஐ.விக்கான ஐக்கிய நாடுகள் கூட்டுத் திட்டம் (யு.என்.ஏ.ஐ.டி.எஸ்.).

எய்ட்ஸ் நோய் ஆரம்ப காலகட்டத்தில் பாலியல்   தொழிலாளர்களிடையேயும், கனரக வாகன ஓட்டுநர்களிடையேயும் மட்டுமே அதிகம் காணப்பட்டது. ஆனால் 2000-ம் ஆண்டிற்கு பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள், அகதிகள், தொழிற்சாலை ஊழியர்கள், குடிசைப் பகுதிவாழ் மக்கள், விடுதி பணியாளர்கள், சாலையோர குழந்தைகள் என பலருக்கும் கண்டறியப்பட்டது. 

எச்.ஐ.வி. தொற்று பரவல் அதிகமானதால் நாளடைவில் அது குறித்த வதந்திகளும் அதிகம் பரவின. எய்ட்ஸ் நோயாளிகளைத் தொடுதல், உமிழ்நீர், வியர்வை மற்றும் ஒன்றாக சாப்பிடுவதன் மூலம் தொற்று பரவும், பாதிக்கப்பட்டால் உடனடி மரணம் ஏற்படும் போன்ற கட்டுக்கதைகள்தான் அவை. ஆனால் இவை எல்லாமே உண்மையல்ல. 

உண்மையில் இத்தகைய கட்டுக்கதைகளால் எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியே விரைவில் இறக்கின்றனர் என்கிறது மற்றோர் ஆய்வு.
 
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டால்கூட 20 முதல் 30 ஆண்டுகள் வரை வாழலாம் என்பதே உண்மை. எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாததே எய்ட்ஸ் ஒரு கோர நோய் என்ற பிம்பத்திற்குள் வந்ததற்கான முக்கிய காரணம்.

தொடுவதால் எய்ட்ஸ் பரவுகிறது என்றே 2016-ஆம் ஆண்டு வரை பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அவற்றை நவீன மருத்துவ ஆய்வுகள் தவிடுபொடியாக்கின. 

உண்மையில் தொடுதல், கண்ணீர், வேர்வை, உமிழ்நீர், சிறுநீர் போன்றவற்றால் எச்.ஐ.வி. வைரஸ் பரவுவதில்லை. எய்ட்ஸ் நோயுள்ளவர்களுடன் ஒரே தட்டில் சாப்பிடலாம், ஒரே போர்வையில் உறங்கலாம். 
 
ரத்தத்தின் மூலம் எச்.ஐ.வி. வைரஸ் பரவுகிறது என்றாலும், கொசுக்கள் மூலம் அவை பரவுவதில்லை. ஏனெனில் கொசுக்கள் கடிக்கும்போது ரத்தத்தை உடலில் செலுத்துவதில்லை. மேலும் பூச்சிகளிடம் எச்.ஐ.வி. வைரஸ் சிறிது நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள், அதேபோன்று அறிகுறிகள் இல்லை என்றால் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றவில்லை என்று அர்த்தமாகாது. அறிகுறிகள் இல்லாமலும் எச்.ஐ.வி. வைரஸ் பரவும். படிப்படியாக நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்போதுதான் வயிற்றுப்போக்கு, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

அறிகுறிகள் தென்பட்டவுடன் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொண்டு, உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தவறினால் பிற நோய்களோடு காசநோய், மூளைச்சவ்வு வீக்கம், கடுமையான பாக்டீரியா தொற்று, மென்தசை அணுப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் வர வாய்ப்புள்ளது.

உலகமே தற்போது கரோனாவின் பிடியில் நிலைகுலைந்திருக்க மருந்துகள் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகளனைத்தும் 1981-ஆம் ஆண்டு முதலே தடுப்பு மருந்துகளுக்கு வழியின்றி எச்.ஐ.வி. வைரஸைக் கட்டுப்படுத்தவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தின் ஓர் அங்கமாக மாற்றும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போராடி வருபவைதான்.

தமிழகத்தில் 750 எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எய்ட்ஸ் குறித்த தகவல்களையும், விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்குவதற்காக 1800-419-1800 என்ற கட்டணமில்லா உதவி எண்ணையும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.

கிராமம், புறநகர், நகரம் என அனைத்து தரப்பு மக்களிடையேயும் எச்.ஐ.வி. குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகளும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மக்களைப் புறம்தள்ளி ஒதுக்காமல், அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தரவும் அரசு முனைப்புக்காட்டி வருகிறது.  இதனால் தமிழகத்தில் எச்.ஐ.வி. இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு 58,960 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக ஆந்திரத்தில் 11,430 பேரும், மகாராஷ்டிரத்தில் 9,690 பேரும், கர்நாடகத்தில் 6,390 பேரும், தெலங்கானாவில் 4,080 பேரும் இறந்துள்ளனர். தமிழகத்தில் 3,010 பேர் எச்.ஐ.வி.யால் உயிரிழந்துள்ளனர்.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மதிப்பதன் மூலமும், சமுதாயத்தில் அவர்களை அரவணைப்பதன் மூலம் மட்டுமே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வெற்றியடையும். இந்த வெற்றி பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரிப்பதுடன், மேலும் தொற்று பரவாமல் தடுக்க உதவும் என்றால் அது மிகையாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT