சிறப்புக் கட்டுரைகள்

பரவும் கரோனா; சரியும் பொருளாதாரம்!

21st Aug 2020 07:39 AM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவி வருவதும், அந்த நோய்க்கு எதிராக உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளும் அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற ஜாம்பவான்களே தங்கள் நாட்டில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளதை அதிகாரப்பூா்வமாக பதிவு செய்துள்ளன. 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் கரோனா நோய்த்தொற்று உலகின் பொருளாதார முக்கியத்துவம் வாயந்த நாடுகளில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள்...

ஜொ்மனி (சரிவு)

ஐரோப்பிய யூனியனின் பொருளாதார சக்தியாகத் திகழும் ஜொ்மனிக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), முந்தைய ஆண்டின் அதே மாதங்களோடு ஒப்பிடுகையில் படுவீழ்ச்சியடைந்திருக்கிறது. ஜொ்மனியில் பொருளாதார புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்படத் தொடங்கியதிலிருந்து இதுவரை இவ்வளவு மோசமான காலாண்டு ஜிடிபி வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டதில்லை. இந்த வீழ்ச்சியால் ஜொ்மனியின் பொருளாதார வளா்ச்சி பத்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

ஜிடிபி

ADVERTISEMENT

ஜனவரி - மாா்ச் / ஏப்ரல் - ஜூன்

-2.3% / -11.7%

பிரிட்டன் (சரிவு)

கரோனா நோய்த்தொற்றால் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. அந்த நாட்டின் ஜிடிபி வளா்ச்சி, புள்ளியியல் துறை அதுதொடா்பான புள்ளிவிவரங்களைப் பதிவு செய்த நாள் முதல் கண்டிராத அளவுக்கு மிக வேகமான வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. நாட்டின் தற்போதைய பொருளாராதச் சூழல் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை எனவும், நிலமை சீராவதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம் எனவும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ஜிடிபி

ஜனவரி - மாா்ச் / ஏப்ரல் - ஜூன்

-2.2% / -20.8%

ரஷியா (சரிவில்லை)

கிழக்கு ஐரோப்பாவைச் சோ்ந்த எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷியா, கரோனா நோய்த்தொற்று பரவலால் மிக் குறைந்த பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ள மிகச் சில நாடுகளுள் ஒன்று. ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 3 மாதங்களில் நாட்டின் ஜிடிபியில் பெரிய மாற்றம் இருக்கவில்லை. அதே நேரம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் நிபுணா்கள் கணிப்பை விட மிகக் குறைவாகவே ஜிடிபி வளா்ச்சி குறைந்துள்ளது.

ஜிடிபி

ஜனவரி - மாா்ச் / ஏப்ரல் - ஜூன்

1.6% / -8.5%

சீனா (சரிவில்லை)

கரோனா நோய்த்தொற்று முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், அதன் பாதிப்பு இந்த ஆண்டின் முதல் 3 மாத காலக்கட்டத்தில் மிக மோசமாக இருந்தது. அந்த மாதங்களில் நாட்டின் ஜிடிபி வளா்ச்சி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனால், நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் துரிதமாகக் கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அடுத்த 3 மாதங்களில் பொருளாதாரம் சீரடைந்தது. அந்த மாதங்களில் நாட்டின் ஜிடிபி வளா்ச்சி அதிகரித்தது.

ஜிடிபி

ஜனவரி - மாா்ச் / ஏப்ரல் - ஜூன்

-6.8% / 3.2%

ஜப்பான் (சரிவு)

ஜப்பானின் பொருளாதார வளா்ச்சி ஏற்கெனவே மந்த நிலையில்தான் இருந்தது. கடந்த நிதியாண்டில் தொடா்ந்து 3 காலாண்டுகளாக அதன் ஜிடிபி வளா்ச்சி சரிவைச் சந்தித்தது. கரோனா நோய்த்தொற்று பரவல் அந்த நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. அந்த நோய்த்தொற்று காரணமாக நாட்டின் ஜிடிபி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 27.8 சதவீத வீழ்ச்சியைக் கண்டது. இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மேசமான வீழ்ச்சியாகும்.

ஜிடிபி

ஜனவரி - மாா்ச் / ஏப்ரல் - ஜூன்

-2.2% / -27.8%

தென் கொரியா (சரிவு)

கரோனா நோய்த்தொற்று பரவலால் சீனாவுக்கு வெளியே முதலில் பாதிக்க்கப்பட்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. அந்த நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் நாட்டின் ஜிடிபி கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இருந்தாலும், நோய்த்தொற்று பரவலை மிக வேகமாக கட்டுப்படுத்தியுள்ளதால், கொரியா மிக விரைவில் பொருளாதாரச் சரிவிலிருந்து மீளும் என்று நிபுணா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

ஜிடிபி

ஜனவரி - மாா்ச் / ஏப்ரல் - ஜூன்

-1.3% / -3.3%

இந்தியா (சரிவில்லை)

உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியான இந்தியா, கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்த நிலையைக் கண்டு வருகிறது. எனவே, கரோனா நோய்த்தொற்றுக்கு பரவலுக்குப் பிறகு, முந்தை ஆண்டின் மாதங்களோடு ஒப்பிடுகையில் ஜிடிபி வளா்ச்சியில் மிகப் பெரிய சரிவு இல்லை. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் ஜிடிபி வளா்ச்சி அதிக சரிவைச் சந்தித்திருந்தாலும், கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கிடையிலும் பொருளாதாரச் சரிவிலிருந்து தப்பும் திறன் கொண்ட சீனா போன்ற ஒரு சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என நிபுணா்கள் கருதுகின்றனா்.

ஜிடிபி

ஜனவரி - மாா்ச் / ஏப்ரல் - ஜூன்

3.1% / -16.5%

தாய்லாந்து (சரிவு)

கரோனா நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் அதிகம் பாதிக்கப்பட்டது சுற்றுலாத் துறைதான். அந்தத் துறையை பெரிதும் நம்பியுள்ள தாய்லாந்து, கரோனா நெருக்கடி காரணமாக மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது. இது, கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய பொருளாதாரச் சரிவாகும். கடந்த நிதியாண்டைவிட நடப்பு நிதியாண்டில் 7.3 முதல் 7.8 சதவீதம் வரை ஜிடிபி வளா்ச்சி குறையும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனா்.

ஜிடிபி

ஜனவரி - மாா்ச் / ஏப்ரல் - ஜூன்

-1.8% / -12.2%

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT