சிறப்புக் கட்டுரைகள்

ஒரு சொல் கேளீர்: பூஷணா, பூஷனா?

21st Aug 2020 04:43 PM | எம். பாண்டியராஜன்

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் மிஸ்ர, பிரசாந்த் பூஷணைப் பார்த்துக் கேட்கிறார்:

“நீங்கள் உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்கிறீர்களா?

பிரசாந்த்: மறுபரிசீலனை செய்வதற்கு அதில் ஏதுமில்லை.

மிஸ்ர: உங்களுக்கு மூன்று நாள்கள் வழங்குகிறோம், யோசித்து வந்து சொல்லுங்கள்.

ADVERTISEMENT

பிரசாந்த்: யோசிப்பதற்கு எதுவுமில்லை.

மிஸ்ர: இல்லை, நீதிமன்றம் நீங்கள் யோசிக்க அவகாசம் தருகிறது. நாளை நீதிமன்றம் கால அவகாசம் தரவில்லை என்று குறை சொல்லிடக் கூடாது அல்லவா?

பிரசாந்த்: யோசிக்க ஏதுமில்லை. கால அவகாசம் கொடுத்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

மிஸ்ர: இன்று தவான் தனது வாதத்தை முடித்துக் கொள்ளட்டும். பிரசாந்த் யோசிக்க நீதிமன்றம் அவகாசம் கொடுக்கிறது.

கடந்த சில வாரங்களாக அவ்வப்போதும் சில நாள்களாகப் பல முறையும் ஊடகங்களில் ஒரு பெயர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது - பிரசாந்த் பூஷண்!

நீதிபதிகளைப் பற்றி அவர் சுட்டிக்காட்டிய சிலவற்றுக்காக உச்ச நீதிமன்றம் தாமாக மேற்கொண்ட விசாரணையில் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்த நாளில் நடந்த உரையாடல் என சமூக ஊடகங்களில் வலம்வரும் வரிகள்தான் இவை.  

அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என அங்கிங்கு என்றில்லாமல் எல்லா இடங்களிலும் பூஷண், பூஷன் என்று இரண்டுவிதமாக அவருடைய பெயர் குறிப்பிடப்படுகிறது.

பூஷணா, பூஷனா?

அதுபற்றி யாரும் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை, கவலைப்படுவதாகவும் தோன்றவில்லை.  ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி எழுதிக் கொண்டிருக்கிறார்கள், ஒரு பெயருக்கான எழுத்துகளும் உச்சரிப்பும் என்னவாக இருக்கும் என்ற குறைந்தபட்ச அக்கறைகூட இல்லாமல்.

பூஷண் என்பதே சரி. இதுவொரு வட மொழிச் (சமஸ்கிருத) சொல். ஆனாலும், இந்தியாவில் தமிழ், வங்காளி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராட்டி, ஒடியா, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் புழங்கிக் கொண்டிருக்கிறது.

பூஷண், பூஷணம் என்றால் அணிகலன், ஆபரணம் என்று பொருள்.

அணிகலன், அலங்காரம், அல்லது விஷ்ணு என்றும் சில அகராதிகள் தெரிவிக்கின்றன.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் (தமிழ் லெக்சிகனில்) பூஷணம் என்றால் பூஷண, நகை, அணிகலம் எனக் குறிப்பிடப்படுகிறது.

பூஷணம் என்பதற்குப் பூடணம், நகைகள், ஆபரணம் என்கிறது ஜே.பி. ஃபேப்ரிஷியஸ் தமிழ் - ஆங்கில அகராதி. பூஷணாலங்கிருதம் - மிக உச்சமாக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட; வின்ஸ்லோ அகராதியும் அவ்வாறே குறிப்பிடுகிறது.

கர்ண பூஷண விழா என்றால் காதணி விழா, கர்ணம் - காது, பூஷண - அணி, அணிகலன்.

'புஸ்தகம் ஹஸ்த பூஷணம்' - புத்தகம் வைத்திருப்பது கைக்கு அணிகலன், கைக்கு அழகு.

ஸ்ரீவசன பூஷணம், சங்கீத பூஷணம் என்றெல்லாம் விருதுகள், பட்டங்கள் இருக்கின்றன.

இவ்வளவு ஏன், இந்தியாவில் அரசு அளிக்கும் மிக உயரிய விருதான பாரத ரத்னவுக்கு அடுத்த இடங்களிலுள்ள விருதுகள் - பத்ம பூஷண், பத்ம விபூஷண்!

எனவே, அவர் பிரசாந்த் பூஷண்.

இவருடைய தந்தை சாந்தி பூஷணும் புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். 1977-ல் மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியமைத்தபோது சட்டத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.

பிரசாந்த் என்றால் அமைதியானவர், அமைதியான மனம் கொண்டவர் எனப் பொருள், சாந்தி என்றால் அமைதி. ப்ர என்றால் கூடுதல் அழுத்தம் தருவதற்காக. வீரன், மாவீரன்.

சரி, பூஷன் என்று எழுதுகிறோமே, அதற்கு என்ன பொருள்?

பூசனம் என்றால் ஆராதனை என்றொரு பொருள். பூசகர் - அர்ச்சகர், ஆராதனை செய்பவர்.

இன்னொரு பொருள், மரங்கள், கட்டைகளில் உருவாகும் பூஞ்சானுக்கு பூசனம் என்று பெயர். பூசனம் பிடித்துவிட்ட உணவுப் பொருள்கள் என்பார்கள் கிராமங்களில் பேச்சுவழக்கில். கிட்டத்தட்ட கெட்டுப்போன என்றுதான் பொருள்.

அவரை பிரசாந்த் பூஷன் என்று குறிப்பிடுவது எவ்வளவு அபத்தம்?

இந்தியாவைப் போன்ற பன்மொழிகள் பேசப்படுகிற நாட்டில் எண்ணற்ற பெயர்ச் சொற்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மொழிச் சொல்லுக்கும் கண்டிப்பாக ஒரு வேர்ச்சொல் இருக்கும். ஒரு பெயரைச் சொல்ல, குறிப்பிட வேண்டிய வேளை வந்ததுமே, குறிப்பிட்ட மொழியில்  உச்சரிப்பைக் கவனித்து, அல்லது விசாரித்து, வேர்ச் சொல்லைக் கண்டறிந்து, குறிப்பிடுவதும் எழுதுவதும் அவசியம்.

எனவே, பூஷன் அல்ல, பூஷண்! சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண்!

Tags : word
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT