சிறப்புக் கட்டுரைகள்

சீன டிராகனின்  ஆக்டோபஸ் கரங்கள்!

எஸ். ராஜாராம்


"ஹாங்காங்கின் பத்திரிகை சுதந்திரத்தை மட்டுமன்றி, சாமானிய மக்களையும் குறிவைக்கும் சக்தியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒருநாள் மாறிவிடும் என அஞ்சினேன். அந்த நாள் வந்துவிட்டது' என நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த மே மாத இறுதியில் தான் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் ஆப்பிள் டெய்லி பத்திரிகை உரிமையாளர் ஜிம்மி லாய்.

 ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து சீன அரசு அறிவித்த சில நாள்களுக்கு முன்பாக எழுதப்பட்டது அந்தக் கட்டுரை. சரியாக இரண்டே மாதங்களில், அவர் அஞ்சியவாறே தனது ஆக்டோபஸ் கரங்களை ஜனநாயக ஆதரவாளர்களை நோக்கி வீசிச் சுருட்டுகிறது தேசிய பாதுகாப்புச் சட்டம்.

கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு 11 மணி முதல் அமலுக்கு வந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம். வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு, பிரிவினை, பயங்கரவாதம் என எதையெல்லாம் சீனா நினைக்கிறதோ அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இச்சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும். சட்டம் அமலுக்கு வந்தவுடனேயே ஹாங்காங்கில் சமூக ஊடகப் பதிவுகளுக்காக மாணவர்கள் கைது, வெளிநாடுகளில் வசிக்கும் ஹாங்காங்கை சேர்ந்த ஜனநாயக ஆதரவாளர்களுக்கு வாரண்ட் என ஹாங்காங் நிர்வாகம் தனது அடக்குமுறைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கியது.

அமெரிக்கத் தடையும் சீனாவின் பதிலும்
இதற்கிடையே, கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் காரணம்காட்டி ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலையும் ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம். சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிரான தீர்ப்பு தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலையே ஒத்திவைத்தது ஹாங்காங் மக்களை மட்டுமன்றி, உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர், தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கான ஒரே வழியும் அடைபட்டுப் போனதே என ஹாங்காங் மக்கள் ஏமாற்றமடைந்தனர். அத்துடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஜனநாயக ஆதரவாளர்கள் சிலர் தகுதிநீக்கமும் செய்யப்பட்டனர்.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் உள்ளிட்ட 11 அதிகாரிகளுக்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. "வேட்பாளர்கள் தகுதிநீக்கம், தேர்தல் ஒத்திவைப்பு போன்ற நடவடிக்கைகள் ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மைக்கு அடிப்படையான ஜனநாயக செயல்முறையை அவமதிப்பதாகும்' என பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத சீனா, அமெரிக்காவுக்கு பதிலடியாக அந்நாட்டு செனட் சபை உறுப்பினர்கள் மார்கோ ரூபியோ, டெட் குரூஸ் உள்ளிட்ட 11 பேருக்குத் தடை விதிப்பதாக அறிவித்தது.

ஜிம்மி லாய் கைது
இதன் உச்சகட்டம்தான் ஜிம்மி லாய் கடந்த ஜூன் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிகழ்வு. அடக்குமுறை, மனித உரிமை மீறல் ஆகியவற்றை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காண்பித்தது இந்தக் கைது நடவடிக்கை. ஜிம்மி லாயை அவரது வீட்டுக்குள் சென்று கைது செய்த போலீஸார், அவரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். "வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பில் இருப்பதாக' அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அத்துடன் லாயின் இரு மகன்கள், பத்திரிகை அலுவலக அதிகாரிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். 200 போலீஸார் பத்திரிகை அலுவலகத்துக்குள் துப்பாக்கி முனையில் சென்று சோதனையிட்டு 25 பெட்டிகளில் ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறி எடுத்துச் சென்றனர்.

இந்தக் கைது நடவடிக்கை ஹாங்காங் மக்களைக் கொதித்தெழச் செய்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜிம்மி லாய் கைவிலங்குடன் அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தைத் தாங்கி வந்த பத்திரிகை பிரதிகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கினர். வழக்கமாக ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்படும் நிலையில், அன்றைய தினம் 5 லட்சம் பிரதிகளை அச்சடித்தது ஆப்பிள் டெய்லி நிறுவனம். பங்குச் சந்தையில், ஆப்பிள் டெய்லியை வெளியிடும் நெக்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பும் எகிறியது.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஜிம்மி லாய், "பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை ஹாங்காங் மக்களின் நம்பிக்கை மீதான வன்முறையாகும்' எனவும், சீனாவின் போக்கை மாற்றாவிட்டால் உலகம் அமைதியாக இருக்க முடியாது, ஆதலால் தொடர்ந்து ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

வேடிக்கை பார்க்கலாமா?
பெரும் ஜனநாயக ஆதரவு சக்தியாகவும், வெளிநாட்டுத் தலைவர்களுடன் நல்ல அணுகுமுறையைக் கொண்டிருந்தவருமான ஜிம்மி லாயைக் கைது செய்ததன் மூலம் சீனா சொல்ல வரும் கருத்து ஒன்றே ஒன்றுதான். "ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் எந்தப் பலனையும் தரப்போவதில்லை; தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் துணை கொண்டு எத்தகைய போராட்டத்தையும் நாங்கள் முறியடிப்போம்' என்பதுதான் அது.
1997}இல் பிரிட்டனிடமிருந்து ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்தபோது, ஒரு நாடு, இரு அமைப்புகள் என்ற முறை பின்பற்றப்படும் என ஹாங்காங்குக்கு சீனா உறுதிமொழி அளித்தது. அதன்படி, ஹாங்காங் மக்களின் கருத்துரிமை, பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை தனித்தன்மையுடன் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், சீன டிராகனின் ஆக்டோபஸ் கரங்கள் ஹாங்காங்கின் ஜனநாயகக் குரல்வளையை சுற்றிவளைத்து நெரிக்கத் தொடங்கியுள்ளன. உலக நாடுகள் இதை அப்படியே விட்டுவிடலாமா, வேடிக்கை பார்க்கலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT