சிறப்புக் கட்டுரைகள்

பாலினத்தைச் சொல்லாமல் குழந்தை வளர்ப்பு என்பது இந்தியாவில் சாத்தியமா?

21st Sep 2019 05:05 PM | கார்த்திகா வாசுதேவன்

ADVERTISEMENT

 

பாலின நடுநிலைத் தன்மையுடன் குழந்தைகளை வளர்ப்பது ஆரோக்யமானது என்கிறார்கள் சிலர்... இதில் உங்கள் கருத்து என்ன?

இந்த விஷயத்தை எப்படித் தொடங்கினால் சரியாக இருக்கும்? 

ஒரேநாளில் எதையும் மாற்றி விட முடியாது தான், ஆனால், மாற்றங்கள் அவசியப்படும் விஷயங்களில் இதுவும் பிரதானமானது எனும்போது நமது பார்வை வரம்பு விரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ADVERTISEMENT

முதலில் பாலின நடுநிலைத்தன்மை என்றால் என்ன? 

உங்களுக்கு குழந்தை பிறக்கிறது. பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வது தானே பெற்றவர்களின் முதல் ஆவலாக இருக்கக்கூடும்.

சரி ஆணோ, பெண்ணோ ஏதோ ஒரு குழந்தை பிறக்கத்தானே போகிறது. பிறகெதற்கு குழப்பம் என்று தோன்றலாம்.

குழப்பம் பிறக்கப்போகும் குழந்தை பற்றியதல்ல. பிறந்து விட்ட குழந்தை ஆணா, பெண்ணா? அல்லது மூன்றாம் பாலினமா? என்பதை அதைப் பெற்றவர்களான நாம் தீர்மானிக்கத் தேவையில்லை. அதை வளரும் போது அந்தக் குழந்தையே தீர்மானித்துக் கொள்ளும் என்பதில் தான்.

இன்று செக்‌ஷன் 377 மூலமாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக உரிமைகள் உறுதி செய்யப்பட்டபிறகு இதைப்பற்றி நாம் நிச்சயம் பேசித்தான் ஆக வேண்டும்.

ஏனெனில், தங்கள் குழந்தைகளை பாலின நடுநிலைத்தன்மையுடன் வளர்க்க நினைக்கும் மேலைநாட்டுப் பெற்றோர், அதற்கான காரணமாக முன் வைப்பது, இந்தச் சமூகம் குழந்தைகள் மீது வைக்கும் பாலின சார்புகளைத் தணிப்பதற்காகத்தான்’ என்பதே!

இப்படி பாலின நடுநிலைத் தன்மையுடன் வளரும் குழந்தைகளுக்கு ஆண், பெண் என வேறுபடுத்திக் காட்டும் உடைகளை அணிவிப்பதில்லை என்பதில் தொடங்கி ஒட்டுமொத்தமாக அவர்களது வளர்ப்புச் சூழலையே வித்தியாசப்படுத்தி விடுகிறார்கள் அவர்களது பெற்றோர். அவர்களைப் பொருத்தவரை குழந்தைகள் பால்வேறுபாடுகள் மட்டுமல்லாது வேறு எவ்விதமான கல்மிஷ உணர்வுகளுமின்றி வளர வேண்டும் என்பதே மிகப்பெரிய குறிக்கோளாக இருக்கிறது. இத்தகைய பெற்றோர் தம் குழந்தையின் பாலினத்தைப் பற்றி நெருங்கிய உறவினர்களிடம் கூட தெரிவிப்பதில்லை. 

பிரிட்டிஷ் பெற்றோர்களான ஜாக் இங்லண்ட் ஜான் மற்றும் ஹாப்பிட் ஹம்ஃப்ரே தம்பதி, தங்களது குழந்தை அனெளஸ்ஸை பாலின நடுநிலைத்தன்மையுடன் வளர்த்து வருகிறார்கள். அனெளஸ் ஆண்குழந்தையா? பெண்குழந்தையா என்று அவர்களது நெருங்கிய உறவினர்களுக்குக் கூடத் தெரியாது. அவர்கள் தங்கள் குழந்தையை அவன் (He), அவள்(She)  என்று கூடச் சொல்வதில்லை மாறாக ‘அவர்கள்’(They) என்றே குறிப்பிடுகிறார்கள். They என்று குறிப்பிடுவது இலக்கணப்படி தவறாக இருக்கலாம். ஆன போதும் அப்படிச் சொல்வதே ஜெண்டர் நியூட்ரல் அல்லது பாலின நடுநிலைத்தன்மைக்கு நியாயமாக இருக்கலாம்.

அந்தக் குழந்தை வளர்ந்து அதற்கு குறிப்பிட்ட வயது வந்ததும் தன் உடல் மற்றும் மன இயல்புகளைப் பொருத்து அது தானாகவே முடிவு செய்து கொள்ளட்டும் ஆணா, பெண்ணா, திருநங்கையா, திருநம்பியா, அல்லது இருபாலினமா?!... தான் எப்படி உணர்கிறதோ அப்படி? என்று இதைப் பற்றி விளக்குகிறார்கள் பாலின நடுநிலைத்தன்மை அடிப்படையில் குழந்தை வளர்ப்பை நடத்த விழையும் பெற்றோர்.

இவ்விஷயத்தில் இவர்களின் ஒரே எதிர்பார்ப்பு, குழந்தையை பாலின நடுநிலைத்தன்மையுடன் வளர்த்தால் இன்று சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிக முக்கியமான பிரச்னையான பாலியல் வன்முறை குற்றங்கள், எல் ஜி பி டி கியூ சமூகத்தினருக்கு சமூகத்தில் நிலைபெற்றிருக்கும் ஆண்டாண்டு காலப் புறக்கணிப்புகள் என இவையிரண்டும் இந்தச் சமூகத்திலிருந்து படிப்படியாக ஒழிந்து விடும் எனக்கருதியே அவர்கள் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இவர்களின் எதிர்பார்ப்புக்கு எந்த அளவுக்கு சமூகத்தில் வரவேற்பும் புரிதலும் இருக்கக் கூடும் எனத் தெரியவில்லை. மேலை நாடுகளில் எப்படியோ? ஆனால் நம் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளை அவர்களின் பாலினத்தை வெளிப்படுத்தாமல் வளர்க்க முடியுமா?

அப்படியே வளர்க்க முடிந்தாலும் பிற்காலத்தில் பள்ளி செல்லும் பருவத்தில் அந்தக் குழந்தைக்கு அதில் குழப்பம் ஏற்பட்டு விடாதா? என்ற சஞ்சலங்கள் எல்லாம் இங்கத்திய பெற்றோருக்கு உண்டு.

பால்பாகுபாடுகள் இன்றி குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய அவாவாகவும் இருக்கலாம். ஆனால், அதி ஒரு ஒற்றுமையும், புரிதலும் இருந்தாலல்லவா அந்த முயற்சி முழு வெற்றி பெற முடியும். ஆக, நம் நாட்டில் இது இப்போதைக்கு சாத்தியப்படாத முயற்சியாக இருக்கமுடியும். 

இப்போதைக்கு நம்மால் ஆனது, குறைந்தபட்சம், நம் குழந்தைகள் வளர்ந்து வரும் காலத்தில் அவர்களிடையே மூன்றாம் பாலினத்தாரை மதிக்கக் கூடிய, புரிதலுடன் பழக்கக்கூடிய சூழலை வேண்டுமானால் உருவாக்கித்தர முயற்சிக்கலாம். 

LGBTQA என தற்போது நாம் தனித்துப் பிரித்து பேதம் காண்கிறோமே அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்களை அசூயையாக அணுக வேண்டிய அவசியமில்லை. எனும் புரிதல் நம்மிடையே வருவதற்கே இன்னும் ஒரு மாமாங்கள் தேவைப்படலாம். ஆம், இந்த முயற்சியில் நாம் கடந்து வந்த தூரம் இவ்வளவே!

இதில் பிறக்கப்போகும் குழந்தைகளைப் பாலினத்தைச் சொல்லாது வளர்ப்பதென்பது இங்கு மிக கடினமான முயற்சியே!

நம் நாட்டில் இது குறித்த மேலதிகமான விவாதங்கள் தேவைப்படுகின்றன.

தங்கள் குழந்தைகளை பாலின-நடுநிலையாளர்களாக வளர்க்கும் சில பெற்றோர்களில் கேட் ஹட்சன் மற்றும் பிங்க் போன்ற ஐரோப்பிய பிரபலங்களும் உள்ளனர். இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் தங்கள் குழந்தை ஆர்ச்சியின் பிறப்பு பதிவேட்டில் பாலினத்திற்கு நேராக ’ஃப்ளூயிட் (Fluid) என்றே குறிப்பிட்டிருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஃப்ளூயிட் நிலை என்பது சில சமயம், ஆண் தன்மையும், சில சமயங்களில் பெண் தன்மையும் அதிகரிக்கும் விதமான உடற்கூறு மற்றும் மனநிலையைக் குறிப்பிட உதவும் பதமெனக் கூறுகிறார்கள் மேலை நாட்டு மருத்துவர்கள்.

சரி பெற்றோர்கள் இப்படி முடிவெடுத்து விட்டால் போதுமா? நாளை அந்தக் குழந்தை இந்த சமூகத்தில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து பழகி வாழ வேண்டாமா? பாலின நடுநிலைத்தன்மையுடன் வளர்ந்து வரும் போது அக்குழந்தையை மற்றவர்கள் பகடி செய்து ஒதுக்கி விடமாட்டார்களா? அப்போது குழந்தையை எப்படிச் சமாதானம் செய்வது? ஏன் அதன் பெற்றோரும் தான் எப்படிச் சமாதானமாவது? என்ற கேள்வி பாலின நடுநிலைத்தன்மையை ஆதரிக்கும் பெற்றோரிடம் எழாமல் இல்லை.

ஆனால், அதைப் பற்றிப்பேசும் போது குழந்தை வளர்ப்பு நிபுணர் ஒருவர் வெளியிட்ட கருத்து என்னவென்றால், மற்றெல்லாவற்றையும் விட்டுத்தள்ளுங்கள், உங்கள் குழந்தை தனக்குள் எவ்விதமாக உணர்கிறதோ அதே விதமாக அதை வளரவிடுங்கள். அது தான் அந்தக் குழந்தைக்கு பெற்றவர்களென நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை. அதை விட்டு விட்டு குழந்தையை இந்த சமூகம் எந்த விதத்தில் அணுகும்? யாரெல்லாம் கேலி செய்து மனம் பாதிப்படையச் செய்வார்கள், குழந்தையின் எதிர்கால வாழ்க்கை என்னாவது? என்பன போன்ற கேள்விகளை மூளையிலிட்டுக் கலங்கி குழந்தையின் உணர்வுகளைக் கொன்று விடக்கூடாது. என்கிறார் அவர்.

இவர் சொல்வதிலும் நியாயமிருக்கிறது. 

குழந்தை கருவிலிருக்கும் போது அதன் பெற்றோர், ‘நாங்கள் எங்கள் குழந்தையை பாலின நடுநிலைத்தன்மையுடன் வளர்க்கப்போகிறோம், என்று அறிவிப்பது வேறு, அதே அந்தக் குழந்தை பிறந்து பூமியில் விழுந்தபின் அதைப் பார்க்க அணுகும் உற்றாரிடமிருந்தும், குழந்தை வளரும் சூழலில் அது செல்லுமிடமெங்கும்... உரக்கக் கேட்கப்படும்... What is your gender' டைப் கேள்விகளுக்கும் நிறுத்தி நிதானமாகப் பதில் சொல்ல வேண்டுமே! ஆமாம், சொல்லத்தான் வேண்டும். இந்த சமூகத்தை இப்படி அணுகினால் மட்டுமே அவர்கள் குறைந்த பட்சம் புரிந்து கொள்ளவாவது முயற்சிப்பார்கள். 

நடுவில், உறவிலோ அல்லது பொது இடங்களிலோ குழந்தையின் பாலினத்தைச் சொல்லாததால் முறைத்துக் கொண்டு போகும் பழம் பஞ்சாங்கங்களை எல்லாம் பொருட்படுத்தத் தேவை இல்லை என்பதே இதில் நியாயமான அணுகுமுறையாக இருக்கக் கூடும்.

 

Tags : பாலின நடுநிலைத்தன்மை பாலின பாரபட்சமற்ற தன்மை இந்தியாவின் பாலினப்பாகுபாடு gender neutrality gender discrimination in india to reduce sexual abuse to understand the LGBTQA community of people to raise the healthy society
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT