தமிழகத் தங்கைகளுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சொல்லிச் சென்ற முக்கியமான அறிவுரை!

தெலங்கானாவுக்குப் புறப்படும் முன் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய தமிழிசை தனது தமிழகத் தங்கைகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்பியது இதைத்தான்;
தமிழகத் தங்கைகளுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சொல்லிச் சென்ற முக்கியமான அறிவுரை!

தமிழிசை செளந்தரராஜன்..

தமிழகத்தைப் பொருத்தவரை பாஜகவின் மாநிலத் தலைவராக இவர் அறிவிக்கப்பட்ட பின்னரே தினம், தினம் பட்டி தொட்டியெங்கும் பாஜக பேசுபொருளானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏன்.. தமிழிசைக்கு முன்பு தமிழகத்தில் திறன் வாய்ந்த பாஜக மாநிலத் தலைவர்கள் எவரும் இருந்ததில்லையா? அவர்களால் பாஜகவைப் பட்டி, தொட்டியெங்கும் கொண்டு சேர்க்க முடிந்ததில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் கட்சியை வளர்த்திருக்கலாம். ஆனால், கட்சியை, கட்சியின் செயல்பாடுகளை மக்களிடையே பேசுபொருளாக்கியதில் அவர்கள் தமிழிசை அளவுக்குச் செயல்பட்டிருப்பார்களா? என்றால் அது விவாதத்திற்குரியது. ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று பிடிவாதமாக அவர்களில் எவரும் பஞ்ச் டயலாக் விட்டிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தமிழிசையைக் காட்டிலும் பிறவி பாஜகவினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் அக்கட்சியில் பிரதான, பிரபல உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் இருக்கலாம். ஆனால், இவர் தமிழக பாஜகவின் தலைவரான பின்பு மற்றவரெல்லோரும் பின்னணியில் மங்கலாக மறைய தமிழகத்தின் ஒட்டுமொத்த பாஜக முகமாகத் திகழ்ந்து கொண்டிருந்தவர் தமிழிசை மட்டுமே என்பது மறுக்க முடியாத உண்மை.

அதனால் தான் அவரைக் கட்சி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் பாஜக தலைமை கவர்னராக்கி அழகு பார்க்கிறதோ என்று கூட சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கெல்லாம் தமிழிசையே தமது நேர்காணல்கள் தோறும் தெளிவான பதில் அளித்து பக்காவாகச் அந்தச் சூழலை கையாண்டு கொண்டிருக்கிறார். 

ஒரு பெண்.. இந்த ஆண் மைய உலகில்  அரசியல்வாதியாக ஜெயிப்பதென்பது மிக மிகக் கஷ்டமான காரியம். அதிலும் ஒரு தேசியக் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து அங்கிருந்து படிப்படியாக கட்சியில் பொறுப்புகளைப் பெற்று உயர்ந்து கட்சியின் மாநிலத் தலைவராக உயர்வதென்பது எளிதில் சாத்தியமாகக் கூடிய காரியமில்லை. அதற்கு கடுமையான உழைப்பும், சலிக்காத பயணங்களும், அயராத மக்கள் சந்திப்புகளும் நிகழ்த்தப்பட வேண்டும். இவை அனைத்தும் ஆண் தலைவர்களால் சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்படக் கூடும். அதே ஒரு பெண் தலைவர் எனும் போது அவருக்கு அவரது குடும்பத்தின் பக்க பலம் நிச்சயம் தேவை. தமிழிசை விஷயத்தில் அவரது அரசியல் பயணத்தின் பின்னணியில் ஆரம்பம் தொட்டே இருவர் இருந்திருக்கிறார்கள். முதலாமவர் தமிழிசையின் கணவர் டாக்டர் செளந்தரராஜன், இரண்டாமவர் தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரி.

அம்மாவின் அரவணைப்பும், அனுசரணையும் இல்லாவிட்டால் தமிழிசையால் வெற்றிகரமான தலைவராகப் பரிணமித்திருக்க முடியாது என்பது நிஜம்.

இன்றைய அரசியல் களத்தில் மற்ற அரசியல் தலைவர்களது மனைவி மக்கள் குறித்த செய்திகள் எல்லாம் ஊடக வெளிச்சம் பெற்றிருக்கையில் தமிழிசையின் தந்தையும் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தனின் மனைவி கிருஷ்ணகுமாரி பற்றி நாம் தெளிவாகவும், விரிவாகவும் அறிய நேர்ந்தது தமிழிசையின் அரசியல் வெற்றிகளின் பின்னரே! மேலும் உறுதியாகச் சொல்வதென்றால் தமிழிசை தெலங்கானா ஆளுநர் ஆனபின்னரே, கிருஷ்ணகுமாரி அம்மாளின் ஆளுமைத்திறன் வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

தன் மகளுக்கு மிகச்சிறந்த பக்கபலமாக இருந்து அந்தம்மாள் ஆற்றிய பணியே இன்று தமிழிசையை இந்த உயரத்தில் அமர வைத்து அழகு பார்க்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

அந்த வகையில் தமிழிசையும், அவரது தாயாரும் தமிழகப்பெண்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணங்கள் என்றே சொல்லலாம்.

தமிழிசை தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்று அங்கு சென்று தன் பணிகளை முறையாகத் துவக்கும் முன்பு, இங்கு தமிழ்நாட்டுச் சகோதரிகளுக்குச் சொல்லிச் சென்ற ஒரு முக்கியமான அறிவுரையை பெண்கள் எல்லோரும் அறிந்து கொள்வது முக்கியம். இதை அறிவுரை என்று எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள், அரசியலில் வென்ற ஒரு மூத்த சகோதரியின் எளிமையான ஆலோசனையாகக்கூட கருதிக் கொள்ளலாம். 

தெலங்கானாவுக்குப் புறப்படும் முன் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய தமிழிசை தனது தமிழகத் தங்கைகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்பியது இதைத்தான்;

அதாவது;

‘அரசியல் என்பது பெண்களுக்கானதும் கூட, 50% பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதில் எத்தனை சதவிகிதம் பெண் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்? யோசித்துப் பாருங்கள். மிக மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே பெண் அரசியல்வாதிகளும், தலைவர்களும் இருக்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். முதலில் அரசியலுக்கு வரவேண்டும் என்று பெண்கள் நினைக்க வேண்டும். சில பெண்கள் துணிந்து அரசியலுக்கு வருகிறார்கள், ஆனால், வந்தாலும் இங்கே பெண் அரசியல்வாதிகளுக்கு நேரும் சிரமங்களைப் பார்த்ததும் இது நமக்கான இடம் இல்லை என்று ஓடி விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. அரசியல் என்பது பெண்களுக்கானதும் கூட என்ற உறுதித் தன்மையோடு இருக்க வேண்டும். இதை நான் தங்கைகளுக்குச் சொல்கிறேன்.

பெண் அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் நிறையவே இருக்கின்றன. அந்த சங்கடங்களுக்கு பெரும்பாலும் அவர்களே கூட காரணமாகி விடுகிறார்கள். வெளியிலிருந்து யாரோ தடுப்பதை விடுங்கள், பல நேரங்களில் பெண்களின் அரசியல் முன்னேற்றத்துக்கு அவர்களே தான் தடைகளாக ஆகிக் கொள்கிறார்கள். ஆளுமை இருக்க வேண்டும் அழுகை இருக்கக் கூடாது. பெண்கள் சாதாரணமாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். சிரமங்களை எதிர்கொள்ளும் போது தடுமாறிப் போய்விடுவார்கள். உதாரணத்திற்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், இதோ இப்போது உங்களுக்கு நேர்காணல் அளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மணி நள்ளிரவு 12.30 இதை முடித்து விட்டு நான் 1 மணிக்கு மீட்டிங்குக்கும் வெளியில் சென்று வருவேன். சிரமமாக இருக்கிறதென்று ஒருநாளும் நான் நினைத்ததில்லை. தமிழகத்தில் மிக அதிகமாகக் கேலி செய்யப்பட்ட விமர்சிக்கப்பட்ட பெண் அரசியல் தலைமை நானாகத்தான் இருக்கக்கூடும். அதற்காகவெல்லாம் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க முடியுமா? கண்ணீர் சிந்தும் பழக்கமே எனக்குக் கிடையாது. கண்ணீர் சிந்திவிட்டாலே நாம் தோற்றுப் போய்விட்டோம் என்று தான் அர்த்தம். நான் இதைப் பெண்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நானும் அழுதிருக்கிறேன். எமோஷனலான சில நேரங்களில் எனக்கும் கண்கள் கலங்கி கண்ணீர் வந்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் எனக்குள் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், கண்களில் இருந்து தண்ணீர் கீழே விழுந்து விட்டாலே நானும் கீழே விழுந்து விட்டதாகத்தான் அர்த்தம். பெண்களுக்கு இருக்கக்கூடிய மிக மோசமான குணம் இந்த அழுகை. அழுத்தம் இருக்க வேண்டுமே தவிர அழுகை இருக்கக்கூடாது. அழுதுவிட்டால் நாம் வலிமை இழந்தவர்களாகி விடுவோம். அரசியலில் ஏமாற்றங்கள் வரத்தான் செய்யும், ஆனால், அதை அழுகையாக வெளிப்படுத்தக்கூடாது அழுத்தமாக வெளிப்படுத்த வேண்டும். அடுத்த வேலையாக வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.’

தமிழிசையின் மேற்கண்ட வார்த்தைகள் புதிதாக அரசியல் இறங்கத் துடிக்கும் பெண்களுக்கும் முன்னரே அரசியல்வாதிகளாக கோலோச்சும் பெண்களுக்கும் உந்துசக்தியாக அமையக்கூடும் என்பதால் இங்கே பகிர்கிறோம்.

தமிழிசை சார்ந்திருக்கும் கட்சி குறித்தும் அவரது அரசியல் செயல்பாடு குறித்தும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கலாம். ஆனால், ஒரு பெண் அரசியல் தலைமையாக அவர் இன்று சாதித்திருப்பது நிஜம்.

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரத்தில் ஒரு கட்சித் தலைமை எனும் நிலையில் தமிழிசையின் அரசியல் பக்குவத் தன்மை பற்றி பரவலாக விமர்சிக்கப்பட்டது. தமிழிசை அந்த விஷயத்தை அணுகியது முற்றிலும் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை. இதை இந்தத் தலைவர் இப்படிக் கையாண்டிருப்பார், அவராக இருந்தால் மென் சிரிப்புடன் நகர்ந்திருப்பார், இவரானால் சரியான பதிலடி கொடுத்து விட்டு மாணவியை திக்கு முக்காட வைத்திருப்பார் என்றெல்லாம் தமிழிசையை பிற ஆண் அரசியல் தலைவர்கள் மற்றும் பெண் அரசியல் தலைமைகளுடன் ஒப்பிட்டு இவர்  தலைமைப் பொறுப்புக்கே லாயக்கற்றவர் என்று கூட அச்சமயத்தில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. தொடர்ந்து சொந்த மகனே, விமான நிலையத்தில் வைத்து ‘எந்நேரமும் அரசியல், அரசியல், அரசியல் தானா? குடும்பத்தைப் பார்க்க மாட்டீர்களா?’ பாஜக ஒழிக! என்று தன் தாயைப் பார்த்து கோபமாகக் கண்டனக்குரல் எழுப்பினார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. இதெல்லாமும் தமிழிசையை வலுவிழக்கச் செய்யும் அஸ்திரங்களாக இருக்கவில்லை என்பது தான் அவரது வெற்றிக்கான ஒரே  அஸ்திவாரமாக இருந்திருக்கிறது.

இதோ இன்றும் கூட அவரிடம் ஒரு கேள்வியை அனைத்து ஊடகத்தினரும் மறக்காமல் முன் வைக்கிறார்கள்.

இதுவரை தீவிரமாகப் பாஜக  வளர்ச்சி குறித்துச் சிந்திக்கும் தலைமையாக இருந்து விட்டு இப்போது உடனே ஆளுநராக நடுநிலைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றால்? அதெப்படி சாத்தியப்படும்? என்ற கேள்விக்கு தமிழிசை அளித்த பதில் சுவாரஸ்யமானது.

‘கவர்னர்ஸ் கைட்’ என்றொரு புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன். ஒரு கவர்னருடைய கடமைகள் என்ன? அவருடைய ஆளுமை வரம்பு என்ன? என்பதைக் குறித்து தெளிவாகத் தெரிந்து கொண்டு நான் ஆக்டிவ்வான ஆளுநராகப் பணியாற்றவிருக்கிறேன் என்கிறார் தமிழிசை. எப்படி பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து பிரபல காங்கிரஸ் தலைவரின் மகளாக வளர்ந்த போதும், தன்னால் பாஜக தான் தனது உயிர்மூச்சு என்று ஒரே மனதாக ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கட்சியின் மேல் அபிமானம் வைக்க முடிந்ததோ, அதே போலத்தான் கவர்னர் பதவி என்றால் அதில் கட்சி சார்பு அடியோடு இருக்கக் கூடாது. நடுநிலைத்தன்மையோடு தான் இருக்க வேண்டும் என்றால் தமிழிசை அப்படித்தான் இருந்து சாதிப்பேன். என்கிறார் தமிழிசை.

அதாவது,  மொத்தத்தில் என் கோர்ட்டுக்கு எந்த பால் வந்தாலும், எந்தப் பக்கமிருந்து வந்தாலும் நான் அடித்து ஆடத் தயாராகவே இருக்கிறேன் என்கிறார்.

கவர்னர் பதவி என்பது தமிழிசைக்கான அரசியல் வாலண்டரி ரிடையர்மெண்டா? என்ற கேள்விக்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்.

இல்லை. அதற்கப்புறம் பாருங்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் வேகமான, மேலும் செயலூக்கம் பெற்ற தலைமையாக நான் திரும்பி வந்து கட்சிப்பணியாற்றுவேன். என்னைப் பொருத்தவரை எந்த நேரத்தில், நான் எந்த வேலையை ஒப்புக்கொள்கிறேனோ அந்த வேலையில் 100% அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன். என்பதை உறுதியாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்கிறார் தமிழிசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com