மின் சிகரெட் தடை! சாதா சிகரெட்டுக்கு மாற்று அல்ல; இது அதனினும் கொடிது! ஏன் தெரியுமா?

இன்றைய தேதிக்கு உலகச் சந்தையில் சுமார் 466 மின் சிகரெட் பிராண்டுகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 17% அதிகரிக்கக்கூடும் என குளோபல் மின் சிகரெட் மார்கெட்டை
மின் சிகரெட் தடை! சாதா சிகரெட்டுக்கு மாற்று அல்ல; இது அதனினும் கொடிது! ஏன் தெரியுமா?

இந்தியாவில் செப்டம்பர் 18, 2019 முதல் இ சிகரெட் என்று சொல்லப்படக்கூடிய எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் அல்லது மின் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் தடையானது நடைமுறைக்கு வரும் நிமிடம் மின் சிகரெட்டுகளின் நுகர்வு, உற்பத்தி, தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் மின் சிகரெட்டுகளுக்கான  விளம்பரம் ஆகியவை இந்தியாவில் சட்டவிரோதமாகிவிடும்.

மின் சிகரெட்டுகள், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் ஆரோக்யத்தை மேம்படுத்தவும், அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்கவுமாக உண்டான மாற்று முயற்சிகளில் ஒன்று விளம்பரப்படுத்தப்பட்டுத் தானே அனேக மக்களிடையே புழக்கத்துக்கு வந்தது. ஆனால், நாளடைவில் பார்க்கையில், எதற்காக மின் சிகரெட்டுகளை அங்கீகரித்தமோமோ அந்த நோக்கமே முற்றிலுமாகக் கெட்டு தற்போது இந்த மின் சிகரெட்டுகளை நுகர்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தற்போது இந்த மின் சிகரெட்டுகளின் புகைக்கும் அடிமையாகி தொடர்ந்து அதிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கிறார்கள். எனவே மின் சிகரெட்டுகளை முற்றிலுமாகத் தடை செய்து விடலாம் எனும் முடிவுக்கு அரசு வந்தது என்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மின் சிகரெட் தடையை அறிவிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மின் சிகரெட் தடையை அறிவிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அவரது கரிசனத்திலும் பொருளில்லாமலில்லை. மின் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து விடுபட முடியாமல் அமெரிக்காவில் இதுவரை 6 பேர் நுரையீரல் நோய் தாக்கி இறந்திருப்பதாக பொதுமக்களிடையே மின் சிகரெட் பாதகங்களுக்கான ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

அமெரிக்காவை விடுங்கள், நம் இந்தியாவில் மட்டுமே ரூ.1,16,91,781 மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இது  தொடர்பான புள்ளி விவரக்கணக்குகள் கூறுகின்றன.

மின் சிகரெட்டுகளை இந்தியாவில் தடை செய்வதற்கான காரணங்களில் மிக முக்கியமானதாக மத்திய அரசு கருதுவது இப்பழக்கம் இந்திய இளைஞர்களிடையே மிக வேகமாகப் பரவி அவர்களது மூளைச் செயல்பாட்டை முடக்குவதால் அவர்களை மீண்டும் அப்பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பது மிகக்கடினமான காரியமாகி விடுகிறது என்பதையே!

மற்ற சாதாரண சிகரெட்டுகளைப் போல அல்லாமல் மிக அதிகமான ஃப்ளேவர்களிலும் மிகக்கவர்ச்சியான வடிவங்களிலும் இந்தியச் சந்தைகளில் பல்வேறு விதமான மின் சிகரெட்டுகள் கிடைப்பதால் இளைஞர்கள் மட்டுமல்ல பள்ளி மாணவர்களான சிறுவர்களிலும் அனேகம் பேர் இந்தப் பழக்கத்தில் புதைந்து கிடக்கிறார்கள். அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டு ஆரோக்யமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டே அரசு இப்படியொரு முடிவெடுத்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

அரசு இப்படியொரு முடிவை எடுப்பதற்கு முன்பே இந்தியாவில் பஞ்சாப், கர்நாடகா, மிசோரம், கேரளா, ஜம்மு & காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், மேகாலயா, ஒடிசா மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் ஒன்றுலுமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின் சிகரெட்டுகளுக்கான தடை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கான காரணம், இப்படியொரு முன்னெடுப்பை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மின் சிகரெட்டுகளுக்களின் மோசமான விளைவுகள் குறித்து எச்சரித்த காரணத்தால் தான்.
 
மின் சிகரெட்டுகள் என்பதன் உண்மையான பொருள்.. எலக்ட்ரானிக் நிகோடின் டெலிவரி சிஸ்டம் என்பதே. இவ்வகை மின் சிகரெட் வடிவமைப்புகளில் புகையிலை பயன்படுத்தப்படுவது இல்லை. அதற்கு பதிலாக பேட்டரியிலிருந்து ஆவி கசிவது போன்று வடிவமைத்திருக்கிறார்கள். இதில் பேட்டரி சொல்யூஷனில் இருந்து ஆவி வெளியேற அவர்கள் கையாண்டிருக்கும் வழிமுறை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. பேட்டரி சொல்யூஷன் தயாரிக்க புரொபிலீன் கிளைகால் மற்றும் கிளிசராலுடன் வாசனையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே உடல் ஆரோக்யத்திற்கு குறிப்பாக நுரையீரல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய அளவிலான நச்சுத்தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

இத்தனை அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மின் சிகரெட்டுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் பிற சாதாரண சிகரெட்டுகளைப் போன்ற வடிவத்தில் தான் இருந்தன. ஆனால் தற்போது இவை இளைஞர்களையும், பள்ளிச் சிறுவர்களையும் மட்டுமல்லாது புகைப்பழக்கத்திற்கு அடிமையான இளம்பெண்களையும் கவர்ந்திழுக்கக்கூடிய பேனா, விசில், மினி லைட்டர், ஹூக்க பைப் போன்ற பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இதன் பரவலான விற்பனையைத் தடுக்கும் பொருட்டும் சாதாரண சிகரெட்டுகளைக்காட்டிலும் மிக அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் மின் சிகரெட் போதையை மட்டுப்படுத்தவே தற்போது அரசு அவற்றிற்குத் தடை விதித்திருக்கிறது.

அரசு தடைக்கு முன்பே இந்தியாவில் ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்களில் மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்தவோ, கொண்டு செல்லவோ தடை இருந்தது உண்மை.

மின் சிகரெட்டின் அபாயத்தன்மை எத்தகையது?

மின் சிகரெட்டின் பேட்டரி கரைசலில் நிகோடின் பயன்படுத்தப்பட்டவுடன், அதற்கும் வழக்கமான சிகரெட்டிற்கும் உள்ள வேறுபாடு குறைந்து விடுகிறது. உடல்நல அபாயங்களைப் பொறுத்தவரை, நிகோடினை வழங்குவதற்கான மின்-சிகரெட்டின் சக்தி அதன் பயன்பாடு எவ்வளவு ஆபத்தானது என்பதை தீர்மானிக்கிறது. நிகோடின் விநியோகம் விரைவாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தால், மின்-சிகரெட் வழக்கமான சிகரெட்டிலிருந்து வேறுபட்டதாக இருக்காது. ஆக மொத்தத்தில் மின் சிகரெட்டுகள் சாதாரண சிகரெட்டுகளைக் காட்டிலும் அபாயம் குறைவானவை அல்லது அபாயமற்றவை எனும் விளம்பரங்கள் இதன் மூலமாக வலுவிழக்கின்றன,

நிகோடின் விநியோக திறன் ஒரு பிராண்டிலிருந்து மற்றொரு பிராண்டிற்கு மாறுபடும். இந்த திறன் பயன்படுத்தப்படும் கரைசலின் வலிமை மற்றும் ஒரு பயனரின் பஃபிங் நடத்தை ஆகியவற்றைப் பொறுத்தது.

உலக சுகாதார அமைப்பான WHO இதைப் பற்றி என்ன சொல்கிறதென்றால்?

மின் சிகரெட்டுகளின் அபாயத்தன்மையானது கர்ப்ப காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தகூடியதாக இருப்பதோடு இருதய நோய்களை ஊக்குவிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.

இதிலிருக்கும் நிகோடின் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும், இது புற்றுக்கட்டி தோன்றச் செய்யும் ஊக்குவிப்பாளராக செயல்படக்கூடும் எனக்கருதப்படுகிறது. நிகோடின் வீரியம் மிக்க நோய்களின் உயிரியலின் அடிப்படை அம்சங்களிலும், நியூரோடிஜெனரேஷனிலும் கூட மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது அதன் அபாய எல்லையின் தீவிரத்தைச் சுட்டுகிறது.

இன்றைய தேதிக்கு உலகச் சந்தையில் சுமார் 466 மின் சிகரெட் பிராண்டுகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 17% அதிகரிக்கக்கூடும் என குளோபல் மின் சிகரெட் மார்கெட்டை தொடர்ந்து கண்காணித்து வரும் நிறுவனங்கள் கணித்துள்ளன.

இந்தியாவில் இப்போதாவது மின் சிகரெட்டுகளுக்கு மூடுவிழா நடத்த முன் வந்திருக்கிறதே அரசு என்று சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

இந்த நேரத்தில் மற்றொரு ஆதங்கமும் எழாமலில்லை. மின் சிகரெட்டுகளின் அபாயம் குறித்து இத்தனை கவலைப்படும் மத்திய அரசு நாடு முழுவதும் ஆற்று வெள்ளம் போலத் திறந்து விடப்பட்டிருக்கிறதே மதுபானக்கடைகள் அதற்கும் மூடுவிழா நடத்தவும், தடை விதிக்கவும் ஏதாவது முன்னெடுப்புகளைச் செய்யக்கூடாதா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com