'மதம், மனிதனை மிருகமாக்கும்; சாதி, மனிதனைச் சாக்கடையாக்கும்' - எப்போது ஒழியும் தீண்டாமை?

'மதம், மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும்', 'பகுத்தறிவு' என்பதே உயிர்நாடி' என தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் 141வது பிறந்தநாள் இன்று. 
'மதம், மனிதனை மிருகமாக்கும்; சாதி, மனிதனைச் சாக்கடையாக்கும்' - எப்போது ஒழியும் தீண்டாமை?

'தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்' என்று பள்ளிப் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு புத்தகத்தின் வாயிலாக எடுத்துரைத்தாலும், தீண்டாமையை இவ்வுலகத்தை விட்டு இன்னும் அழிக்கமுடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு நாளும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அல்ல, பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ராஜாராம் மோகன் ராய், மகாத்மா காந்தி, பெரியார் முதல் தற்போதைய திராவிட இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் வரை தீண்டாமையை ஒழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். இருந்தபோதிலும், வைரஸ் போன்று ஒரு இடத்தில் அழித்தாலும், பல இடங்களில் ஏதோ ஒருவிதத்தில் தீண்டாமை முளைத்துவிடுவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் தீண்டாமையை 'நவீன தீண்டாமை' என்றும் சொல்லலாம். 

நவீன தீண்டாமை

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என பொது இடங்களில் ஒரு சிலர், 'அவன் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருப்பான், இவன் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன்' என்று யோசித்துதான் பேசுகின்றனர். பக்கத்தில் ஒருவர் அமரும்போது, உயர் சாதியினருக்கு இதுபோன்ற எண்ணம் தோன்றுகிறது. 

பல கிராமங்களில் ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினர் வீட்டிற்குச் செல்வதில்லை. அவர்களுடன் எதுவும் புழங்குவதில்லை. 'தீண்டாமை ஒரு பாவச் செயல்' என்று புத்தகத்தின் முதல் பக்கத்தின் வாயிலாக போதித்தாலும், தற்போது பள்ளிகளில்கூட குழந்தைகளின் கைகளில் கயிறு கட்டி அவர்களை சாதி அடிப்படையில் பிரித்து பார்க்கும் சூழ்நிலைதான் இங்கு நிலவுகிறது. 

ஆணவக் கொலைகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு பெண்ணோ, ஆணோ தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை காதலித்துவிட்டால் இருவருமே இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள்.  தாழ்த்தப்பட்டவரின் உடலை உயர்சாதியினர் இருக்கும் தெருக்களின் வழியாகக் கொண்டுசெல்லக் கூடாது என ஒருவர் இறந்தபின்னும்கூட சாதியம் பார்க்கப்படுவத்தை என்னவென்று சொல்வது?

மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் இந்த ஒரு நாகரீகமற்ற செயல் தொடரும்வரை நாம் வெட்கி தலைகுனியத்தான் வேண்டும்.

ஆறறிவு மனிதன் முதல் ஐந்தறிவு விலங்கினம் வரை

இதற்கு எடுத்துக்காட்டாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எம்.பி ஒருவரை மக்கள் தங்களது கிராமத்தை விட்டு துரத்திய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. 

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி நாராயணசாமி. இவர் நேற்று தனது தொகுதியில் தும்கூர் மாவட்டத்தில் உள்ள  பவகடா (Pavagada) தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் பார்மா நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சென்றிருந்தனர். அப்போது கொல்லா (Golla) என்ற சமூகத்தினர் வாழும் பகுதிக்குச் சென்றபோது, நாராயணசாமி எம்.பி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை உள்ளே ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை.

அதிகாரிகள் எவ்வளவோ கூறியும், 'அவர் தீண்டத்தகாதவர்' என்று கூறி மக்கள் அனுமதிக்கவில்லை. இறுதியில் வேறு வழியின்றி நாராயணசாமி திரும்பிச் சென்றார். இதுகுறித்து அவர் காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார். 

இந்தக் கிராமத்தில் இதுவரை தலித் சமூகத்தைச் சேர்ந்த யாரும் உள்ளே அனுமதிக்கபட்டதில்லை. அவர் எவ்வளவு உயரிய பதவியில் இருந்தாலும் அனுமதி கிடையாது என்று அந்த மக்கள் கூறுகின்றனர். இவ்வளவுக்கும் இந்த 'கொல்லா' சமூகத்தினர் உயர்ஜாதியினர் அல்ல; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கென ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பிக்கே இந்த நிலைமை என்றால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சாமானியனின் நிலைமை?

அதேபோன்று சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில், தலித் பெண் ஒருவர், உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவர் வளர்த்த நாய்க்கு ரொட்டித் துண்டை போட்டுள்ளார். இதன் காரணமாக, அந்த நாயையே அடித்து விரட்டிவிட்டாராம் அந்த உயர்வகுப்பைச் சேர்ந்தவர். ஆறறிவு மனித இனம்தான் தீண்டாமையாமல் பாதிக்கப்படுகிறது என்றால் ஐந்தறிவு ஜீவனுக்கும் அதே நிலைதான்... இதற்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? 

தீண்டாமை எப்போது ஒழியும்?

'மதம், மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும்', 'பகுத்தறிவு' என்பதே உயிர்நாடி' என தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் 141வது பிறந்தநாள் இன்று. பெரியார் இறந்து 45 ஆண்டுகள் ஆகியும் அவரது கொள்கைகளை கடைப்பிடித்து பல திராவிட இயக்கங்கள் இன்றும் அவரது கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகின்றன. அதன் காரணமாக, என்னவோ படித்தவர்கள் பெரும்பாலாக இன்று சாதியம் பார்ப்பதில்லை.

சட்டங்கள் வாயிலாக அரசும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இதற்கு ஒரே வழி.. மாற்றம் என்பது நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்.. நாம் மாறும்போது குடும்பத்தில் மாற்றம் ஏற்படும்.. சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.. நாட்டிலும் மாற்றம் ஏற்படும்.. தீண்டாமை இருக்கும்வரை பெரியாரும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்...

பகுத்தறிவு பகலவனின் பிறந்த தினத்தில் இந்த உறுதிமொழியை நாம் ஏற்போமாக.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com