சவுதி எண்ணெய் ஆலையில் தாக்குதல்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமோ?

சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சவுதி எண்ணெய் ஆலையில் தாக்குதல்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமோ?

சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சவுதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எமெர்ஜென்சி நிறுவனத்தின், புக்கியாக் நகரில் உள்ள அப்கைக் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, குர்அய்ஸில் உள்ள அதே நிறுவனத்தின் எண்ணெய் வயலிலும் தாக்குதல் நடந்தது. இதனால் இரு இடங்களிலும் தீப்பற்றி எரிந்தது.

ஏமன் அரசிற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் போன்ற நாடுகள் ஏமன் அரசிற்கு ஆதரவாக உள்ளதால் சவுதி மீது ஏறக்குறைய 100 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நடந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு ஈரான் பின்புலமாக இருந்து செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

எண்ணெய் வளமிக்க ஈரான் நாட்டுடன் ஏற்பட்ட மோதல்போக்கால் அமெரிக்கா அந்த நாட்டிற்கு பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்துவந்த இந்தியா, அமெரிக்காவின் வற்புறுத்தலால், தனது எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்ய சவுதியை நாடியது.

98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியாகும் சவுதியில் தற்போது நடத்தப்பட்ட தாக்குதலால் 57 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த 50 விழுக்காடு எண்ணெய் அழிந்ததாக கூறப்படுகிறது. இதனால் உலகளவில் நாள் ஒன்றுக்கு 5 விழுக்காடு கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படும்.

நிலைமையை சரி செய்ய போராடிவருவதாக கூறியுள்ள சவுதி அரசு, 48 மணி நேரம் கழித்தே எதுவும் கூற முடியும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில்...

53 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு வைத்துள்ள இந்தியாவால், 22 நாட்கள் வரை இறக்குமதியில்லாமல் நிலைமையை சமாளிக்க முடியும். இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வது மட்டுமின்றி, இறக்குமதியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நிலவிவரும் சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சவுதி சாடல்:

இது சவுதியை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும் உலக எண்ணெய் சந்தை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் தாக்குதல் என்றும் சவுதி அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனால் உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சவுதி அரசு சாடியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com