சிந்தையைக் கவரும் பேரழகு! இது சிற்பங்களின் பெருநகரம்!

மகாபலிபுரம் (எ) மாமல்லபுரம் சென்னையிருந்து சுமார் 60 கிமீ. தொலைவில் உள்ளது.
சிந்தையைக் கவரும் பேரழகு! இது சிற்பங்களின் பெருநகரம்!

மகாபலிபுரம் (எ) மாமல்லபுரம் சென்னையிருந்து சுமார் 60 கிமீ. தொலைவில் உள்ளது. முக்கியமான நினைவுச் சின்னங்கள் மற்றும் குகைக் கோயில்கள் அமைந்துள்ள  நகரமான இங்கு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். கோவாவைப் போன்று வெளிநாட்டவர்களின் வருகையை நம்பி தங்கும் விடுதிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் உள்ளனர். மேலும், சின்னச் சின்னக் கடைகளை நடத்துபவர்களும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் நம்பி உள்ளனர்.

சிற்ப நகரமான மாமல்லபுரத்தில் சிற்பங்கள் வடிவமைக்கும் கடைகளை அதிக எண்ணிக்கையில் காணலாம். இங்கிருந்து, உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் கற்சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் பல்லவர்களின் ஆட்சிக்கு உள்பட்டிருந்த மாமல்லபுரத்தில் துறைமுகமும் இருந்தது. கடல் வழியாக வாணிபமும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றின் வழியாகவும், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் இருந்தும் மாமல்லபுரத்துக்குச் செல்லலாம். அரசுப் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.

அண்மையில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அங்கு நான் கண்டு ரசித்ததையும், தனித் தீவு போல் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் காண வேண்டிய முக்கிய இடங்களையும் பார்க்கலாம்.

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து

பெரிய உருண்டை வடிவில் சரிந்து ஓடிவருவது போன்று அமைந்துள்ளது பெரிய கருங்கல் பந்து. கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து எனவும் அழைக்கப்படுகிறது. 6 மீட்டர் உயரமும், 5 மீட்டர் அகலமும் உடைய இந்தக் கல், 250 டன் எடை கொண்டது. 1908-ஆம் ஆண்டில் சென்னை ஆளுநராக இருந்த ஆர்தர் ஹேவ்லாக், இந்தக் கல்லை 7 யானைகள் கொண்டு இழுக்க முயற்சி எடுத்ததாகவும், அதில் தோல்வியே மிஞ்சியது என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு அருகே அர்ஜுனன் தபசு உள்ளது. மிகப் பெரிய 2 யானைகள் உள்பட பல சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இதுவே இங்கு சிறப்பு. பல சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கியுள்ளனர். நேர்த்தியாக செதுக்கியது எப்படி என்பது ஆச்சரியமே! சாலையோரம் அமைந்திருக்கும் இந்தச் சிற்பத்தை கண் சிமிட்டாமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

சூரிய குலத்தைச் சேர்ந்த பகீரதன், கடும் தவம் புரிந்து கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றைத் தெரிவிக்கும் வகையில் சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விண்ணுலகம், மண்ணுலகத்துக்கும் விண்ணலுகத்துக்கும் இடைப்பட்ட இடம், மண்ணுலகம், பாதாள உலகம் ஆகியவற்றை குறிப்பதாகவும், சிவனின் ஆயுதமான பசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காக அர்ஜுனன் தவம் புரிவதை இந்த சிற்பங்கள் சித்திரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த இடம் அர்ஜுனன் தபசு என்றும் அழைக்கப்படுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அர்ஜுனன் தபசு, தலசயன பெருமாள் கோயிலுக்கு பின்பறத்தில் அமைந்துள்ளது. அந்த வழியே சென்றால் அருங்காட்சியம் வருகிறது.

அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு நுழைவுச்சீட்டு பெற வேண்டும். நுழைவாயில் பகுதியிலேயே நுழைவுச்சீட்டை வாங்க வசதி செய்திருக்கலாம். உள்ளே சென்று தேட வேண்டியிருக்கிறது. முந்தைய காலத்தில் கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எதையும் தொட்டுப் பார்க்க அனுமதியில்லை. பொருள்கள் சேதம் அடைந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைத்திருக்கிறார்கள். மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடல்சார் கல்வியைக் கற்பவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கலங்கரை விளக்கம்

ஐந்து ரதம் செல்லும் வழியில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. மலை மீது அழகாக அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தை காண சுற்றுலாப் பயணிகள் பலர் ஆர்வத்துடன் தினமும் வருகின்றனர். கலங்கரை விளக்கத்துக்கு அருகில் மகிஷாசுரமர்த்தினி மண்டபமும் அமைந்துள்ளது. அங்கு, மகிஷாசுரமர்த்தினி மகிஷாசூரனுடன் போரிடும் காட்சியும், அதற்கு எதிர்புறம் ரங்கநாதரின் சயனக் கோலக் காட்சியும் மிக தத்ரூபமான சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

ஐந்து ரதம்

மாமல்லபுரம் ஊரின் மற்றொரு எல்லையின் முடிவில் இருக்கும் ஓர் இடம்தான் ஐந்து ரதம். இந்தப் பகுதி பேருந்து நிலையத்தில் இருந்து தொலைவில் இருப்பதால், ஆட்டோக்களில் செல்லலாம். ஐந்து ரதத்தைப் பார்ப்பதற்கும் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவுச் சீட்டை பெற்றுக் கொண்டு அங்கு சென்று காணலாம். உள்ளே நுழைந்தவுடன் சிங்கம், யானை ஆகியவற்றின் மிகப் பெரிய சிலைகள் நம்மை வரவேற்கின்றன. மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களான தர்மன், அர்ஜூனன், பீமன், சகாதேவன், நகுலன் ஆகியோரின் பெயர்களில் ஐந்து ரதங்களும் அழைக்கப்படுகின்றன.

சிறந்த குடைவரைக் கோயில்களில் ஐந்து ரதமும் ஒன்றாகத் திகழ்கிறது. யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரியச் சின்னமாக இதனை அங்கீகரித்துள்ளது.

தவறவிடக் கூடாத கடற்கரை கோயில்

மாமல்லபுரத்தில் தவரவிடக் கூடாத முக்கியமான இடங்களில் ஒன்று கடற்கரைக் கோயிலாகும். கடற்கரைக் கோயில் பல இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து இன்றளவும் தலைநிமிர்ந்து நிற்பதே நமது முன்னோர்களின் திறமைக்கு சான்றாகும். கடற்கரைக் கோயில் செல்வதற்கும் தனியே நுழைவுக் கட்டணம் எடுக்க வேண்டும். பச்சை புல்வெளிகளுக்கு மத்தியில் நீலக் கடலை பின்னணியாகக் கொண்டு அழகாக வீற்றிருக்கிறது இந்தக் குடைவரைக் கோயில். தமிழகத்தின் மிகவும் தொன்மை வாய்ந்த சிவாலயமான இந்தக் கோயில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்தக் கோயிலை ரசித்துவிட்டு அப்படியே கடைகளின் நடுவே செல்லும் சிறு வழியில் கடற்கரைக்குச் சென்று நீலக் கடலை கண்டு ரசிக்கலாம்.

பேருந்து நிலையம் அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தலசயன பெருமாள் கோயிலும் உள்ளது. 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்ததும் மாமல்லபுரத்தில்தான் என்பது இந்த ஊருக்கு ஆன்மிக ரீதியிலும் கூடுதல் சிறப்பு. இந்தக் கோயிலுக்கு எதிராக புஷ்கரணி குளமும் உள்ளது.

வாய்ப்பு கிடைத்தால் சிற்ப நகரமான மல்லைக்குச் சென்று வாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com