சிறப்புக் கட்டுரைகள்

மக்கள் தொகை பெருக்கம்.. முதலிடத்தை நோக்கி இந்தியா! ஒரு பேரலசல்!!

4th Sep 2019 06:12 PM | C.P.சரவணன், வழக்குரைஞர்

ADVERTISEMENT


ஐ.நா. உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை  ஜூன், 2019 இல் "உலக மக்கள் தொகை கண்ணோட்டம்" என்ற தலைப்பில் இந்த அறிக்கையை ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் மக்கள்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 200 கோடி அதிகரிக்கும், அதாவது தற்போது 770 கோடி மக்கள் தொகை இருக்கும் நிலையில், 2050ம் ஆண்டில் 970 கோடியாக அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் மக்கள் தொகைப் பெருக்கம் உச்ச கட்டத்தை அடைந்து, 1100 கோடியாக அதிகரிக்கும்.

2050ம் ஆண்டுவரை உலகின் மக்கள் தொகை உயர்வதற்கு 9 நாடுகள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியா முதலாவதாகவும், அதைத் தொடர்ந்து நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேசியா, எகிப்து, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியாவில் இப்போதுள்ள மக்கள் தொகைப் பெருக்க நிலவரப்படி கணித்தால், 2027-ம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தை முறியடித்துவிடும். அதாவது 2019-ம் ஆண்டு முதல் 2050ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை 27.3 கோடி அதிகரிக்கும். இந்தியா மற்றும் சீனாவின் மக்கள் தொகை மட்டும் 2050ம் ஆண்டில் கணக்கில் எடுக்கும்போது உலக மக்கள் தொகையில் 23 சதவீதத்தைக் கொண்டிருக்கும். 

ADVERTISEMENT

கணக்கெடுப்புக் கதை
ராபர்ட் மால்தஸ் கவலைப்படுவதற்கு முன்பே மக்கள் தொகை கணக்கீடு செய்யும் பழக்கம்  பொது ஆண்டுக்கு முன்பே இருந்துள்ளன. பாபிலோனியர்கள் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தொகை கணக்கெடுத்துள்ளனர். நாடு முழுவதும் கணக்கெடுப்பு செய்ய ஆறேழு ஆண்டுகள் ஆனதாம். ஆள் கணக்குடன் கூடவே மக்கள் வைத்திருந்த வெண்ணெய், தேன், பால், கம்பளி, காய்கறிகள் அளவுகளையும் கணக்கீடு செய்துள்ளனர். ஆவணப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு என்றால் 2518 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஷியா பேரரசில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்புதான். நிலம் ஒதுக்கீடு செய்யவும், வரி விதிக்கவும் இந்த கணக்கெடுப்பு நடந்ததாம்.

இந்தியாவை பொருத்தவரை தமிழ்ப் பேரரசுகள் ஆண்ட காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அனைத்து நவீனங்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால் அவை இந்திய வரலாறாக பதியப்படவில்லை. எனவே இந்திய வரலாறை கணக்கில் கொண்டால் மவுரிய பேரரசு காலத்தில் சுமார் 2370 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டதாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது. வரி விதிக்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாம். கூடவே மக்களின் பொருளாதார நிலை, வேளாண் தொழில்  ஆகியன குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாம்.

உலகின் பெரும் பேரரசுகளாக இருந்த ரோமப் பேரரசு, சோழப் பேரரசுகள் மட்டுமல்ல பழங்குடி பேரரசுகள் இருந்த காலத்திலும் வருவாயை இலக்காக கொண்டுதான் கணக்கெடுப்புகள் நடந்தன. இப்படி இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் மக்களிடம் எப்படியெல்லாம் வரி வசூலிக்கலாம், யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக அந்தக் கால அரசுகள் தலைகளை எண்ணின.

இந்தியாவில், மொகலாயர் காலத்தில்தான் மக்கள் தொகை பற்றிய விவரங்கள் முதன்முதலாக தொகுத்து வெளியிடப்பட்டன. அக்பருடைய அரசவையில் இடம் பெற்றிருந்த அபுல்பாசல் என்ற அறிஞர் எழுதிய, ‘அயனி அக்பரி’ என்ற நூலில், அன்றைய காலக்கட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்ததைக் காண முடிகிறது. அதனைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் காலத்தில், (1687)அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த எலிகு ஏல் என்பவர் இங்கிலாந்து மன்னரின் ஆணைப்படி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வசித்தவர்கள் தொடர்பான முழு விவரங்களைச் சேகரித்து தந்தார். பின்னர், 1853-ம் ஆண்டு வடமேற்கு பகுதியில் சிறிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிறிஸ்டோப் குலிமிட்டா என்பவர் தலைமையில், 1871-ல் மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அப்போதுதான் மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன.

இந்தியாவில், மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணி முதன்முதலாக 1872-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களின் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு பணியின்போது, கல்வி மற்றும் எழுத்தறிவு, பாலினம், பொருளாதார நிலை, பிறப்பு, இறப்பு விகிதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர், பெற்றோர் விழுக்காடு, வீடு முதலான உறைவிடங்கள், மொழி, மதம் போன்ற தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், பங்கேற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி மையத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுவதற்காக, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் உட்பட 18 மொழிகளில் பயிற்சி குறிப்பேடுகள் தயாரிக்கப்பட்டன. அதனடிப்படையில், 16 மொழிகளில் மக்கள் தொகை குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. இந்த ஆண்டில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின்போது, இந்தியா-வங்காளதேசம் ஒன்றாக இணைந்து, எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டன.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான வீடுகளைப் பட்டியல் இடுதலில், கட்டிட எண் மற்றும் மக்கட்தொகை கணக்கெடுப்பு வீட்டு எண், அறைகளின் எண்ணிக்கை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகனம் பற்றிய விவரங்கள் உட்பட 35 கேள்விகள் கேட்கப்பட்டன. கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுபடி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 19 லட்சத்து 3 ஆயிரத்து நானூற்று இருபத்தி இரண்டு பேர் எனக் கணக்கிடப்பட்டது. இதில், ஆண்களின் எண்ணிக்கை 623, 724, 248 எனவும், பெண்களின் எண்ணிக்கை 586, 469, 174 எனவும் கணக்கிடப்பட்டது.  இந்த 7 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 135 கோடியை தாண்டிவிட்டது.

இந்தியாவின் மக்கள் தொகை

ஆண்டு      -      கோடியில்
1901  -      23.84
1911  -      25.21
1921  -      25.13
1931  -      27.90
1941  -      31.87
1951  -      36.11
1961  -      43.92
1971  -      54.82
1981  -      68.33
1991  -      84.64
2001  -      102.87
2011  -      121.10


1901-1951 இடையிலான 50 ஆண்டுகளில் மக்கள் தொகை 12.27 கோடி மட்டுமே உயர்ந்துள்ளது ஆனால் 1951-2011 இடையிலான 60 ஆண்டுகளில் 85 கோடி அதிகமாகி உள்ளது.

2011இல் மக்கள் தொகை
2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதன் முதல் கட்ட மாக 2010 ஏப்பிரல் முதல் செப்டம்பர் வரை வீடுகள் குறித்த விவரங்கள் எடுக்கப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முழு விவரம் வெளியிடப்படுவதற்கு வழக்கமாக 4-5 ஆண்டுகளாகும். ஆனால் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, இம்முறை இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியிடப்படுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முன்னோட்ட அறிக்கையை 2011 மார்ச் 31 அன்று தில்லியில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் சி. சந்திரமௌலி வெளியிட்டார்.

இந்தியாவில் 6,41,000 சிற்றூர்களில், 7936 நகரங்களில் உள்ள 24 கோடி வீடுகளில் 27 இலட்சம் அரசு ஊழியர்கள் மக்கள் தொகைக் கணக்கு எடுத்தனர். இதற்காக 18 மொழிகளில் 54 இலட்சம் விளக்க அறிக்கைகளும், 16 மொழிகளில் 34 கோடிப் படிவங்களும் அச்சிடப்பட்டன. இதற்காக ரூ.2,200 கோடி செலவிடப்பட்டது. இதன்படி ஒருவருக்கு ரூ.18.33 செலவிடப்பட்டது. இந்தத் தடவை திருநங்கையர் எண்ணிக்கை தனியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. 2011 மார்ச் 1ஆம் நாளில், இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியே 10 இலட்சத்து 20,000 ஆகும் (121.1 கோடி). தமிழ்நாட்டில் 7 கோடியே 21 இலட்சத்து 38 ஆயிரத்து 958 ஆகும் (7.21 கோடி).

2011இல் இந்தியாவின் 121 கோடி மக்களில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாக உள்ளனர். 2001-2011 ஆகிய 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 17.64 விழுக்காடு அதாவது 18.15 கோடி மக்கள் அதிகமாகி உள்ளனர். பிரேசில், உலகில் 5ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. முதல் நான்கு இடங்களில் இருக்கும் நாடுகள் சீனா, இந்தியா, வட அமெரிக்கா, இந்தோனேசியா - கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக உயர்ந்த 18.15 கோடி மக்கள் என்பது பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகையைவிடச் சற்று குறைவாகும். சீனாவில் 2010இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 134 கோடிப் பேர் உள்ளனர். 2000-2010 ஆகிய 10 ஆண்டுகளில் சீனாவில் 7 கோடி மக்கள் மட்டுமே கூடுதலாயினர். ஆனால் இந்தியாவில் 2001-2011 பத்தாண்டுக் காலத்தில் 18.15 கோடி மக்கள் அதிகமாகியுள்ளனர். 2030க்குள் இந்தியா சீனாவின் மக்கள் தொகையை விஞ்சி, உலகில் முதல் இடத்தைப் பிடிக்கும். 2011இல் இந்தியாவின் 121 கோடி மக்கள் தொகை என்பது, வடஅமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாக்கிஸ்தான், வங்கதேசம், சப்பான் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாகும்.

பாலின விகிதம்
ஒரு நாட்டில் ஆண்கள் 1000 பேர் இருந்தால், எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பதே பாலின விகிதம் எனப் படுகிறது. காலங்காலமாக ஆண்களுக்கு அடிமைகளாக்கப் பட்டிருந்த பெண்கள், இப்போது ஆண்களுக்கு நிகராக எந்த அளவுக்கு சமூகத்தில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான ஒரு அளவுகோலாகப் பாலின விகிதம் விளங்குகிறது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இரஷ்யா, பிரேசில் இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, ஜப்பான், நைஜிரியா முதலான நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ளனர். நம் அண்டை நாடுகளான இலங்கை, மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளில் கூட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், இந்தியா, சீனா, வங்கதேசம் ஆகியவற்றில் பெண்கள் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் கேரளத்தில் மட்டும் பெண்கள் விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 என முதல் நிலையில் உள்ளது. இது தமிழ்நாட்டில் 995, ஆந்திரம் 992, கருநாடகம் 960 என உள்ளது. வட இந்திய மாநிலங் களில் பெண்கள் விகிதம் குறைவாக உள்ளது. உ.பி. 908, பீகார் 916, குஜராத் 918, இராஜஸ்தான் 925 என உள்ளது.

இந்திய அளவில் பாலின விகிதம்
ஆண்டு              பொதுவாக           0-6 அகவையினர்
1961  -                        941   -                             960
1971  -                        930   -                             964
1981  -                       934   -                             962
1991  -                       927   -                             945
2001  -                      933   -                               927
2011  -                      940   -                                914

1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1991இல் 927ஆக மிகவும் குறைந்தது. 2011இல் 940 ஆக - மீண்டும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் பொதுவாகப் பெண்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்பதை இதுகாட்டுகிறது. ஆனால் 5 அகவைக்குட்பட்ட சிறுவர் பாலின விகிதம் வெட்கித் தலைகுனியும் படியான அளவில் குறைந்துள்ளது.

1981இல் 5 அகவைக்குட்பட்ட 1000 ஆண் குழந்தைகளுக்கு 962 பெண் குழந்தைகள் இருந்தனர். ஆனால் இது 2001இல் 927 எனவும் 2011இல் 914 எனவும் மிகவும் குறைந்துவிட்டது. 2020க்குள் இந்தியாவை ஒரு வல்லரசாக்கிட வேண்டும் என்று இந்திய ஆளும்வர்க்கம் பேசுகிறது. ஆனால் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. பெண் குழந்தை வேண்டாம் என்கிற பிற்போக்குச் சிந்தனை மேலோங்கி வருகிறது. அதனால் கருநிலையிலேயே பெண் கொல்லப்படுவது அதிகமாகி வருகிறது.

கருவில் இருப்பது பெண்தான் என மருத்துவத் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து, அக்கருவைக் கலைப்பதைத் தடுப்பதற்கான சட்டம் 1996இல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் செயல்பாடு குறித்து ஆராய, நடுவண் மேற்பார்வைக் குழு என்பது உருவாக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆராய வேண்டும். ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட வேண்டும். ஆனால் இக்குழு 2007 டிசம்பருக்குப்பின் கூடவே இல்லை. ஆண்டு அறிக்கையும் வெளியிடுவதில்லை. சிறுவர் பாலின விகிதம் 914 என மிகவும் குறைந்திருப்பதற்கு அரசின் பொறுப்பற்றத் தன்மையும் பெருங்காரணமாகும். பெண் சிசு கலைப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் 805 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 55 வழக்குகளில் மட்டுமே பெயரளவில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே சிறுவர் பாலின விகிதம் அரியாணா மாநிலத்தில் 877 என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. அம்மாநிலத்தில் ஜஜ்ஜார் மாவட்டத்தில் சிறுவர் பாலின விகிதம் 774 ஆக மட்டுமே உள்ளது. ஜஜ்ஜார் மாவட்டத்தில் 80.8% பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். ஆண்களில் 89.4% பேரும் பெண்களில் 71% பேரும் எழுத்தறிவு பெற்றிருக்கின்றனர். சமூகப் பொறுப்புணர்வற்ற பழைமையைக் கட்டிக்காக்கும் இன்றைய கல்வியை மக்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே பெண் சிசு கொலையைத் தடுக்கவோ, பெண்களுக்கு சம உரிமையை வழங்கிடவோ முடியாது. 

குடும்பக் கட்டுப்பாடு
1907 தொடங்கி, பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் பல மாநிலங்களில், கொடிய குற்றவாளிகள், காமவெறியர், பால்வினை நோயினர், மனநிலை குன்றியவர்கள், முட்டாள்கள் முதலானோருக்குக் கட்டாயக் கருத்தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தூய ஆரிய இனக்கோட்பாட்டு வெறியரான ஹிட்லர் 1933இல், யூதர்கள், கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையர்,  நாடோடிகள் ஆகியோருக்குக் கருத்தடை செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினார்.

தரமான இனத்தைப் பேணுதல் எனும் கொள்கையை ஜார்ஜ் பெர்னாட்ஷா, எச்.ஜி. வெல்ஸ், டார்வினின் மகன் மேஜர் டார்வின், ஜூலியன் ஹக்ஸ்லி போன்ற புகழ்பெற்ற அறிஞர்கள் ஆதரித்தனர். ஆனால் அறிவியல் அறிஞரான ஜெ.பி. எஸ். ஹால்டேன் இக்கொள்கையை எதிர்த்தார். 1940இல் ஹெர்மன் முல்லர் என்பவர் மரபியலில் ‘திடீர்ப் பாய்ச்சல்’ நிகழ்வதைக் கண்டுபிடித்தார். பெற்றோரின் மரபுக் கூறுகளைக் கொண்ட ஜீன்கள் அப்படியே அவர்களின் குழந்தைகளுக்குச் செல்வதில்லை. பெற்றோரின் மரபணுக்கள் இணையும்போது பல்வேறுபட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன என்றார் முல்லர். அதன் பிறகே தரமான இனத்தைப் பேணுதல் எனும் கோட்பாட்டுக்குக் கூறப்பட்டு வந்த அறிவியல் அடித்தளம் தகர்க்கப்பட்டது. ஆயினும் தரமான - தகுதி, திறமை வாய்ந்த மனித குலத்தைப் பேணிட, தகுதியும் திறமையும் குறைந்த மனிதர்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோட்பாட்டிலிருந்தே இன்றுள்ள குடும்பக் கட்டுப்பாடு முறை உருவானது.

1938இல் இந்திய தேசிய காங்கிரஸ், நேரு தலைமையில் தேசிய திட்டக் குழுவை அமைத்தது. அக்குழு உருவாக்கிய அறிக்கையில், மக்கள் தொகை பெருக்கம், மகப்பேறு காலத்தில் பெண்கள் இறப்பு, குழந்தைகள் இறப்பு குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டது. இதே காலக்கட்டத்தில்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘காதலுக்கு வழி வைத்து, கருப்பாதை சாத்த வழி ஒன்று கண்டறிவோம்’என்று பாடினார். 

காந்தியார் கருத்தடைக்கு எதிரானவர். கருத்தடை வசதி, காமச் செயலை அதிகமாக்கும். கணவனும் மனைவியும் மக்கட்பேற்றிற்காக மட்டுமே உறவு கொள்ள வேண்டும். இந்த நோக்கத்திற்காக அல்லாமல் கூடுவது கடவுளுக்கும் மனித குலத்துக்கும் எதிரானதாகும் என்று கூறினார். 

ஆனால், இந்திய அரசு 1952இல் குடும்ப நலத் திட்டத்தைத் தொடங்கியது. உலகிலேயே அரசு அறிவித்த முதல் குடும்பநலத் திட்டம் இதுதான். 1952 இல் 65 இலட்சம் பேருக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்வது என இலக்கு குறிக்கப்பட்டது. 1956இல் இங்கிலாந்தில் குடும்ப நலத்திட்டம் தொடங்கப்பட்டது. 1959இல் இந்தியாவில் மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு குழுக்கள் அமைக்கப்பட்டன.

அமெரிக்காவின் ஃபோர்டு அறக்கட்டளை 1952இல் இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்காக 90 இலட்சம் டாலர் நிதி உதவி அளித்தது. அதன்பின் ராக்பெல்லர் நிறுவனமும் நிதி உதவி செய்தது. அவ்வாறு நிதி உதவி செய்வதன் மூலம் தங்கள் நிறுவனங்கள் மீது இந்திய மக்களை நல்லெண்ணம் கொள்ளச் செய்வது, தங்கள் தொழில்களை இந்தியாவில் வளர்த்தெடுப்பது ஆகியவை அமெரிக்காவின் நோக்கங்களாகும். 1960களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு நிதி உதவி செய்யும் பொறுப்பை, பன்னாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்காவின் முகமை ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்காக மொத்தம் செலவிடப்பட்ட தொகையில் அமெரிக்கா வழங்கியது 10 விழுக்காடு கூட இல்லை. ஆனால் அமெரிக்க வல்லுநர்கள் இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வகுப்பதிலும், செயல்படுத்துவதிலும் முதன்மையான பங்கு வகித்தனர்.

உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி, 1965இல் முகர்ஜி குழு, பெண்களுக்குக் கருத்தடை செய்வதற்கான இலக்கை நிர்ணயித்தது. சுகாதார அலுவலர்களுக்கும், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கும் ஊக்கத் தொகை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களும், அமெரிக்க அரசும், உலக வங்கியும் இந்தியாவிலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களுக்கு வழிகாட்டுவதும், நிதி உதவி செய்வதும் அந்நாடுகளின் நலனில் கொண்டுள்ள அக்கறையா? என ஆராய வேண்டும்.

1967இல் பெண்களுக்கான கருத்தடை மாத்திரையும், 1968இல் ஆணுறையும் (நிரோத்) அறிமுகப்படுத்தப்பட்டன. இவை அமெரிக்க நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டன. குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையைக் குறைக்கவும், முரட்டுத்தனமான வழிமுறைகளால் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களின் உடல் நலன் சீரழிவதைத் தடுக்கவும் 1971ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மேலை நாடுகளில் பெண்ணிய இயக்கங்கள் கிறித்துவ மதத் தலைமையின் எதிர்ப்பு காரணமாக, 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக் கருக்கலைப்புச் சட்ட உரிமையைப் பெற்றன. இந்தியாவிலோ இது ஒரே நாளில் நிகழ்ந்துவிட்டது. அமெரிக்காவில் 1973இல் தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம், கருக்கலைப்பு குறித்த சட்டச் சிக்கல்களுக்கு முடிவு கட்டப்பட்டது.

“மக்களுக்குக் கல்வி அளிப்பது, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பிறப்பு விகிதத்தைக் குறைக்கலாம் என்று காத்திராமல், காலத்தின் அருமையையும், நாட்டின் முன்னேற்றத்தையும் கருதி, நேரடியான குடும்பக் கட்டுப்பாடு முறைகளை மக்கள் பின்பற்றுமாறு செய்யவேண்டும்” என்பதை 1975இல் நெருக்கடி நிலை காலத்தில் மத்திய அரசு, தேசிய மக்கள் தொகைக் கொள்கையாக அறிவித்தது. இந்திராகாந்தி தலைமையிலான அரசு இதற்கு ஓராண்டிற்கு முன் - 1974இல் நடைபெற்ற உலக மக்கள் தொகை மாநாட்டில், ‘வளர்ச்சியே சிறந்த கருத்தடைச் சாதனம்’என்று முழங்கியது.

இந்தியாவின் இளவரசர்போல் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த சஞ்சய் காந்தியின் கொடிய கெடுபிடியால் 70 இலட்சம் பேருக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்தவர்கள் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில், கருத்தடைச் சாதனங்களும், முறைகளும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, மக்கள் தொகை கிட்டத்தட்ட சமநிலையை எட்டிவிட்டது. இதற்கு, மக்களின் கல்வியும் வாழ்க்கைத்தரமும், மருத்துவ ஏந்துகளும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றதே காரணங்களாகும். இந்தியாவிலும் இத்தகைய நிலையை உருவாக்குவதன் வாயிலாகவே, கணவன்-மனைவி இணையருக்கு இரண்டு குழந்தைகள் என்ற நிலையை எய்திட முடியும். இந்தியாவில் கேரளமும், தமிழ்நாடும் இந்த இலக்கை அடைந்துள்ளன.

இந்திய அளவில் இந்த நிலை 2060இல் உண்டாகும் என்றும், அப்போது இந்திய மக்கள் தொகை 165 கோடி என்ற அளவில் நிலைப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று உலக மக்கள் தொகை 900 கோடி என்ற அளவில் நிலைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தியாவிலும் உலக அளவிலும் உலகமயம் என்ற கோட்பாட்டால், பணக்காரன் - ஏழை இடையிலான வேறுபாடு விரிவடைந்து கொண்டே செல்கிறது. அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகி வருகிறது. எனவே எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைவது ஐயத்திற்கிடமானதேயாகும்.

சீனாவில் மக்கள்தொகைக் கட்டுப்பாடு
சீனாவில் பெருகிவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு, கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குடும்பத்துக்கு ஒரு குழந்தை
மாவோ காலம் முதலே பேசப்பட்டுவந்த ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ திட்டம், 1970-ம் ஆண்டு முதல் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி தம்பதியர் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் ஒரு பெரும் தொகையை அபாராதமாகச் செலுத்த வேண்டும். மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா..?. அதற்கெல்லாம் அனுமதி இல்லை. டிசம்பர் 2013-ம் ஆண்டில் இந்தத் திட்டம் தளர்த்தப்பட்டு, இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் தீர்மானத்தை சீனா நிறைவேற்றியது.

சீனாவின் மக்கள்தொகை பரவல்
2016-ம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை 137 கோடிக்கும் அதிகமாக இருந்தது. இது, உலக மக்கள்தொகையான 740 கோடியில் 18.74 சதவிகிதம். அந்த நாட்டின் பிறப்புவிகிதம் 1,000 நபர்களுக்கு 12 ஆகவும், இறப்பு விகிதம் 1,000 நபர்களுக்கு 7 ஆகவும் இருக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 0.47 சதவிகிதம்.ஒரு சதுர கிலோமீட்டருக்கு  134.7 நபர்கள் சீனாவில் வசிக்கிறார்கள். இந்த மக்கள்தொகை அடர்த்தி, மக்கள்தொகை வளர்ச்சி வீதம் ஆகியவை பிற தெற்காசிய நாடுகளை ஒப்பிடும்போது சற்று குறைவானதே.

சீனா உணர்ந்த பாதிப்புகள்...
சீனா நடைமுறைப்படுத்திய, `ஒரு குழந்தை’ திட்டத்தால் கோடிக்கணக்கான குடும்பங்களில் வயதான பெற்றோர் இருவரையும் அவர்களின் ஒரே குழந்தை கவனிக்கவேண்டிய நிலை உருவானது. இந்த நிலைமைக்கான தீர்வாக அந்த நாட்டின் ஹெனான் (Henan) மாகாணம் ஒரு தீர்மானம் இயற்றவேண்டி வந்தது. அதன்படி, அறுபது வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் இருந்தாலோ அல்லது பெற்றோர் மருத்துவமனையில் இருந்தாலோ அவர்களை கவனித்துக்கொள்ள சம்பளத்துடன்கூடிய மேலதிக விடுமுறை, ஆண்டுக்கு 20 நாள்கள் வழங்கப்படுகிறது.

இதேபோல் நகரமயமாதலைக் குறைக்கும் நோக்கத்துடன் கொண்டுவந்த திட்டம் ஆறு கோடிக் குழந்தைகளை தனிமையில் தவிக்கவிட்டுள்ளது. கிராமங்களில் இருந்து நகரங்களுக்குச் சென்று வேலை செய்யும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்ல முடியாது. அவர்களின் குழந்தைகளுக்கு நகரப் பள்ளிகளில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று, தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு, அவர்களின் நிலை என்னவென்றே அறியாமல் வேலை செய்கிறார்கள் பெற்றோர்.

வெற்றி பெறப் போகிறதா சீனா?
மக்கள்தொகை வளர்ச்சி வீதம் குறைவதால், 2024-ம் ஆண்டுக்குள் சீனா தனது முதல் இடத்தை இந்தியாவிடம் கொடுக்க நேரிடும். இது இந்தத் திட்டத்தின் வெற்றியைக் குறிக்கிறதா என்றால், அது விவாதத்துக்கு உட்படுத்தவேண்டிய ஒன்று. ஏனெனில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தக் கடுமையான திட்டங்கள் இல்லாத பல நாடுகளிலும் பிறப்புவிகிதம் குறைந்திருக்கிறது.

மக்கள் தொகை கோட்பாடு
தாமஸ் ராபர்ட் மால்தஸ் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை கோட்பாடு ((An Essay on the Principle of Population) ஒன்று வெளியிடப்பட்டது. இவர் தொழிற் புரட்சிக்குப்பின் மக்கள் தொகை வளர்ச்சியடைந்ததையும், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார, சமுதாய மாற்றங்களையும் கருத்தில் கொண்டு இக்கோட்பாட்டை வெளியிட்டார்.

இதன்படி, 


மக்கள்  தொகைப் பெருக்கம் நாட்டின் தலையாய பிரச்சனையாகவும், அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ஏழை - பணக்காரர் என பிரிவினை உண்டாக்கக் கூடியதாகவும் உள்ளது என தெளிவுப்படுத்தினார். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை, உடல் நலக்குறைவு போன்ற பிரச்சனைகள் எழக்கூடும் என வலியுறுத்தினார்.

உலக அளவில் 30 கோடி ஏக்கர் நிலம் விவசாயத்திற்குப் பயன்படுகிறது. மகசூல் அதிகரிப்பினால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த விவசாய நிலப்பகுதி சிறிது அதிகரித்துள்ளது. இந்த உலகம் 330 கோடி மக்களுக்கு மட்டுமே உணவு வழங்கலாமாம்!

மக்கள் தொகைக் கட்டுப்பாடு
உலக மக்கள் தொகையில் 2வது இடத்தில் இருக்கிறது இந்தியா. குழந்தைகள் கடவுள் தரும் வரம். இறைவன் தருவதை மறுப்பது நியாமில்லை. இந்தியாவுக்கு ஆண்டவன் அதிகம் அள்ளித்தந்தார். அதனால்தான் ஜனத்தொகையும் பெருகியது என்று சொல்ல முடியாது. பிறப்பை தடுக்க வழித் தெரியாததால்தான் பெருகியது என்பதுதான் உண்மை. மக்கள் தொகை பெருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம். சரி மக்கள் தொகை தினம் கொண்டாடுவதால், மக்கள் தொகை கணக்கெடுப்பதால் மக்கள் தொகை குறைந்து விடுமா? உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடைப்பிடிப்பது. மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் நேர், எதிர்மறை விளைவுகள் குறித்து அறியவேண்டும். 

மக்கள் தொகை கணக்கெடுப்பதின் மூலம் ஒவ்வொரு நாட்டின் மக்கள் எண்ணிக்கை தெரியவரும். அதன் மூலம் மக்களின் தேவைகளின் அளவை அறியலாம், அவற்றை நிறைவேற்ற வழிகளை, வாய்ப்புகளை கண்டறியலாம். எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையை கணிக்கலாம். அதற்காக திட்டமிடலாம். என பல வகைகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நமக்கு உதவும். அதனால்தான் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பழக்கம் தொடங்கியது. 

2027ம் ஆண்டில் சீனாவின் எண்ணிக்கையை இந்தியா கடந்து விடும் என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

மக்கள் தொகைக் கொள்கையின் தந்தையாக போற்றப்படும் தாமஸ் ராபர்ட் மால்தஸ்  ‘மக்கள் தொகை பெருகினால் எதிர்காலம் ஆபத்தானதாக மாறிவிடும்’ என்று உலகை எச்சரித்தவர். அதை உதாசீனப்படுத்தாமல் அரசும் மக்களும் நடைமுறைப்படுத்தவேண்டும்.

Tags : World Population United Nations fertility rate மக்கள் தொகைப் பெருக்கம் உலக மக்கள் தொகை இந்திய மக்கள் தொகை குழந்தை பிறப்பு பிறப்பு இறப்பு விகிதம் ஆண் பெண் விகிதம் population growth
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT