சிறப்புக் கட்டுரைகள்

தேவேந்திர குல வேளார்கள் பட்டியல் வெளியேற்ற தாமதத்திற்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா?

சி.பி.சரவணன்

தேவேந்திர குல வேளாளர் இன மக்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற சூழ்ச்சி நடந்து வருகிறது என்று பலர் பேசி வந்தாலும், நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் புறக்கணிப்பு அவர்கள் பட்டியல் வெளியேற்றத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது. 

சரி அது என்ன பட்டியல் வெளியேற்றம்…..

தேவேந்திர குல வேளார்கள் யார் ?

‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்ற பெயர் என்கிறது திவாகர நிகண்டு. 
‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு. 

சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக் கொண்டுள்ளன. இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி போன்ற பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர். மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் தான் வாழ்ந்து வருகின்றனர். இவை போக, பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. 

இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்கள் தமிழ்நாட்டில் எந்தப் பிரிவிலும் இல்லை. இத்தனைக்கும் இப்பெயர்கள் இன்றைக்கும் பள்ளர்கள் இடையே பழக்கத்தில் இருப்பவை. இவர்கள் இந்திரனை கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர்.

தேவேந்திர குல வேளார்கள் பட்டியலில் சேர்ப்பு

ஜான் ஹென்றி ஹட்டன் (John Henry Hutton) மானுடவியலாளர் மற்றும் இந்திய மக்கள் பணியில் (Indian Civil Service) சேர்ந்தார். இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆணையர் ஜே.எச். ஹட்டன்  1931-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிக்கிறார். அப்போதெல்லாம் இம்மக்கள் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் கிடைக்கின்றன. 9 வரையறைகளை வைத்துத் தீண்டத்தகாத சாதிகளைப் பட்டியலிட்டார். இந்தியச் சட்டம் 1935-ல் பட்டியல் சாதியினர் என்ற சொல் உருவானது. அதன்பின், இந்திய அரசு (பட்டியல் ஜாதிகள்) ஆணை, 1936 –இல் (GOI (SC) ORDER 1936 dated 06.06.1936.) இம்மக்கள் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அதாவது 6, ஜூன் 1936-க்குப் பின்னரே இம்மக்கள் பட்டியல் சாதியில் சேர்க்கப்படுகிறார்கள், அதற்கு முன் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தேவேந்திர வேளாளர்களாக இருந்திருக்கிறார்கள்.

அக்காலத்தில் ஒரு சமூகத்தை SC  பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு 9 வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:
1.         தீண்டாமையை அனுபவிப்பவர்கள்
2.         கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்
3.         பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
4.         மாட்டுக் கறியை உண்பவர்கள்
5.         பசுவை வணங்காதவர்கள்
6.         தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
பல சாதிகள் அன்றே பட்டியல் வேண்டாம் என்று வெளியேறியிருக்கிறார்கள். அன்று சரியான தலைமையின்றி வாய்ப்பை தவறவிட்டனர் இம்மக்கள்.

பட்டியலில் சேர்த்தது சரியா?

நில உடைமைச் சமூகமாக தான் இருந்திருக்கிறார்கள்.

தீண்டாமைக்கு அளவு கோளாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுவதாகக் கருதப்படும் தொழில்களைப் பள்ளர்கள் செய்வதில்லை. இந்த நாள் வரையிலும் வேளாண்மையே பள்ளர்களின் தொழிலாக உள்ளது. பள்ளர்கள் மாட்டுக்கறி உண்பதில்லை. ஏனேனில் தங்களின் குலத் தொழிலான வேளாண்மைக்கு உதவுவதால் மாடுகளைத் தெய்வமாக மதிக்கின்றனர் பள்ளர்கள் .

தமிழ்நாட்டின் பழம்பெரும் கோயில்களான மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, திருச்செந்தூர் முருகன் கோயில்கள், கோவை பேரூர் பட்டிஸ்வரர், நெல்லையப்பர், சங்கரன் கோயில் மற்றும் கழுகுமலை உள்ளிட்ட பல கோயில்களில் பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையிலும் முதல் மரியாதையும், பள்ளர்கள் சார்ந்த பல விழாக்களும் நடைபெறுகின்றன, இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோயில்களில் அர்ச்சகர்களாக உள்ள பிராமணர்களே!

1993-ல் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்துக்கும் பள்ளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அன்றைக்கு மட்டும்மல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோயிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும் மறுநாள் தெப்பத்திருவிழாவிலும் மதுரை அனுப்பானடி ஊர்க்குடும்பர்களுக்கே முதல் மரியாதை செய்யபடுகிறது.

பட்டியல் வெளியேற்ற முன்னெடுப்புகள்?

ஆய்வுத் தளத்தில் பாட்டாளி முழக்கம் இதழின் ஆசிரியர் மறைந்த பேராசிரியர் பெ.தங்கராசு என்ற அறிஞரே பட்டியல் வெளியேற்றக் கருத்தியலை உருவாக்கி "எஸ்.சி பட்டியலும் தேவேந்திர குல வேளாளர்களும்" என்ற குறுநூலாக வெளியிட்டு இக்கருத்தியலை விதைத்தார். ‘‘நிறைய உட்பிரிவுகளை உள்ளடக்கிய இந்த ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்ற பெயரையே, 1974-ல் நான்தான் முதன்முதலில் அறிவித்தேன் என்கிறார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்.

03.09.2003-இல் மள்ளர் மீட்புக் களம் தொடங்கியபோதே அதன் கொள்கைகளில் ஒன்றாக பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை இடம்பெறச் செய்தார் செந்தில் மள்ளர்.

தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை நிறுவனர் தங்கராஜ் அவர்கள் கடந்த 05 டிசம்பர், 2010-இல் அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அவர்களின் ஆதரவைப் பெற்றார். இதில் முக்கிய பேச்சாளராக ஆடிட்டர் குருமூர்த்தியும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அதன்பின் 06-08-2015-இல் மதுரையில் நடைபெற்ற தேவேந்திரகுல வேளாளர்களின் மாபெரும் பிரதிநிதிகள் மாநாட்டில் அமித் ஷா கலந்து கொண்டு பசுவை வணங்கும் என் சகோதர்கள் என்றும் தேவேந்திரகுல வேளாளர்கள் பெயர் மாற்றத்திற்கும், பட்டியல் வெளியேற்ற பிரகடத்திற்கும் ஒப்புதல் அளித்தார்.

கடந்த ஜனவரி 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடி, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் என்னை வந்து பார்த்தார்கள். அந்த மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சிகளை என்னிடம் எடுத்துச் சொன்னார்கள். அவர்களுக்கு நியாயம் வேண்டுமென்று என்னிடம் கேட்டார்கள். அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு எஸ்.சி/ எஸ்.டி ஆணையத்திடமும், மாநில அரசிடமும் கேட்டுக்கொண்டேன். செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிற ஏற்றத் தாழ்வுகள் நீங்க வேண்டும் என்றார்.

பட்டியல் வெளியேற்ற சட்ட வழிமுறைகள் 

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் -1950 சரத்து (article ) -341 படி, கீழ்க்கண்டவாறு கூறுகிறது...

பட்டியலில்_கண்ட_சாதிகள்' 341.[1] . மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சி நிலவரை எதனைப்பொறுத்தும், அது ஒரு மாநிலமாக இருக்குமிடத்து அதன் ஆளுநரை கலந்தாய்வு செய்த பின்பு, அந்த மாநிலம் அல்லது நேர்வுக்கேற்ப, ஒன்றியத்து ஆட்சி நிலவரை தொடர்பாக இந்த அரசமைப்பினை பொறுத்தவரை பட்டியலில் கண்ட சாதிகள் என்று கொள்ளப்பட வேண்டிய சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடிகள் எவையென்றும் , சாதிகளில், இனங்களில் அல்லது பழங்குடிகளில் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள், எவையென்றும் குடியரசு தலைவர், பொது அறிவிக்கை வாயிலாக குறித்துரைக்கலாம்.

341.[2]. நாடாளுமன்ற சட்டத்தினால், சாதி, இனம் அல்லது பழங்குடி எதனையும் அல்லது சாதியில், இனத்தில் அல்லது பழங்குடியில் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள் எவற்றையும், [1]-ம் கூறின் படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒன்றில் குறித்துரைக்கப்பட்ட பட்டியலில் கண்ட சாதிகளின் வரிசைத்தொகுப்பில் சேர்க்கலாம் [அல்லது] நீக்கலாம். ஆனால், மேலே கண்டவாறன்றி மேற்சொன்ன கூறின் படி பிறப்பிக்கப்பட்ட பிந்தைய அறிவிக்கைப்படி ஓர் அறிவிக்கையானது பிந்தைய அறிவிக்கை எதனாலும் மாறுதல் செய்யப்படலாகாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது’.

பெயர் மாற்றங்கள்

கள்ளர், மறவர், அகமுடையார் என்ற சாதிகள்  முக்குலத்தோர் எனவும், சாம்பான், பறையர் என்ற சாதிகள் ஆதிதிராவிடர் எனவும் பகட, சக்கிலியர் என்ற சாதிகள் அருந்ததியர் எனவும், சாணார் என்ற சாதி நாடார் எனவும் ஆசாரி என்ற பல உட்பிரிவுசாதிகள் விஸ்வகர்மா எனவும் ஆயர், இடையர், கோனார் என்ற சாதிகள் யாதவர் எனவும் வலையர் என்ற சாதி முத்தரையர் எனவும் சின்னமேளம் என்ற சாதி இசைவேளாளர் எனவும் பள்ளி என்ற சாதி வன்னியர் என பெயர் மாற்றப்பட்டது. 

மானுடவியல் ஆதாரங்கள்

மேலே கூறப்பட்ட வரையறைகளுடன் ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதி 1909-இல் வெளிவந்த "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" என்ற புத்தகத்தின் சாதி பற்றிய மேற்கோள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்புத்தகத்தில் பள்ளர்கள் குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், வாதிரியார், பட்டக்காரர், மண்ணாடி போன்ற தொழில்சார்ந்த பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுவதை பக்கம் 486-ல் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகத்துக்கு உதவியவர்கள் கே.ரங்காச்சாரி, இனவியல் மேற்பார்வையாளர் எல்.கே அனந்த கிருஷ்ண அய்யர், என்.சுப்ரமண்ய அய்யர் அறிவுகளே இப்புத்தகம். இன்றைய பக்தவச்சல பாரதி போன்றார் ஒருசார்பாக இச்சமூக மக்களை இழிவாகவே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் நிலைபாடு

இந்த கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்பாக, ஆய்வு செய்ய கடந்த பிப்ரவரி, 2019-இல் ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எழிலகத்தில், ஹன்ஸ்ராஜ் வர்மா கமிட்டி இரண்டாவது முறையாக அக்டோபர் 16-ஆம் தேதி மீண்டும் கூடியது.

கடந்த வருடம் அக்டாபர் மாதமே, மானுடவியல் அறிக்கை வந்தவுடன் அதை மத்திய அரசுக்கு அனுப்பாமல், காலம் தாழ்த்தவே இக்கமிட்டியை நியமித்ததாகக் கூறி இடைத் தேர்தலை இம்மக்கள் புறக்கணித்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போது மட்டுமே இது தொடர்பான நடவடிக்கைகளை கண் துடைப்புக்காக மட்டுமே மாநில அரசு செய்வதாக அறிய முடிகிறது. பிரதமரோ, அமித் ஷாவோ நேரிடையாக தலையிடும் வரை கிடப்பிலேயே இருக்குமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT