சிறப்புக் கட்டுரைகள்

ஒய் எஸ் ஆர் மவுசு மகனுக்கு உண்டா? முதல்வராக சாதிப்பாரா ஜெகன் மோகன் ரெட்டி!

28th May 2019 04:14 PM | RKV

ADVERTISEMENT

 

ஒய் எஸ் ஆர் மவுசு!

ஒய் எஸ் ஆர்... இந்தப் பெயருக்கு ஆந்திராவில் என்றுமே ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. அவர் மறைந்து சரியாகப் 10 ஆண்டுகள் கடந்து விட்டன.

அவரது மறைவின் பின் அவரது இடத்தை நிரப்ப வந்திருக்கிறார் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. தந்தை இறந்ததால் கிடைத்த அனுதாப ஓட்டுக்கள் என இம்முறை ஜெகன் மோகனை யாரும் ஒரு வார்த்தை சொல்லி விட முடியாது. ஏனெனில் இம்முறை ஜெகனுக்கு கிடைத்திருப்பது அபார வெற்றி. சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியைத் தூக்கியெறியத் தயாரான மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் ஜெகன் பக்கம் திரும்பியிருக்கிறது. காரணம் ஒய் எஸ் ஆர் தந்த நல்லாட்சியாக இருக்கலாம். அவரது ஆட்சிக்காலத்தில் ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களின் மீதான நம்பிக்கையாக இருக்கலாம். ஜெயித்த பின் என் டி டி வியின் ராஜ்தீப் சர்தேசாய்க்கு ஜெகன் கொடுத்த முதல் நேர்காணலில் அவர் மிக உறுதியாக ஊழல் இல்லாத ஆட்சியைத் தன்னால் சாத்தியப்படுத்த முடியும் என்று கூறி இருக்கிறார்.

ADVERTISEMENT

அப்படிச் சொல்கிறவர்  மீதே அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றம் சுமத்தி சிறையில் தூக்கி வைத்தது சந்திரபாபு அரசு. 19 மாதங்கள் சிறைவாசத்தின் பின் வெளியில் வந்தார் ஜெகன் மோகன். அதன் பின் மீண்டும் தொடங்கியது தந்தை ஒய் எஸ் ஆர் வழியில் பாத யாத்ரா.

‘பாத யாத்ரா’ மறைந்த என் அப்பாவைப் பின்பற்றி...

தொடர்ந்து 14 மாதங்கள், 3600 கிலோ மீட்டர்கள், 134 சட்டமன்றத் தொகுதிகள், 341 நாட்கள், யாத்ராவின் ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது நாளிலும் ஒரு பொதுமக்கள் சந்திப்பு. இப்படி வருடத்தின் ஒவ்வொரு நாளிலுமே மக்களை நெருங்கி, நேரில் சென்று சந்திக்கும் போது கடந்த ஆட்சியின் அராஜகங்களை நேரடியாகக் காண முடிந்தது. சந்திரபாபு நாயுடு ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள் என்பதை ஒவ்வொருவர் முகத்திலும் நேரடியாக நான் கண்டேன். 175 க்கு குறைந்த பட்சம் 23 தொகுதிகளில் கூட ஜெயிக்க முடியவில்லை என்றால் இந்த தோல்வியைப் பற்றி நாயுடு அனுமானித்திருக்க மாட்டார் என்று நம்பமுடியவில்லை. நிச்சயம் அவருக்குத் தெரிந்திருக்கும் தனது கட்சி தோற்றுப் போகும் என்று. அவர் தேசிய அளவிலான கூட்டணிகளை நாடியே தேர்தல் முடிவுகள் வருமுன்பாக டெல்லிக்குச் சென்று வெவ்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான தலைவர்களைச் சந்தித்தது.

ஜெயித்த குஷியில் பேசவில்லை, ஜெயித்த களைப்பில் தேசிய ஊடகங்களுக்கு ஒவ்வொன்றாகப் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார் ஒய் எஸ் ஆர் ஜெகன். 

அடுத்த ஆந்திர முதல்வர்...

ஜெகனின் அரசியல் பயணம் 2004 ஆம் ஆண்டில் தன் தந்தைக்காக பிரச்சாரம் மேற்கொண்டதில் இருந்தே தொடங்கி விட்ட போதும், அப்பா இருக்கும் வரை ஜெகனின் அரசியல் பிரவேஷம் ஆழ்ந்த நீரோடையில் மிதக்கும் சிறு தக்கை போன்று எவ்வித பாதிப்புகளும் இன்றி சுமுகமாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டு  வென்று எம்பி ஆனார். 

2009, செப்டம்பர் 2 வரை அது அப்படியே தான் சென்று கொண்டிருந்தது.

அன்றைய தினம் ஆந்திர மக்களின் அரசியல் வரலாறு திருப்பி எழுதப்பட்ட தினம் என்று இன்று சொன்னால் நிச்சயம் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

அன்றைய ஆந்திர முதல்வராக இருந்த ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் அவரும் அவருடன் பயணித்தவர்களும் உருத்தெரியாமல் மறைய. விக்கித்து நின்றார்கள் ஒய் எஸ் ஆர் ஆதரவாளர்கள். ஒய் எஸ் ஆர் முதல்வராக இருக்கும் போது விபத்தில் மறைந்ததால் அவரை அடுத்து அவரது மகனை முதல்வராக்கும் அவசரம் ஒய் எஸ் ஆர் ஆதரவாளர்களிடம் மிகுதியாகக் காணப்பட்டது. ஆனால், இதை காங்கிரஸ் ஹை கமாண்ட் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் ரோஸய்யாவை முதல்வர் ஆக்கினார்கள். ஜெகன் இதை எதிர்க்கவில்லை. ஆயினும் ஜெகன் காங்கிரஸில் இருந்து பிரிந்து தனியாகக் கட்சி தொடங்க இந்த முடிவையே காரணமாக பலர் கருதினர்.

காங்கிரஸில் இருந்து பிரிந்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உதயமாகக் காரணமாக ஜெகன் தெரிவிப்பது...

தன் தந்தையின் மறைவை ஒட்டி ஆந்திரா முழுவதுமாக சுமார் 800 பேர் தற்கொலை செய்து கொண்டும், உடல் மற்றும் மனம் நலிவடைந்தும் மரணித்த செய்தியை அறிந்த போது, நான் என் தந்தை இறந்த இடத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் என் தந்தையின் நினைவாக மரணித்த ஒவ்வொருவர் வீட்டிற்கும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளிப்பதாக அறிவித்திருந்தேன். அதற்காக என் தந்தை வழியில் யாத்திரை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்தேன். இது முற்றிலும் எமோஷனலாக நான் எடுத்த முடிவு. என் தந்தையின் மீது நான் கொண்ட அளப்பரிய பாசத்தின் வெளிப்பாடு இது. அவரது மறைவு காரணமாக உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பமும் என்னுடையதே, அவர்களை நான் நேரில் சந்திப்பதாக வாக்களித்ததில் எந்தவித அரசியல் நோக்கங்களும், காரணங்களும் முற்றிலுமாக இல்லை. ஆனால், இதைப் புரிந்து கொள்ளாத ஆந்திர காங்கிரஸார் விஷயத்தை சோனியாவிடம் திரித்துச் சொல்ல, அவர் எனது யாத்திரையை இடையில் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார். நானும் கட்சியின் ஹை கமாண்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு யாத்திரைக்கான விளக்கம் அளித்து ஒப்புதல் பெற நேரம் கேட்டேன். 6 மாதங்கள் காத்திருந்தேன். ஆனால், அவர்கள் ஒப்புதல் அளிக்காததோடு, என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கவும் இல்லை. இது என்னையும், என் தந்தையையும் அவமதிப்பது போல் இருந்தது. அதனால் மட்டுமே காங்கிரஸில் இருந்து பிரிவதாக முடிவெடுத்தேனே தவிர, என் தந்தை மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் மேலிடம் என்னை முதல்வராக்கவில்லை என்ற வருத்தத்தினால் இல்லை. - என்கிறார் ஜெகன்.

ஜெகன் கட்சி தொடங்கியது 2010 ஆம் ஆண்டில். 

மனிதர்களுக்கான திரைகதையை கடவுள் எழுதிக் கொண்டிருக்கும் போது அவரை யாரால் ஏமாற்ற முடியும். நாயுடு கடந்த தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் இருந்து 23 சட்டமன்ற உறுப்பினர்களை எங்களிடமிருந்து பறித்து அவர்களைக் கட்சி மாறச் செய்தார். 2014 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்ற வகையில் எங்களிடம் 67 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களில் 23 எம் எல் ஏக்களை பதவி விலகச் சொல்லாமலும், பணத்தைக் கொட்டிக் கொடுத்தும், கேபினட் மந்திரி பதவிகள் அளித்தும் 23 எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி கட்சி மாறச் செய்தார் நாயுடு. இதே விதமாக எங்களிடம் ஒருந்த 9 எம் பிக்களில் 3 எம்பிக்களையும் விலைக்கு வாங்கினார். அவர்கள் விலை போனார்கள். இது இந்திய அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை எதிர்த்து அப்போது எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாயுடுவின் ஆட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டிருந்தது. நான் முதலில் சொன்னதைப்போல இவை அத்தனையையும் அதிகாரத் திமிரில் செய்தார்கள். ஆனால், மனிதர்களுக்கான திரைக்கதையை கடவுள் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிட்டு  இப்படிச் செய்தால் அவர் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா? இப்போது பாருங்கள் இங்கே தேர்தல் முடிவுகள் வெளிவந்திருப்பது சரியாக மே 23 ஆம் தேதி, நாயுடுவின் கட்சி வென்றிருப்பது வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே. ஒரு சீட் கூடுதலோ, குறைவோ இல்லை. பாராளுமன்றத்திலும் கூட அவர்கள் கடந்த முறை எங்களிடம் இருந்து எத்தனை எம்பிக்களை விலை பேசி கட்சி மாறச் செய்தார்களோ அதே 3 எம்பி சீட்டுக்களை மட்டுமே ஜெயித்திருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் அவர்களின் வெற்றி விகிதம் கூட 4000, 6000, 8000 என்ற விகிதத்தில் தான் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள் அநீதி தோற்று நீதி வென்றிருக்கிறது என்பதை இப்போதாவது ஒப்புக் கொண்டு தானே ஆக வேண்டும்.

இதன் மூலம் கடவுள் நாயுடுவுக்குச் சொல்லி இருப்பது என்ன?

நான் உன் தவறுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உன்னைக் கணித்துக் கொண்டிருக்கிறேன். அதனடிப்படையில் உன்னை எடைபோட்டு அதற்கான விலையைக் கொடுத்திருக்கிறேன் என்று தானே இந்தத் தோல்வியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது என்னிடம் முன்வைக்கப்படும் கேள்விகளில் ஒன்றாக அமராவதியும் மாறி உள்ளது.

அமராவதியைப் பொறுத்தவரை நான் அதை தலைநகராக ஏற்கிறேனா என்பதைத் தாண்டி அதில் நடந்துள்ள முறைகேடுகளைத் தோண்டி எடுத்து வெளிக்கொணர விரும்புகிறேன்.

அங்கே புதிய தலைநகரம் நிர்மாணிக்கப்படுவதைக் காரணம் காட்டி சந்திரபாபு நாயுடுவும், அவரது ஆதரவாளர்களும், அவரது அமைச்சரவையில் இருந்த மந்திரிகளும், உறவினர்களும் ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். பினாமிகள் பெயரில் சந்திரபாபு அங்கு குவித்து வைத்திருக்கும் நிலங்கள் ஏராளம். அதைப்பற்றிய உண்மைகளை நான் வெளிக்கொண்டு வருவேன். அதைத் தவிர முறைகேடான மேற்கொள்ளப்பட்டுள்ள ஒவ்வொரு அரசுத் திட்டங்களும் மீண்டும் டெண்டர் விடப்பட்டு முறையாக திட்டப்பணிகள் நிறைவேற ஆவண செய்வேன். என் திறமைகளைக் காட்டுவதற்காக அல்ல, மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதற்காக நான் இதைச் செய்யவிருக்கிறேன். எனக்கு இதைச் செய்ய 6 மாதங்கள் முதல் 1 வருடம் மட்டுமே போதும். நிச்சயம் ஊழலற்ற ஆந்திராவை என்னால் உருவாக்க முடியும் என்று தன்னை நேர்காணல் செய்த ராஜ்தீப்பிடம் சவாலாகவே மொழிந்தார் ஜெகன்.

ஊழலற்ற ஆந்திரா சாத்தியமா?

ஜெகனின் சவாலை கிண்டலாக எதிர்கொண்ட ராஜ்தீப், ஆந்திராவை ஊழலற்ற மாநிலமாக எப்படி மாற்றுவீர்கள்? இங்கு அரசியலில் அதிகப்பணம் விளையாடுவது எல்லோருக்கும் தெரியும். என்று கூறவே; அதை மறுத்த ஜெகன்.

இல்லை, நிச்சயமாக என்னால் ஊழலற்ற ஆந்திராவை உருவாக்க முடியும். சரியாக ஒருவருடம் தாருங்கள். அடுத்த ஆண்டு இதே நாளில் நீங்கள் என் சாதனைக்காக என்னைத் தோளில் தட்டி, வெல்டன் ஜெகன் என்று பாராட்டுவீர்கள். என்கிறார் மிக உறுதியாக.

சாதிப்பாரா ஜெகன் என்று அடுத்த ஆண்டு இதே நேரத்தில் ராஜ்தீப் தான் உறுதி செய்ய வேண்டும்.

ஊழலற்ற ஆந்திராவை உருவாக்க ஜெகன் கையில் எடுத்திருக்கும் அஸ்திரம்!

ஆந்திராவை ஊழலற்ற மாநிலமாக மாற்ற ஜெகன் தன் கையில் வைத்திருக்கும் மந்திரம் என்னவென்றால், எந்தெந்த டெண்டர்களில் எல்லாம் ஊழல் நடந்திருப்பதாக மக்களும், ஊடகங்களும் சந்தேகிக்கின்றனவோ, அந்த டெண்டர்களில் எல்லாம் சமரசம் செய்து கொள்ளாமல் மீண்டும் ரிவர்ஸ் டெண்டர்கள் விடப்பட்டு நியாயமானவர்கள் மூலமாக அரசின் நலத்திட்டங்களை நிறைவேற்றவிருப்பதாகக் கூறுகிறார் இந்த இளைஞர். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அவர், மக்களைப் பற்றி யோசிக்காமல், கமிஷன் வாங்கிக் கொண்டு பலவேறு டெண்டர்களில் முறைகேடு நடைபெற அனுமதி அளித்துக் கொண்டு இருந்தார். என்னுடைய ஆட்சியில் அதெல்லாம் நடக்க நான் அனுமதிக்கப்போவதே இல்லை. எல்லாவற்றிலும் நான் நியாயமானவர்களுக்கான பாதையைத் திறந்து விடப்போகிறேன். யார் எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைவாக கோட் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் அரசு காண்ட்ராக்டுகள் இனி கிடைக்க முடியும். பணம் தின்று கொழுத்துப் போன ஊழல்வாதிகளுக்கு அல்ல. என்கிறார் ஜெகன்.

ஒரே வருடத்தில் ஆந்திராவை  இந்தியாவின் மாடல் மாநிலமாக்குவேன் எனும் சவால்!

இனி ஒரே வருடம் தான். ஆந்திரா இந்தியாவின் பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு மாடல் மாநிலமாக விளங்கத்தக்க வண்ணம் முற்றிலுமாக மாற்றப்பட்டு கட்டமைக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார் ஜெகன்.

நடக்குமா? இதற்கு மத்திய அரசின் உதவியும் எங்களுக்குத் தேவை எனும் ஜெகன், மாநில நலன்களுக்காக நாங்கள் மத்தியில் அமையவிருக்கும் மோடி அரசுடன் சினேகபாவத்துடனான உறவையே வளர்த்துக் கொள்ளவிருக்கிறோமே தவிர அவர்களுடன் எங்களுக்கு எந்தப் பகையுணர்வும் இல்லை என்றதோடு, நாங்கள் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் ஸ்பெஷல் கேட்டகிரி அந்தஸ்துக்காக மத்திய அரசை நிர்பந்தித்துக் கொண்டே தான் இருப்போம் என்றும் தெரிவித்தார்.

பாஜகவின் விஸ்வரூப வெற்றியை நீங்கள் விரும்பினீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்;

உண்மையில் பாஜக பெரும்பான்மை பெறக்கூடாது, தொங்கு பாராளுமன்றம் அமைய வேண்டும் என்று தான் நான் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். ஏனெனில், இப்போது அவர்களுக்கு எங்களது தயவு தேவை இல்லை. எனவே எங்களால் எதையும் மத்திய அரசிடம் வற்புறுத்திப் பெற இயலாத நிலையாகி விட்டது. ஒருவேளை எங்களது ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் நான் ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து கோரி வற்புறுத்திப் பெற்றிருப்பேன். இது அவர்கள் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அளிப்பதாகச் சொன்ன வாக்குறுதி தானே. அதை அவர்கள் இன்னும் நிறைவேற்றாமலிருப்பது யாருடைய தவறு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெற்றிக்குப் பின் மோடி, ஜெகன் சந்திப்பு!

தொடர்ந்து தமது வெற்றிக்குப் பின் கடந்த 26.5.19 அன்று டெல்லி சென்று மோடியைச் சந்தித்துத் திரும்பிய ஜெகன் மோகன் ரெட்டி, மேலே குறிப்பிட்ட விஷயங்களைப்பற்றி அவரிடமும் தான் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைமையில் ஆந்திராவில் அமையவிருக்கும் புதிய ஆட்சிக்கு பாஜகவின் ஆதரவு எப்போதும் உண்டு என அவர் தெரிவித்ததாகவும் செய்தியாளர்களிடம் மோடியுடனான சந்திப்பு குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

தவிர, ஆந்திராவில் மது விலக்கைச் சாத்தியப்படுத்தவிருப்பதாகவும் ஜெகன் தற்போது வாக்குறுதி அளித்துள்ளார். 

ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமாக ஆந்திராவில் சாக்‌ஷி என்ற பிராந்திய மொழி பத்திரிகை ஒன்றும் சாக்‌ஷி டிவி என்ற பெயரில் செய்திச் சேனல் நிறுவனம் ஒன்றும் உண்டு. அதுமட்டுமன்றி பாரதி சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை விளம்பரதாரராகவும் ஜெகன் மோகனின் நிறுவனம் விளங்குகிறது.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸுக்குப் பெயர் விளக்கம்!

பலரும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்றதும் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் நினைவாக கட்சிக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தப்பர்த்தம் செய்து கொள்கிறார்கள். ஆனால், YSR Congress என்பதற்கான விளக்கம் Yuvajana Sramika Raithu Congress Party என்பதே. அதாவது இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான காங்கிரஸ் கட்சி என்று பொருள்படும் வகையில் கட்சிக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தகவல்.

ஜெகன்மோகனின் வெற்றிக்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்ட  நையாண்டித்தனமான வாழ்த்து...

 

 

தற்போது 48 வயதாகும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர அரசியலில் மிக நீண்ட எதிர்காலம் காத்திருக்கிறது. இந்த இளைஞர் அமையவிருக்கும் தமது புதிய அரசின் மூலம் இன்னும் என்னவெல்லாம் சாதிக்கவிருக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT