திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

வெயிலை நேசிப்போம் !

By -ராஜ்மோகன்| Published: 23rd May 2019 01:30 PM

வெயிலை நேசிப்போம் என்று இந்த 107 டிகிரி வெயிலில் சொன்னால் ஒன்று சொல்பவரை பைத்தியக்காரன் என்று சொல்லத் தோன்றும். இல்லை ஒரு கம்பை எடுத்துக் கொண்டு உதைக்க தோன்றும். 

ஆனால் உண்மை என்னவெனில் இயற்கையின் எந்தவொரு ஆற்றலாலும் புவியில் வாழும் உயிரினங்களுக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படுவதில்லை. மாறாக உயிர்கள் இயற்கையின் உண்மை தத்துவத்தினை அறிந்து கொள்ளாததினாலும்  போற்றி பாதுகாக்க வேண்டிய இயற்கையை தூற்றி துச்சமாக மதித்த காரணங்களினால் மட்டுமே இயற்கை நமக்கு துன்பமாக மாறுகிறது.

வெயிலையே எடுத்துக் கொள்ளுங்களேன். சூரிய கதிர்கள்தான் வெயில் என்று அழைக்கப்படுகிறது. வெயிலை நிந்திக்கும் நாம் சூரியனை தெய்வமாக வணங்குகிறோம். ஏன் யோக அப்பியாசத்தில் கூட முதல் ஆசனம் சூரிய நமஸ்காரத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

நவக்கிரக வழிப்பாட்டில் முதல் கிரகத்திற்குரிய வழிப்பாடு சூரியனுக்கு உரியதுதான்.

உழவர்கள் அனைவரும் சூரியனையே கடவுளாக பாவித்து  கும்பிடும் திருவிழாதான் பொங்கல். சூரிய வழிபாடு உலகின் எல்லா பகுதிகளிலும் இருக்கிறது. வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

தமிழினம் போன்றே நீண்ட நெடிய வரலாறு கொண்ட எகிப்திய மரபில் அவர்களின் கடவுளான  அமுன் சூரியனில் குடியிருப்பதாக  நம்பிக்கை இன்றும் இருக்கிறது. கிரேக்க பாரம்பரியத்தில் அப்பலோ ஒளியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சூரியனின் சக்தியே பிரபஞ்சத்தை இயக்கிறது என்ற உண்மையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் கிரேக்கர்கள்.

ஆப்ரிக்க பழங்குடிகளில் ஒரு பகுதியினரான டைவி மக்களின் தெய்வம் அவண்டோ. இந்த அவண்டோவின் மகன் சூரியன் என்றும் மகள் சந்திரன் என்றும் வணங்குகின்றனர்.

மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் அஸ்டெக் கலாச்சாரத்தில் சூரியனையும் விண்வெளியில் உள்ள கிரகங்களையும் வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.

இதே போன்று ஐரோப்பிய ஆசிய  பிரதேசங்களிலும்  சூரியன்தான் பிரதான கடவுள். அவரின் படைப்பே பிற கிரகங்கள் என்று நம்பிக்கை இன்றும் வழிவழியாக தொடர்கிறது.

முகமுது நபிக்கு முன்பான இஸ்லாமிய அரேபியாவில் சூரியன் ஷாம் என்றும் ஷாம்ஷன் என்றும் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. 

கிறித்துவர்களுக்கு முந்தையை ஜுடாயிஸத்தில் சூரியன் படைப்பின் கடவுள். கிறித்துவ மதத்தில் குறிப்பிடப்படும் இயேசுவும் அவரின் பன்னிரெண்டு சீடர்களும் சூரியனையும் பன்னிரெண்டு கிரகங்களையும் குறிப்பதான நம்பிக்கைகளும் ஒரு சாராருக்கு இருக்கிறது.

புத்தர் வழி பாரம்பரியத்தில் சூரியன் சூரியபிரபா என்று வழிபாடு செய்யப்படுகிறது. புத்தமதம் உலகமெங்கும் பல இடங்களுக்கு பரவி நிற்கிறது. சீனர்கள் சூரியனை  ரிஹாங் ரிஹுவாங்  பூசா என்றழைக்கப்படுகிறது. சீனர்களின் இன்னொரு வகையில் பிரபஞ்சத்தில் பத்து சூரியன்கள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் சகோதரர்கள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

இப்படி உலகின் எந்த பகுதிகளை எடுத்துக் கொண்டாலும் எந்த  கண்டங்களை பார்த்தாலும் அங்கு ஏதோ ஒரு மூலையில் சூரியவழிபாடு நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

சூரிய குடும்பத்தின் தலைவனாக ஒட்டுமொத்த கிரகங்களின் இயக்கத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சூரியனின் சக்திதான் சகல ஜீவராசிகளின் உற்பத்திக்கும் ஆதாரமாக திகழ்கிறது. இத்தகைய சூரியன் மிதமிஞ்சிய வெப்பத்தை பூமியின் மீது உமிழும் காரணம் என்ன ?

யோசித்துப் பார்த்தீர்களெனில் மனிதன் பேராசையும் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளும்தாம். சூரியன் பிரபஞ்ச இயக்கம் தொடங்கும் போது எப்படி இருந்தததோ அதே போல தான் இன்றும் இருக்கிறது. ஆனால் பூமியில் படர்ந்திருந்த பசுமை வெளியை அதை உருவாக்க அடிப்படையாக இருக்கும் அடர்வனங்கள் முற்றிலும் அழிந்து வருகின்றன. 

மரங்களின் அழிவினால் பூமியின் மீதான் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பூமி எப்பொழுதும் குளிர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில் தூய்மையான சூரியசக்தி சுத்திகரிக்கப்படு பூமிக்குரிய ஆக்சிஜன் சக்தியாக மாற மரங்களின் எண்ணிக்கை மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகம் இருக்க வேண்டும். உலகெங்கிலும் ஒப்பிடும் போது இந்தியாவில் மரங்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

கனடாவில்  ஒரு நபருக்கு 9000 மரங்கள் இருக்கின்றன. பிரேசிலில் ஒரு நபருக்கு சுமார் 1500 மரங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் ஒரு நபருக்கு 716 மரங்களும், சீனாவில் ஒரு நபருக்கு 102 மரங்களும் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு நபருக்கு வெறும் 28 மரங்களே இருக்கின்றன என்கிறது சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு புள்ளி விவரம். இதன் மூலம் நாம் எத்தனை பலவீனமாக உள்ளோம் என்பதை உணரமுடியும்.

அடுத்து அதீத கட்டுமானங்களும் கான்கீரிட் தளங்களும் பூமிக்குள் சூரிய வெப்பத்தை ஊடுருவ விடாமல் பூமியின் மேல்பரப்பிலேயே காற்றோடு கலந்து கொள்ள செய்து எப்பொழுதும் தகித்துக் கொண்டே இருக்க வைக்கிறது

பெருகி வரும் தொழிற்சாலை மாசுகள் சூரிய ஒளியுடன் சேர்ந்து வெப்பத்தை அதிகரிக்கின்றன. போதாக்குறைக்கு இவை உருவாக்கும் வேதிப் பொருட்களின் வெளிப்பாடு பூமிக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் ஓசோன் படலத்தை பதம் பார்த்து வருகிறது

இப்படி இயற்கையான சூரிய கதிர் இயல்பாக நம்முடன் ஊடுரூவ விடாமல் அதன் வீரியத்தை அதிகரிக்கச் செய்து வெப்ப மண்டலத்தை நாமே   உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

தவறை நம்மிடம் வைத்து கொண்டு  குற்றத்தை இயற்கையிடம் போடுவது எவ்வகையில் நியாயம். 

சூரியன் தான் அறிவுக்கான சக்தி
சூரியன் தான் ஆற்றலுக்கான சக்தி
சூரிய வலுப்பெறும் ஒருவர் பிரபலமானவராகிறார் என்கிறது ஜோதிடம்

இத்தகையை மேன்மைமிகு சூரியனை நாம் நேசிப்பது தான் நாம் செய்ய வேண்டிய தர்மம்.

மாறாக சுட்டெரிக்கும் வெயிலை மட்டும் கருத்தில் கொண்டு சூரியனை நிந்திப்பது எவ்வகையில் நியாயம்

அறிவு மேம்பட ஆற்றல் மேம்பட வாழ்வில் உற்சாகம் பெருக இயற்கையின் ஆற்றலான சூரியனை போற்றுவோம். வெயிலை நேசிப்போம்.

நேசம் என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல் செயலில் இருக்கவேண்டும்.

இதனை உறுதி மொழியாக கொண்டு இயங்குவதின் மூலம் நமது நேசத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். நம் நேசிக்கும் ஒன்று நிச்சயம் நம்மை நேசிக்கும். வெயிலை நேசிப்பதின் மூலம் இயற்கையின் நேசத்தை பெறுவோம்

அதற்கு மரங்களுடன் தயாராவோம் !

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : sun heat god summer veyil வெயில் சூரியன் வெப்பம்

More from the section

தாழ்வாக தொங்கும்மின்கம்பிகள்கடலோர கிராமங்களில் திக்..திக்..!
கலகலத்துபோன கலையரங்கம்:  மன்னார்குடி பெருமைக்கு ஓர் கலக்கம் 
திறக்கப்படாத அங்காடி கட்டடம்: எம்.எல்.ஏ. கவனிப்பாரா?
தாமிரவருணி ஆற்றில் ஒரே நாளில்72 கி.மீ. தொலைவு தூய்மைப் பணி: 9,000 பேர் பங்கேற்பு
ரூ.24 கோடியில் புதுபொலிவு பெறும் சேலம் ரயில் நிலையம்!